ஐபிஎல் இன்றைய (ஏப்ரல் 5) போட்டியில் ராஜஸ்தான் அணியும், பஞ்சாப் அணியும் நேருக்குநேர் களமிறங்கின. காயம் காரணமாக முதல் மூன்று போட்டிகளில் கேப்டனாக செயல்படாமல் இம்பேக்ட் பிளேயராக பேட்டிங் மட்டும் செய்துவந்த சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாகத் திரும்பினார். டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், பவுலிங்கைத் தேர்வு செய்தார்.

பஞ்சாப் அணியில் எந்த மாற்றமும் இல்லை. ராஜஸ்தான் அணியில் ஒரேயொரு மாற்றமாக துஷார் தேஷ்பாண்டேவுக்குப் பதில் யுத்விர் சிங் பிளெயிங் லெவனில் சேர்க்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, ஜெய்ஸ்வாலும், சஞ்சு சாம்சனும் ஓப்பனிங்கில் இறங்கி இன்னிங்ஸைத் தொடங்கினர். முதல் இரண்டு ஓவரில் இருவரும் ரிஸ்க் எடுக்கும் முயற்சியில் இறங்காமல் நிதானமாக ஆடி, 13 ரன்கள் சேர்த்தார். 3-வது ஓவரில் ஜெய்ஸ்வால் மட்டும் பெரிய ஷாட்களுக்கு முயன்றார். இருப்பினும், பெரிய ஷாட் எதுவும் க்ளிக் ஆகாமல் அவரிடமிருந்து ஒரேயொரு பவுண்டரியுடன் அந்த ஓவரில் 8 ரன்கள் வந்தது.
நிதானமாகத் தொடங்கிய ஜெய்ஸ்வால் - சஞ்சு கூட்டணி!
ஆனால், மார்கோ யான்சன் வீசிய 4-வது ஓவர் அதற்கு எதிர்மாறாக அமைந்தது. முதல் பந்தை சாம்சன் பவுண்டரியுடன் வரவேற்க, ஜெய்ஸ்வால் நச்சென்று இரண்டு சிக்ஸர்கள் பறக்கவிட, அந்த ஓவரில் மட்டும் 19 ரன்கள் வந்தது. அதேவேகத்தில், ஃபெர்குசன் வீசிய 5-வது ஓவரில் ஜெய்ஸ்வால் ஒரு சிக்ஸ் அடித்தபோதும், அந்த ஓவரில் 7 ரன்கள் மட்டுமே வந்தது. அதையடுத்து, மேக்ஸ்வெல் வீசிய பவர்பிளேயின் கடைசி ஓவரில் சாம்சனின் ஒரேயொரு பவுண்டரியுடன் 6 ரன்கள் வர, பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் குவித்தது ராஜஸ்தான்.

அதைத்தொடர்ந்து, சஹால் வீசிய 7-வது ஓவரிலும், ஸ்டாய்னிஸ் வீசிய 8-வது ஓவரிலும் சாம்சனின் தலா ஒரு பவுண்டரியுடன் மொத்தமாக 16 ரன்கள் வந்தது. அதற்கடுத்த இரண்டு ஓவரிலும் மொத்தமாக 16 ரன்கள் வர, 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 85 ரன்கள் குவித்தது ராஜஸ்தான். ஜெய்ஸ்வாலும், சாம்சனும் வலுவான பார்ட்னர்ஷிப்பை அமைத்துக்கொண்டிருந்த நேரத்தில், 11-வது ஓவரின் இரண்டாவது பந்தில் சாம்சனை அவுட்டாக்கி பார்ட்னர்ஷிப்பை உடைத்தார் ஃபெர்குசன். 26 பந்துகளில் 4 பவுண்டரிகள் உட்பட 38 ரன்களில் சாம்சன் வெளியேற, ரியான் பராக் களத்துக்கு வந்தார்.
ராஜஸ்தான் ரன் வேட்டையைத் தடுத்த ஃபெர்குசன்!
சஹால் வீசிய அடுத்த ஓவரிலேயே ஜெய்ஸ்வால் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடித்து 40 பந்துகளில் தனது அரைசதத்தைக் கடந்தார். அதோடு, அணியின் ஸ்கோரையும் 100-ஐக் கடக்க வைத்தார். ஆனால், ஐபிஎல் கரியரில் ஜெய்ஸ்வால் ஸ்லோவாக அடித்த அரைசதமாக இது அமைந்தது. இருப்பினும், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத ஜெய்ஸ்வால், ஸ்டாய்னிஸ் வீசிய 13-வது ஓவரில் அதிரடியாக ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்தார். இந்த நேரத்தில்தான், பஞ்சாப்பின் சேவியராக 14-வது ஓவரை வீசவந்த ஃபெர்குசன், ஜெய்ஸ்வாலை 67 ரன்களில் ஆஃப் ஸ்டம்ப் பறக்க க்ளீன் போல்டாக்கினார்.

