எஸ்.ஏ.எஸ்.ஹபீசுல்லா, செய்தித் தொடர்பு துணைச் செயலாளர், தி.மு.க
“முழுக்க முழுக்க உண்மை. இதுநாள் வரையிலும், ‘தேர்தல் நடத்தை விதிகள் 1961, விதி 93 (2) (ஏ)-ன்படி, சிசிடிவி காட்சிகள் உட்பட தேர்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாகவோ, நீதிமன்றங்கள் மூலமாகவோ ஆணையத்திடமிருந்து பொதுமக்களால் கேட்டுப் பெற முடியும். ஆனால், சமீபத்தில் பாசிச பா.ஜ.க அரசு தேர்தல் நடத்தை விதி 93 (2) (ஏ) – வில், ஒரு சட்டத்திருத்தத்தைச் செய்துவிட்டது. இனி தேர்தல் தொடர்பான பல்வேறு ஆவணங்களை முன்புபோல் எளிமையாக கேட்டுப் பெற முடியாது. எனவே, பல மாநிலங்களிலும் பா.ஜ.க அராஜகமாக, அத்துமீறித் தேர்தலை நடத்திவருவது குறித்தான தகவல்கள் இனி வெளியுலகுக்குத் தெரிய வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. அரசியலமைப்பில் முக்கியப் பங்காற்றிவரும் தேர்தல் ஆணையம், இப்படி ஒரு திருத்தத்துக்குத் துணைபோனதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ‘தன்னாட்சி அமைப்பான தேர்தல் ஆணையம், பா.ஜ.க அரசின் அழுத்தத்துக்குப் பணிந்துள்ளது’ என்று எங்கள் தலைவர் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை!”
ஏ.என்.எஸ்.பிரசாத், மாநில செய்தித் தொடர்பாளர், பா.ஜ.க
“முதல்வரின் விமர்சனம் அரசியல் உள்நோக்கம்கொண்டது. தேர்தல் விதிகளில் திருத்தம் கொண்டுவரவேண்டியது காலத்தின் அவசியம். இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலம், விதியில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்கள் இப்போதும் ஆய்வுக்குக் கிடைக்கும். ‘சிசிடிவி காட்சிகளைப் பொதுமக்களுக்கு வழங்க முடியாது’ என ஏற்கெனவே தேர்தல் ஆணையம் கூறியிருந்ததுதான். அதாவது, வாக்குச்சாவடி மையத்திலுள்ள சிசிடிவி காட்சிகளை வெளியிட்டால், அது தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாகத் தேர்தல் ஆணையம் சொல்லியிருக்கிறது. இந்த நிலையில், தேர்தல் ஆணையம் தொடர்பான தற்போதைய சட்டத்திருத்தத்தின் மூலம், வாக்காளர்களின் ரகசியம் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. ஒவ்வொரு தேர்தலும் எவ்வளவு வெளிப்படையாக நடக்கிறது என்பதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இந்த நிலையில், தமிழகத்தில் தி.மு.க அரசுமீதான அதிருப்தியைத் திசைதிருப்பவே, பிரதமர் மோடி மீது அவதூறு பிரசாரங்களைக் கட்டவிழ்த்துவிடுகிறார் தமிழக முதல்வர்!”
from Vikatan Latest news https://ift.tt/J3oTjBO
0 Comments