LSG vs PBKS: 'குறி வெச்சா இரை விழும்!' - லக்னோவை எப்படி வீழ்த்தினார் ஸ்ரேயாஷ் ஐயர்?

'பஞ்சாப் வெற்றி!'

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை அதன் சொந்த மைதானத்திலேயே வைத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சிறப்பான வெற்றியை பெற்றிருக்கிறது பஞ்சாப் கிங்ஸ் அணி.

வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்ட லக்னோ அணியை 170 யைச் சுற்றியே கட்டுப்படுத்தி ஆதிக்கமான பேட்டிங்கின் மூலம் எளிதாக வென்றிருந்தார்கள்.

பஞ்சாப் அணி வெல்ல காரணமாக இருந்த அந்த முக்கியமான தருணங்களைப் பற்றிய அலசல் இங்கே.

Punjab
Punjab

பவர்ப்ளே புல்லட்ஸ்:

லக்னோ கடந்த இரண்டு போட்டிகளிலுமே பவர்ப்ளேயில் ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் எடுத்திருந்தது. டெல்லிக்கு எதிராக 64 ரன்கள். சன்ரைசர்ஸூக்கு எதிராக 77 ரன்கள்.

இரண்டு போட்டிகளிலும் தலா 1 விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தனர். ஆனால், பஞ்சாபுக்கு எதிரான இந்த போட்டியில் பவர்ப்ளேயில் 39 ரன்களை மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்திருந்தனர்.

3 விக்கெட்டுகளையும் 3 வெவ்வேறு பௌலர்கள் வீழ்த்தியிருந்தனர். மிட்செல் மார்ஷூக்கு எதிராக ஓவர் தி விக்கெட்டில் வந்து மிடில் & லெக் ஸ்டம்ப் லைனில் குட் லெந்தில் ஒரு பந்தை அர்ஷ்தீப் வீசியிருந்தார்.

பந்து கொஞ்சம் கூடுதல் ஷார்ட்டாக வருகிறதோ எனத் தவறாகக் கணித்த மார்ஷ் எட்ஜ் ஆகி கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். மார்க்ரம் கொஞ்சம் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்தார்.

அவரையும் பெர்குசன் கொஞ்சம் ஃபுல்லாக இன்கம்மிங் டெலிவரியாக வீசி போல்டாக்கினார்.

பூரன் - பண்ட் என இரண்டு இடதுகை பேட்டர்கள் க்ரீஸில் இருந்ததால் பார்ட் டைம் ஆஃப் ஸ்பின்னரான மேக்ஸ்வெல்லுக்கு ஓவரை கொடுத்தார் ஸ்ரேயாஷ் ஐயர்.

Pant & Shreyas
Rishabh Pant & Shreyas Iyer

இந்த மேட்ச் அப்புக்கு பலனும் கிடைத்தது. பைன் லெக் பீல்டரை வட்டத்துக்குள் வைத்துக் கொண்டு மேக்ஸ்வெல் வீசிய ஒரு பந்தை மடக்கி, அந்த பீல்டரின் தலைக்கு மேலேயே அடிக்க பண்ட் முயன்றார்.

அது சாத்தியப்படவில்லை கேட்ச் ஆனார். பவர்ப்ளே முடிவில் லக்னோ அணி 39 ரன்கள் மட்டுமே. கடந்த போட்டிகளை விட கிட்டத்தட்ட 25-30 ரன்கள் குறைவு.

நிக்கோலஸ் பூரனின் விக்கெட்:

லக்னோ அணியின் பேட்டிங்கின் முதுகெலும்பே நிக்கோலஸ் பூரன்தான். டெல்லிக்கு எதிரான போட்டியில் 30 பந்துகளில் 75 ரன்களை எடுத்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 250.

சன்ரைசர்ஸூக்கு எதிரான போட்டியில் 26 பந்துகளில் 70 ரன்கள் எடுத்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 269. அதேநேரத்தில் இந்தப் போட்டியில் 30 பந்துகளில் 44 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார்.

மற்ற போட்டிகளைப் போல இந்தப் போட்டியில் ஆரம்பத்திலிருந்தே அவரால் அதிரடியாக ஆட முடியவில்லை.

Pooran
Pooran

காரணம், பவர்ப்ளேயில் மட்டுமே 3 விக்கெட்டுகளை இழந்திருந்தனர். அதனால் ஆரம்பத்தில் கொஞ்சம் நின்று நிதானமாக ஆடி செட்டில் ஆனார்.

கிட்டத்தட்ட 20 பந்துகளை ஆடிய பிறகுதான் அதிரடியை ஆரம்பித்தார். ஸ்டாய்னிஸின் ஓவரில் சிக்சரையும் பவுண்டரியையும் அடித்தார். பூரனைப் பொறுத்தவரைக்கும் வேகப்பந்து வீச்சாளர்களை விட ஸ்பின்னர்களுக்கு எதிராகத்தான் அதிரடியாக ஆடியிருக்கிறார்.

டெல்லிக்கு எதிரான போட்டியில் ஸ்பின்னர்களுக்கு எதிராக 17 பந்துகளில் 61 ரன்களை அடித்திருந்தார். சன்ரைசர்ஸூக்கு எதிரான போட்டியில் ஸ்பின்னர்களுக்கு எதிராக வெறும் 5 பந்துகளில் 28 ரன்களை அடித்திருந்தார்.

