ஐந்து மாதங்களில் 10,000 புள்ளிகள் சரிவு... இந்தத் தவறுகளைத் தவிர்த்தால், இறக்கத்திலும் தப்பிக்கலாம்!

இறக்கப் பாதையிலேயே சந்தை தொடர்ந்து பயணிப்பது, பலருக்கும் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டின் செப்டம்பர் மாத இறுதியில் ஆரம்பித்த இந்த இறக்கம், சின்னச் சின்ன ஏற்றங்கள் தென்பட்டாலும், தொடர்ந்து கரடியின் பிடியிலேயே இருக்கிறது. கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் சென்செக்ஸில் 10,000 புள்ளிகள் காலியாகியிருக்கின்றன. இதற்கு, சர்வதேச மற்றும் உள்நாட்டுக் காரணங்கள் பற்பல இருக்கின்றன என்றாலும், ஒவ்வொருவரின் தனிப்பட்ட லாப, நஷ்டங்களுக்கு அவரவர் எடுக்கும் வர்த்தக மற்றும் முதலீட்டு முடிவுகளே காரணமாக இருக்கும் என்பதே உண்மை.

சமீபகாலங்களில், முதலீட்டாளர்கள்... குறிப்பாக, சில்லறை முதலீட்டாளர்கள் பெரும்பாலானோர் செய்த தவறு, சந்தையில் கவர்ச்சிகரமான விலை நகர்வைக் கொண்டிருந்த ஸ்மால்கேப், மைக்ரோகேப் பங்குகளிலும், ஐ.பி.ஓ-க்களிலும் முதலீடு களைக் குவித்ததுதான். புதிய முதலீட்டாளர்கள் அனைவருமே இந்தப் பிரிவு களில்தான் முதலீடு செய்திருக்கிறார்கள். கவர்ச்சிகரமாக இருக்கும் பிரிவுகளில், பங்குகளில் மட்டுமே முதலீட்டைக் குவிக்கும்போது, அளவுக்கு அதிகமான ரிஸ்க்கை நாம் எடுக்கிறோம் என்பது முதலீட்டாளர்கள் பலருக்கும் புரிவதில்லை.

சந்தையில் ‘ஹைப்’ செய்யப்படும் பங்குகளில் சில்லறை முதலீட்டாளர்கள் தாமதமாகவே... அதாவது, உச்ச விலையில்தான் நுழைகிறார்கள். பிறகு, சரிவைச் சந்திக்கும்போது பெரும் நஷ்டத்தில் வெளியேறுகிறார்கள். ஆக, விலை நகர்வுகளை மட்டுமே பார்க்கும் முதலீட்டாளர்கள், இந்த வலையில் சிக்கிக் கொள்கிறார்கள்.

இப்போதும்கூட பெரும்பாலான பங்குகள் 52 வார உச்ச விலையிலிருந்து 30 சதவிகிதத்துக்கும் மேல் இறக்கம் கண்டுள்ளன. இவற்றில் அடிப்படையிலும், தொழில் ரீதியிலும் வலுவாக இல்லாத பங்குகளும் உள்ளன. இவை இப்போது விலை மலிவாகக் கிடைக்கின்றன என்கிற தோற்றத்தைப் பலருக்கும் கொடுக்கலாம். இதனால் பல முதலீட்டாளர்கள் அவற்றை வாங்குவதற்காக முயற்சி செய்வார்கள். ஆனால், ‘இவை இன்னும் மோசமான இறக்கத்தைச் சந்திக்கவே வாய்ப்புள்ளது. இந்தத் தவறை ஒருபோதும் செய்யாதீர்கள்’ என்று எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள்.

‘சந்தை இறக்கத்தின் தீவிரம் முழுமையாகத் தெரியவருவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகலாம். விலையை மட்டுமே பார்த்து பங்குகளைத் தேர்வு செய்யாமல், அடிப்படையில் வலுவான, நல்ல வளர்ச்சி சாத்தியக்கூறுகளைக் கொண்ட நிறுவனங்களின் பங்குகளில் கவனம் செலுத்தினால் லாபம் பார்க்கலாம். முதலீடு களை அனைத்து சொத்துப் பிரிவுகளிலும் பரவலாக்குவதையும் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்ற அறிவுறுத்தல்களையும் தருகிறார்கள் அந்த நிபுணர்கள்.

சந்தை சவாலானதாகவே இருக்கும் சூழலிலும், புத்திசாலித்தனமாக முதலீடு களை வழிநடத்தும் முதலீட்டாளர்களுக்குக் கணிசமான வருமான வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. தவறுகளைத் தவிர்த்து, பொறுமையாகச் செயல்பட்டு வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக்கொண்டால், சந்தை மீண்டு வரும்போது, நிச்சயம் பலனை அனுபவிக்கலாம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை!

- ஆசிரியர்



from Vikatan Latest news https://ift.tt/qX6ehs5

Post a Comment

0 Comments