"நான் கிறுக்கன் கிடையாது; உன்னைத் தொலைத்து விடுவேன்" - யாரைக் கண்டிக்கிறார் ராஜேந்திர பாலாஜி?

விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளராக இருப்பவர் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி. அதிரடியான பேச்சுகளுக்குப் பெயர் போன கே.டி. ராஜேந்திர பாலாஜி, ஆவினில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பணம் மோசடி செய்த வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். இதையடுத்து ஊடகங்களுக்குப் பேட்டி கொடுக்காமலும், பொதுவெளியில் அதிரடியாகப் பேசாமலும் அமைதியாக இருந்து வந்த கே.டி. ராஜேந்திர பாலாஜி சமீபகாலமாக மீண்டும் தன்னுடைய பழைய ஃபார்முக்கு திரும்பி இருக்கிறார்.

ராஜேந்திர பாலாஜி

இந்தநிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக விருதுநகர் தேசபந்து மைதானத்தில் அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கே.டி. ராஜேந்திர பாலாஜி, முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் உள்பட மாவட்ட கழக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பேசுவதற்கு முன்பாகச் சிறப்பு அழைப்பாளர்களுக்கும், மாவட்டக் கழக நிர்வாகிகளுக்கும் சால்வை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது மேடை ஏறி வந்த தொண்டர்கள் ஒரே நேரத்தில், முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜிக்கும், மாபா பாண்டியராஜனுக்கும் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது மாஃபா பாண்டியராஜனுக்குச் சால்வை அணிவிக்க நெருங்கி வந்த கட்சித் தொண்டரை கே.டி. ராஜேந்திர பாலாஜி திடீரென தள்ளிவிட்டு அடித்ததுடன் ஒருமையில் பேசினார். பொதுவெளியில் நடந்த இந்த சம்பவம் அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்த சலசலப்பு விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க.வுக்குள் ஓய்வதற்கு முன்பு நேற்று சிவகாசியில் நடைபெற்ற அ.தி.மு.க. உள்ளரங்கக் கூட்டத்தில் பேசிய கே.டி.ராஜேந்திர பாலாஜி, அ.தி.மு.க-வில் ஒருவரை மறைமுகமாகத் தாக்கிப் பேசியிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

முன்னாள் அமைச்சர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நேற்று காலை நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் குழு கூட்டத்தில் பேசிய கே.டி. ராஜேந்திர பாலாஜி, "அதிமுகவைக் காட்டிக் கொடுத்தவர். அவருக்கென்று அ.தி.மு.க.வில் எந்த வரலாறும் கிடையாது. என்னை எடுத்துக் கொண்டால், அ.தி.மு.க.வில் எனக்கென்று தனி வரலாறு உண்டு.

கட்சி மாறி வந்தவர்களுக்கும், பல கட்சிகளுக்குச் சென்றவர்களுக்கும் பொன்னாடை போர்த்திக் கௌரவிப்பதா? நீ செய்வதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்க நான் ஒன்றும் கிறுக்கனோ.. பைத்தியக்காரனோ கிடையாது. தொலைத்து விடுவேன்" என ஆவேசமாகப் பேசினார். முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனைத்தான் மறைமுகமாகப் பேசுவதாக அ.தி.மு.க வட்டாரங்கள் சொல்கின்றன.

கூட்டம்

கே.டி.ராஜேந்திர பாலாஜியின் இந்த பேச்சு விருதுநகர் மாவட்டத்தில் மாஃபா பாண்டியராஜன் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக விருதுநகர் நாடார் சமூகத்தினர் சார்பில் கண்டன போஸ்டர்களை ஒட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel



from Vikatan Latest news https://ift.tt/45QdESg

Post a Comment

0 Comments