ஒன் பை டூ

இரா.ராஜீவ்காந்தி, மாணவரணித் தலைவர், தி.மு.க

“தலைவர், உண்மைநிலையைச் சொல்லியிருக்கிறார். ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததிலிருந்தே, பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கு அள்ளிக்கொடுத்துவருகிறது. அதேநேரம், தமிழ்நாடுபோல ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்துக்கு எதிராக இருக்கும் மாநிலங்களின் மீது மறைமுகத் தாக்குதலை முன்னெடுத்துவருகிறது. ஜி.எஸ்.டி நிதிப் பகிர்வில் முரண்பாடு, கல்விக் கொள்கையில் தலையீடு, மாநில உரிமைகளைப் பறிப்பது எனப் பல செயல்பாடுகளிலும் தமிழகத்தைக் குறிவைத்து மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்கிறது பா.ஜ.க. அதேபோல இன்னொரு பக்கம், ஒன்றிய அரசின் பிரதிநிதியான ஆளுநரைவைத்துக் குடைச்சல் கொடுப்பது என்று பல்முனைத் தாக்குதலை முன்னெடுத்து, தமிழகத்தை ஒரு தீண்டத்தகாத மாநிலமாக மாற்றுகிறார்கள் என்பதை எங்கள் தலைவர் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். கடந்த ஆட்சியில் ஒன்றிய பா.ஜ.க-வுக்கு அ.தி.மு.க அடிமைச் சேவகம் செய்து, மாநில உரிமைகளையெல்லாம் எழுதிக்கொடுத்து ஆட்சி நடத்திக்கொண்டிருந்தது. அதேபோல, தி.மு.க-வும் ஒன்றிய அரசின் மிரட்டலுக்கு அடிபணிந்துவிடும் எனப் பகல் கனவு காண்கிறார்கள். என்னதான் அவர்கள் முட்டி மோதினாலும், பாசிச பா.ஜ.க-வின் திட்டம் பெரியார் மண்ணில் ஒருபோதும் நிறைவேறாது!”

நாராயணன் திருப்பதி, மாநிலத் துணைத் தலைவர், பா.ஜ.க.

“வரம்பு மீறிப் பேசுகிறார் முதல்வர். கடந்த சில வாரங்களாகவே இது போன்ற பொறுப்பற்றப் பேச்சுகளை முதல்வர் ஸ்டாலின் அதிக அளவில் பேசிவருகிறார். சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு, தொழில் வளர்ச்சியில் பின்தங்கல், மாநிலம் முழுவதும் அரசுக்கு எதிரான போராட்டம் எனத் தொடர்ந்து தமிழக அரசுக்கு நெருக்கடிகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அதை மடைமாற்ற, ‘மாநில உரிமைகள் பறிபோகின்றன, இந்தியைத் திணிக்கப் பார்க்கிறார்கள், தொகுதி மறுசீரமைப்பில் தமிழகம் பாதிக்கும்’ என்றெல்லாம் இல்லாத பிரச்னைகள் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறார் முதல்வர். பொறுப்புள்ள பதவியில் இருக்கும் அவர், என்ன பேசுகிறோம் என்பதை உணர்ந்து பேச வேண்டும். தி.மு.க அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் அரசு ஆட்சியில், தி.மு.க எதையும் கேட்டுப் பெறவில்லை; காங்கிரஸும் தமிழகத்துக்கு எதையும் செய்யவில்லை. ஆனால், கடந்த பத்தாண்டு பா.ஜ.க ஆட்சியில், நிதிப் பகிர்வின் மூலம் இதுவரை 14 லட்சம் கோடி ரூபாய் தமிழகத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதைத் தமிழ்நாடு அரசால் மறுக்க முடியுமா... ஆனால், பா.ஜ.க அரசு தமிழகத்துக்கு எதையுமே கொடுக்காததுபோல ஒரு மாய பிம்பத்தை ஏற்படுத்தப் பார்க்கிறது தி.மு.க!”



from Vikatan Latest news https://ift.tt/dqeo5GL

Post a Comment

0 Comments