Doctor Vikatan: அப்பாவின் பல வருட சிகரெட் பழக்கம், குடும்பத்தாரின் பயம்... மீட்க முடியுமா?

Doctor Vikatan: என் அம்மாவும் அப்பாவும் வெளியூரில் தனியே வசிக்கிறார்கள். அப்பாவுக்கு 70 வயதாகிறது. பல வருடங்களாக அவருக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் தொடர்கிறது. எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அதை நிறுத்த மறுக்கிறார். வயதாவதால், அம்மாவுக்கும் அப்பாவின் உடல்நலம் குறித்த பயம் அதிகரித்திருக்கிறது. தெரிந்த குடும்பங்களில் புற்றுநோய் பாதிப்பையும் மரணங்களையும் பற்றி கேள்விப்படும்போது அந்த பயம் எல்லோருக்கும் அதிகரிக்கிறது. அப்பாவின் புகைப்பழக்கத்தை நிறுத்த முடியுமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் சுபா சார்லஸ்

சுபா சார்லஸ்

முதல் வேலையாக உங்கள் அப்பா எப்போதெல்லாம் சிகரெட் பிடிக்கிறார் என்பதை கவனியுங்கள். உதாரணத்துக்கு, டென்ஷன் அதிகமான நேரத்தில் பிடிக்கிறார் என்றால் டென்ஷனான சூழல்களிலிருந்து அவரை விடுவிக்க முயலலாம். 

அவர் புகை பிடிக்கும்போதெல்லாம் கோபப்பட்டு, சண்டை போடுவதால் நிலைமை இன்னும் மோசமாகுமே தவிர, தீர்வு கிடைக்காது. உங்கள் கோபமும் சண்டையும் அவரை இன்னும் டென்ஷனாக்கி, கூடுதலாக இன்னும் சில சிகரெட்டுளை புகைக்க வைக்கும். 

அவர் நல்ல மனநிலையில் இருக்கும்போது பேசி, மருத்துவரிடம் அழைத்துச்செல்லுங்கள். பல வருட சிகிரெட் பழக்கம் நிச்சயம் உங்கள் அப்பாவுக்கு நுரையீரல் மற்றும் கல்லீரலில் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும். முழு உடல் மருத்துவப் பரிசோதனைகளைச் செய்யுங்கள்.

சிகரெட் பழக்கத்திலிருந்து விடுபட

ஒருவேளை பாதிப்பு இருப்பது தெரிந்தால் அதற்குப் பிறகு அவருக்கு பயம் வரலாம். அவர் அந்தப் பழக்கத்திலிருந்து விடுபட விரும்பினால் டீ அடிக்ஷன் மையங்களை நாடலாம். அதற்கு முன் சிகரெட் பழக்கத்தைக் கைவிட உதவும் நிகோடின் பேட்ச் ஒட்டுவது போன்று எளிய வழிகளை முயற்சி செய்து பார்க்கலாம்.

தெரிந்தவர்களின் குடும்பங்களில் நிகழ்ந்த புற்றுநோய் மரணங்களை நினைத்து இத்துடன் குழப்பி பயப்பட வேண்டாம். இந்தப் பழக்கத்திலிருந்து  அப்பாவை மீட்க நீங்கள் அவருக்கு ஒத்துழைக்க வேண்டும். அவரது அன்பும் அருகாமையும் உங்கள் குடும்பத்தாருக்கு எவ்வளவு முக்கியம் என்பதைப் பொறுமையாகவும் அன்போடும் எடுத்துச் சொல்லுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Vikatan Latest news https://ift.tt/LRP5Aw0

Post a Comment

0 Comments