இந்தியாவின் முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் 92 வயதில் வயோதிகம் சார்ந்த உடல்நலக்குறைவால் இயற்கை எய்தியிருக்கிறார். இந்நிலையில், அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் பலரும், 'சமகால ஊடகங்களை விட வரலாறு என்னை கருணையோடு நடத்தும்.' என அவர் கூறிய ஒரு மேற்கோளை குறிப்பிட்டே பதிவிட்டு வருகின்றனர். வைரலாகிக் கொண்ட அந்த மேற்கோளை மன்மோகன் சிங் எப்போது பேசினார் தெரியுமா?
2004 - 2014 வரை இரண்டு முறையாக முழுமையாக 10 ஆண்டுகளுக்கு மன்மோகன் சிங் இந்தியாவின் பிரதமராக இருந்தார். அவர் பிரதமராக பதவி வகித்த அந்த பத்தாண்டு காலக்கட்டத்தில் பல முறை பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தி அத்தனை விதமான கேள்விகளையும் எதிர்கொண்டிருக்கிறார். அப்படி 2014 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில்தான், 'சமகால ஊடகங்களை விட வரலாறு என்னை கருணையோடு நடத்தும்.' என்றும் பேசியிருந்தார்.
இந்திய நாட்டின் பிரதமராக மன்மோகன் சிங் கலந்துகொண்ட கடைசி பத்திரிகையாளர் சந்திப்பு அது. காங்கிரஸ் அரசின் மீது ஏகப்பட்ட ஊழல் புகார்கள் எழுந்திருந்த நிலையில், 'உங்களின் அமைச்சரவையை திறம்பட வழிநடத்தத் தவறிவிட்டீர்களோ..' எனும் பொருள் தொனிக்கும் வகையில் மன்மோகன் சிங்கிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அப்போதுதான் அவர், 'சமகால ஊடகங்களை விடவும் எதிர்க்கட்சிகளை விடவும் வரலாறு என்னிடம் கருணையோடு நடந்துகொள்ளும் என உறுதியாக நம்புகிறேன். கேபினட்டுக்குள் பேசப்படும் அத்தனை விஷயங்களையும் என்னால் இங்கே வெளிப்படுத்த முடியாது. தற்போதைய சூழலையும் கூட்டணிக் கட்சிகளின் நிர்பந்தங்களையும் கருத்தில் கொள்கையில் என்னால் முடிந்ததை சிறப்பாக செய்திருக்கிறேன். நான் செய்தவை என்ன செய்யாதவை என்ன என்பதை வரலாறே தீர்மானித்துக் கொள்ளும். 'பலவீனமான பிரதமர்' என்பதை நான் நம்பவில்லை.' என மன்மோகன் சிங் அப்போது பேசியிருந்தார்.
அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மன்மோகன் சிங் பேசியவைதான் இப்போது வைரலாகி வருகிறது.
from Vikatan Latest news https://ift.tt/nIDbtH0
0 Comments