வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜன.10-ம் தேதி `சொர்க்கவாசல்’ திறக்கப்பட்டு, 19-ம் தேதி வரை... அதாவது, தொடர்ந்து 10 நாள்களுக்குப் பக்தர்கள் அனுமதிக்கப்படவிருக்கின்றனர். இந்த 10 நாள்களும் `வைகுண்ட துவாரம்’ எனப்படும் சொர்க்கவாசல் திறந்தே இருக்கும்.
இந்த நிலையில், ``ஜனவரி 10, 11, 12-ம் தேதிகளுக்கான இலவச தரிசன டிக்கெட் ஜனவரி 9-ம் தேதியான வியாழனன்று அதிகாலை 5 மணிக்கு வழங்கப்படும்’’ என்று தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்காக 8 இடங்களில் 91 கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இன்று மதியம் முதலே கவுன்ட்டர்கள் முன்பாக பக்தர்கள் குவியத் தொடங்கினர். நேரம் செல்லச் செல்ல பக்தர்கள் அதிகளவில் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. விஷ்ணு நிவாஸம் பகுதியில் நடைபெற்ற இலவச டோக்கன் விநியோகத்தின்போது 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒரே நேரத்தில் முண்டியத்திருக்கின்றனர். இதனால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலரும் மயங்கி விழுந்திருக்கின்றனர்.
இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும், சிலரும் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களில் 2 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இப்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 பேர் என அதிர்ச்சிகர தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. உயிரிழப்புகள் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. இறந்தவர்களில் ஒருவர் தமிழகத்தின் சேலத்தைச் சேர்ந்த பெண் பக்தர் மல்லிகா எனவும் தெரியவந்திருக்கிறது. இந்த துயரச் சம்பவத்துக்கு ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்திருக்கிறார். மேலும், உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் திருப்பதியில் பெரும் சோகத்தைம், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
from Vikatan Latest news https://ift.tt/5GdyQEM
0 Comments