ஆக, பூரன் ஸ்பின்னர்களை வெளுத்தெடுக்கப் போகிறார் என்பது அறிந்ததே. ஆனாலும் ஸ்ரேயாஷ் ஐயர் துணிச்சலாக சஹாலுக்கு ஓவரை கொடுத்தார். சஹால் வீசிய 10 வது ஓவரில் இரண்டு பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 15 ரன்களை பூரன் அடித்திருந்தார். ஆனாலும் ஸ்ரேயாஷ் மீண்டும் சஹாலுக்கு ஓவர் கொடுத்தார்.

12 வது ஓவரை சஹால் வீசினார். அவரும் மீனுக்கு தூண்டில் போடுவது ஷாட் ஆட நன்றாக இடம் கொடுத்து ஒயிடாக கூக்ளிக்களை வீசினார். அந்த 12 வது ஓவரிலும் அப்படித்தான் வீசினார்.

Against the Spin ஆக பூரன் அடிக்க முயன்று லாங் ஆபில் கேட்ச் ஆனார். ஸ்ரேயாஷூம் பூரனை மாட்ட வைக்கும் வகையில் பவுண்டரி லைனில் எக்ஸ்ட்ரா கவர், லாங் ஆன், லாங் ஆப், டீப் மிட் விக்கெட் பீல்டர்களை தடுப்பாக நிறுத்தி வியூகம் வகுத்திருந்தார்.

சஹாலின் துணிச்சலுக்கும் ஸ்ரேயாஷின் நம்பிக்கைக்கும் கிடைத்த வெற்றி இது. பூரனின் விக்கெட் அந்த சமயத்தில் கிடைத்ததால்தான் லக்னோ அணியை 171 ரன்களுக்குள் பஞ்சாப் கட்டுப்படுத்தியது.

Lucknow
Lucknow

இந்திய பேட்டர்களின் மீதான நம்பிக்கையும் அதிரடியும்:

லக்னோ நிர்ணயித்த டார்கெட்டை சேஸ் செய்கையில் பிரப்சிம்ரன் சிங், ஸ்ரேயாஷ் ஐயர், நேஹல் வதேரா என மூன்று பேரும் அதிரடியாக அசத்தியிருந்தனர்.

பிரப்சிம்ரன் பவர்ப்ளேயை பார்த்துக் கொண்டார். பவர்ப்ளேயில் தேர்டு மேனிலும் பைன் லெக்கிலுமேதான் அதிக ஷாட்களை ஆடி பவுண்டரிக்களை அடித்தார். பஞ்சாப் அணி பவர்ப்ளேக்குள் 62 ரன்களை சேர்த்ததற்கு அவர்தான் காரணம்.

அரைசதத்தைக் கடந்து திக்வேஷிடம் அவுட் ஆகியிருந்தார். அவரின் வேலையைச் சரியாகச் செய்து முடித்துவிட்டே சென்றிருந்தார்.

கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயர் கடந்த போட்டியில் இருந்த பார்மில் அப்படியே இருந்தார். ஷர்துல் தாகூரும் ஆவேஷ் கானும் வீசிய ஷார்ட் பிட்ச் டெலிவரிக்களை தேர்டு மேனிலுல் லெக் சைடிலும் அவர் மடக்கி அடித்த விதமே அவர் என்ன மாதிரியான பார்மில் இருக்கிறார் என்பதைக் காட்டியது.

மேலும் ஒரு கேப்டனாகவும் இங்கே ஒரு தீர்க்கமான முடிவை எடுத்திருந்தார். மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ் போன்ற வீரர்கள் இருந்தும் நம்பர் 4 இல் இம்பாகட் ப்ளேயராக வந்திருந்த நேஹல் வதேராவை இறக்கியிருந்தார். அவரும் உள்ளே இறங்கி அதிரடியாக ஆடி போட்டியைச் சீக்கிரம் முடிக்க காரணமாக இருந்தார்.

Wadhera
Wadhera

இந்திய பேட்டர்கள்தான் பஞ்சாப் அணியின் முக்கிய வீரர்களாக இருக்கப் போகிறார்கள். அவர்களுக்குத் துணையாக நிற்கும் கதாபாத்திரத்தைத்தான் வெளிநாட்டு வீரர்கள் செய்யப்போகிறார்கள் என்கிற மெசேஜையும் தெளிவாகக் கடத்தியிருந்தார்.

Shreyas Iyer
Shreyas Iyer

'நேற்றைய வெற்றி இன்று வரலாறாக மாறிவிட்டது. அது கடந்த போன விஷயம். அதனால் இன்று என்ன செய்யப்போகிறோம் என்பதே முக்கியம்' என டாஸில் ஸ்ரேயாஷ் ஐயர் பேசியிருந்ரார்.

பஞ்சாபின் மோசமான வரலாறுகளை மாற்றப் போகும் கேப்டன் இவர்தானோ என்கிற எதிர்பார்ப்பை ஆரம்பத்திலேயே கொடுத்திருக்கிறார். பொறுத்திருந்து பார்ப்போம்.



from Vikatan Latest news https://ift.tt/FDiWbog

Post a Comment

0 Comments