ஸ்ரீவில்லிபுத்தூரில், காதலியின் கவனத்தை ஈர்ப்பதற்காக, நகை திருடி, அதை அடகு வைத்த பணத்தில் விலையுயர்ந்த டூவீலர் வாங்கிய இளைஞர் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட தாய் மற்றும் சித்தி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம் அப்போது நம்மிடம் பேசியவர்கள், "விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆண்டாள்புரம் பகுதியில் வசித்து வருபவர் முத்துலட்சுமி (வயது 70). இவரின் மகன் கணேசன் குமாஸ்தாவாக பணிபுரிந்து வருகிறார். தாயும்-மகனும் அடுத்தடுத்த வீட்டில் வசித்து வருகிறனர். இந்தநிலையில் கடந்த அக்டோபர் மாதத்தில், முத்துலட்சுமி தன் கழுத்தில் அணிந்திருந்த மொத்தம் 11 பவுன் எடை கொண்ட இரண்டு தங்க சங்கிலிகளை கழற்றி வீட்டில் உள்ள பீரோவில் பத்திரப்படுத்தியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, கடந்த 15-ந் தேதி மாட்டுப்பொங்கல் தினத்தன்று கழுத்தில் நகை அணிவதற்காக பீரோவை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த இரண்டு தங்கச்சங்கிலிகளும் மாயமாகியிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த முத்துலட்சுமி, நகை மாயமானது குறித்து தனது மகன் கணேசனுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து நகை திருட்டு விஷயம் குறித்து ஸ்ரீவில்லிப்புத்தூர் நகர் காவல் நிலைய போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் நகர் காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு நகை திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார் என போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

போலீஸின் தீவிர விசாரணையில் ஆண்டாள்புரம் பகுதி அருகே உள்ள மாயாண்டிபட்டி தெருவை சேர்ந்த காளிராஜ் (வயது 19) என்பவர்தான் முத்துலட்சுமியின் வீட்டில் நகை திருடியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, காளிராஜின் நடமாட்டத்தை கணாகாணித்த போலீஸார், அவனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, சில அதிர்ச்சிகர தகவல்கள் வெளிவந்தன. அதன்படி, சம்பவத்தன்று முத்துலட்சுமியின் வீட்டில் இல்லாததை நோட்டமிட்ட காளிராஜ், சுவர் ஏறிகுதித்தது உள்ளே நுழைந்துள்ளார். தொடர்ந்து, மின்சார மீட்டர்பெட்டி மீது வைக்கப்பட்டிருந்த முத்துலட்சுமியின் வீட்டுச்சாவியை எடுத்து வீட்டுக்குள் புகுந்துள்ளார். பின்பு பீரோவில் இருந்த 11 பவுன் எடையுள்ள இரண்டு தங்க செயின்களை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
திருடிய நகைகளை, அவரின் தாய் பத்மாவதி (34), சித்தி ஆனந்தவல்லி (29) ஆகியோரின் சம்மதத்துடன் இரண்டு தனித்தனி நிதி நிறுவனங்களில் அடகு வைத்து பணம் பெற்றுள்ளார். இந்தநிலையில், தான் ஒருதலைப்பட்சமாக காதலிக்கும் பெண்ணின் கவனத்தை ஈர்பதற்காக நகை அடகுவைத்த பணத்தில் விலையுயர்ந்த டூவீலரை காளிராஜ் வாங்கியுள்ளார்.

அதைவைத்து, காதலியை பின் தொடர்வதும், அவரின் கவனத்தை திசைத்திருப்பும் நடவடிக்கைகளில் காளிராஜ் ஈடுபட்டு வந்துள்ளார். இந்தநிலையில் தான் போலீஸிடம் காளிராஜ் சிக்கிக் கொண்டார். இதையடுத்து காளிராஜ் உள்பட அவரின் தாய் பத்மாவதி, சித்தி ஆனந்தவல்லி ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் மூவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்" என்றனர்.
from Vikatan Latest news https://ift.tt/t4PQCUc
0 Comments