கன்னியாகுமரி மாவட்டம், இனயம் புத்தன் துறை புனித அந்தோணியார் தேவாலயத்தில் திருவிழா நேற்று தொடங்கி 12 நடத்துவதாக திட்டமிடப்பட்டது. சர்ச் விழா ஏற்பாடுகளுக்காக பெரிய அளவிலான இரும்பு ஏணி ஒன்றை சாலையை கடந்து கொண்டுசெல்ல முயற்சித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மின்கம்பம் வழியாக சென்ற உயர் மின் அழுத்த மின் கம்பி, ஏணி மீது உரசியது. இதில் இனயம் புத்தன் துறை மீனவ கிராமத்தை சேர்ந்த விஜயன் (48), மனோ(42), ஜெஸ்டஸ் (38), சோபன் (38) ஆகிய நான்கு பேர் சம்பவ இடத்தில் துடிதுடித்து பலியானார்கள். மின்சாரம் தாக்கி தீப்பொறிகளுடன் கிடந்த அவர்களை மீட்க முடியாமல் அப்பகுதியினர் அலறியபடி நின்றனர்.

பின்னர் மின்சாரம் துண்டிக்கப்பட்டு 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. அவர்களது உடல்கள் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு முதற்கட்ட ஆய்வுக்குப்பின் அங்கிருந்து உடல்கூறு ஆய்வுக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.

நால்வரின் உடலும் கருகிய நிலையில் காணப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மின்சாரம் தாக்கி நான்கு பேர் துடிதுடிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சர்ச் விழா மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டிய சமயத்தில் மின்சாரம் தாக்கி நால்வர் இறந்த சம்பவம், கன்னியாகுமரி மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
from Vikatan Latest news https://ift.tt/eGysQhr
0 Comments