குறைந்த விலையில் நிறைந்த சத்துகளைத் தரும் காய்கறிகளில், முள்ளங்கிக்குத்தான் முதல் இடம். அன்றாட உணவில் தவறாது இடம் பிடிக்கும் காய் இது. முள்ளங்கியின் மகத்துவத்தை அறிந்து, பீட்சா, பர்கர், சான்ட்விச் போன்ற வெளிநாட்டு உணவுகளிலும், முள்ளங்கியைத் துருவிப் பயன்படுத்துகின்றனர். முள்ளங்கியின் மருத்துவப் பலன்களைப் பற்றிக் காரைக்குடி சித்த மருத்துவர் சி.சொக்கலிங்கம் பிள்ளையிடம் கேட்டோம்.
'முள்ளங்கியில் சிவப்பு முள்ளங்கி, வெள்ளை முள்ளங்கி, மஞ்சள் முள்ளங்கி, சுவர் முள்ளங்கி என நான்கு வகைகள் உண்டு. இதில், நாம் அதிகம் பயன்படுத்துவது வெள்ளை, சிவப்பு முள்ளங்கி. சிறுநீரகக் கல்லைப் போக்குவதில் முள்ளங்கிக்கு பெரும் பங்கு உண்டு. தாகத்தைத் தணிக்கும். பெண்களுக்கான மாதவிடாய் பிரச்னையைத் தீர்க்கவல்லது. முள்ளங்கியை சமைக்கும்போது, நாம் பெரும்பாலும் அதனுடைய கீரையைப் பயன்படுத்துவது இல்லை. முள்ளங்கி வாங்கும்போதே அதன் கீரையோடு வாங்குவது நல்லது. மதிய உணவில், முள்ளங்கிக் கீரையில் பருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டுவந்தால், மூட்டுவலி, தசைவலி நீர்க் கடுப்பு, எரிச்சலைக் கட்டுப்படும். அதேபோல், மார்பக நோய்களைக் கட்டுப்படுத்தும் தன்மையும் இந்தக் கீரைக்கு உண்டு. சிலர், முள்ளங்கியை பச்சையாகச் சாப்பிடுவார்கள். இதனால், தொண்டையில் எரிச்சல், கரகரப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. வேகவைத்துச் சாப்பிடுவது இந்தப் பிரச்னை வராமல் தடுக்கலாம்.

நீர்த்தடத்தில் ஏற்படக்கூடிய நீர் எரிச்சல், நீர் குத்தல், சிறுநீர் கழிக்கும்போது ரத்தம் வெளியேறுதல், உயிரணுக்கள் வெளியேறுவது போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்கு முள்ளங்கிதான் மருந்து. ஆண்களின் தவறான பழக்கத்தினால் ஏற்படும் நோய்கள், அடிக்கடி சிறுநீர் கழித்தல், தகாத உறவினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மீட்டெடுக்க, முள்ளங்கியைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.
பெண்களுக்குக் கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய வெள்ளைப்படுதல், கர்ப்பப்பை வாய்ப்புண், மாதவிடாய் காலங்களில் ஏற்படக்கூடிய அதிக உதிரப்போக்கு ஆகியவற்றைக் கட்டுபடுத்தக்கூடிய தன்மையும் முள்ளங்கிக்கு உண்டு. தவிர, வயிற்று எரிச்சல், சிறுநீரகக்கல், இருமல், பல்வலி போன்றவற்றுக்கும், முள்ளங்கி சிறந்த ஒரு உணவு. தூக்கமின்மையாலும் உடல் மெலிந்து இருப்பவர்கள் தினமும் முள்ளங்கியை உண்டுவர, உடல் வலிமை பெறும். உடலில் உள்ள சத்துக்கள் வெளியேறுவதைத் தடுக்கவும், சிறுநீரை சீராக்கும் தன்மையும் இந்த முள்ளங்கிக்கு உண்டு.

முள்ளங்கியை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு அல்வா செய்து கொடுக்கலாம். முள்ளங்கியை நன்றாகத் துருவி குக்கரில் வேகவைக்கவும். இதனுடன் சமஅளவு நாட்டு வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து உரலில் இடிக்கவும். நல்ல மிருதுவாகும். முந்திரிப்பருப்பு, திராட்சை சேர்த்துக் கிளறி இறக்கும்போது, சிறிது ஏலக்காய், நெய் சேர்க்கவும். முள்ளங்கி அல்வா ரெடி.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
from Vikatan Latest news https://ift.tt/tL3P1iS
0 Comments