அவரைத்தொடர்ந்து பேட்டிங் வந்த கடந்த போட்டியின் நாயகன் நிதிஷ் ராணா, அதே ஓவரில் எதுவும் நடக்காதது போல் தான் சந்தித்த முதல் இரு பந்துகளையும் பவுண்டரிக்கு அனுப்பினார். இருப்பினும், மார்கோ யான்சன் வீசிய அதற்கடுத்த ஓவரிலேயே தூக்கியடிக்க முயன்று மேக்ஸ்வெல் கையில் கேட்ச் கொடுத்து விக்கெட்டைப் பறிகொடுத்து 12 ரன்களில் பெவிலியன் திரும்பினார். 15 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான். அடுத்த ஐந்து ஓவர்களில் அதிரடியாக ஆடும் முயற்சியில் இறங்கினர் ரியான் பராக்கும், ஹெட்மயரும்.
அதிரடி காட்டிய ரியான் பராக்!
அதற்கேற்றவாறு, அர்ஷ்தீப் சிங் வீசிய 16-வது ஓவரில் அதிரடியாக ஆட முயன்று முதல் நான்கு பந்துகளையும் காற்று வெளியிடையாக்கிய ரியான் பராக், கடைசி இரு பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பி ராஜஸ்தான் அணிக்கு ஆறுதல் அளித்தார். அதையடுத்து, ஃபெர்குசன் வீசிய 17-வது ஓவரில் ஹெட்மயர் தூக்கியடித்த சஹாலை நோக்கிச் சென்றது. இருப்பினும் சஹால் அந்த வைபைத் தவறவிடவே அது சிக்ஸாக மாறியது. அந்த ஓவரில் 10 ரன்கள் வர, 160 ரன்களைத் தொட்டது ராஜஸ்தான்.
Powerful Punch Wristy Flick
— IndianPremierLeague (@IPL) April 5, 2025
Riyan Parag with a final flourish #RR eye a strong finish
Updates ▶ https://t.co/kjdEJydDWe#TATAIPL | #PBKSvRR | @rajasthanroyals pic.twitter.com/CMO22Wetgi
பின்னர், நீண்ட நேரமாக பேட்டை சுழற்றிக்கொண்டிருந்த ரியான் பராக், யான்சன் வீசிய 18-வது ஓவரில் இரண்டு சிக்ஸர்களைப் பறக்க விட்டார். அதற்கடுத்த இரண்டு பந்துகளில் கேட்ச் வாய்ப்புகளிலிருந்தும் தப்பித்தார். மொத்தமாக அந்த ஓவரில் 17 ரன்கள் வந்தது. அதையடுத்து, அர்ஷ்தீப் சிங் வீசிய 19-வது ஓவரில் பவுண்டரி அடித்த அடுத்த பந்திலேயே ஹெட்மயர் அவுட்டாக, அந்த ஓவரில் 9 ரன்கள் வந்தது.

இறுதியாக, ஸ்டாய்னிஸ் வீசிய கடைசி ஓவரில் ரியான் பராக், துருவ் ஜோரலின் அதிரடியால் இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 19 ரன்கள் வந்தது. மொத்தமாக, 4 விக்கட் இழப்புக்கு 205 ரன்களைக் குவித்தது ராஜஸ்தான். 3 சிக்ஸ், 3 பவுண்டரி என 43 ரன்களுடன் ரியான் பராக்கும், ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் என 13 ரன்களுடன் துருவ் ஜோரலும் நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்தனர். பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக ஃபெர்குசன் 4 ஓவர்களில் 37 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பஞ்சாப்பை ஆரம்பத்திலேயே ஆஃப் செய்த ஆர்ச்சர்!
அதைத்தொடர்ந்து, 206 என்ற கடினமான இலக்கை நோக்கி பிரப்சிம்ரன் சிங்கும், இம்பேக்ட் பிளேயர் ப்ரியன்ஸ் ஆர்யாவும் களமிறங்கினர். ஆனால், முதல் ஓவரில் முதல் பந்திலேயே முதல் ப்ரியன்ஸ் ஆர்யாவை க்ளீன் போல்டாக்கி பஞ்சாப்புக்கு அதிர்ச்சி தந்தார் ஆர்ச்சர். இருப்பினும், அடுத்து களமிறங்கிய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், அதே ஓவரில் லாங் ஆஃப் திசையில் இரண்டு பவுண்டரி அடித்தார். ஆனால், அதே ஓவரின் கடைசி பந்தில் ஷ்ரேயஸ் ஐயரையும் க்ளீன் போல்டாக்கினார் ஆர்ச்சர். முதல் ஓவரில் 11 ரன்கள் வந்தாலும் பஞ்சாப்புக்கு 2 விக்கெட்டுகள் பறிபோனது. பிரப்சிம்ரன் சிங்கும், ஸ்டானிஸும் 0 ரன்னில் தங்களின் பார்ட்னர்ஷிப்பைத் தொடங்கினர்.
Archer on
— IndianPremierLeague (@IPL) April 5, 2025
Jofra Archer's double timber-strike gives #RR a dream start
Updates ▶ https://t.co/kjdEJydDWe#TATAIPL | #PBKSvRR | @JofraArcher | @rajasthanroyals pic.twitter.com/CfLjvlCC6L
யுத்விர் சிங் வீசிய 2-வது ஓவரில் 6 ரன்களும், ஆர்ச்சர் வீசிய 3-வது ஓவரில் 9 ரன்களும் வந்தது. அதையடுத்து, 4-வது ஓவரை வீசவந்த சந்தீப் சர்மா 3-வது பந்திலேயே 1 ரன்னில் ஸ்டாய்னிஸை அவுட்டாக்கினார். 4 ஓவர்கள் முடிவில் 31 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தொடக்க்கத்திலேயே தடுமாறியது. அந்தச் சூழலில், பிரப்சிம்ரன் சிங்கும், நேஹல் வதேராவும் அணியை மீட்கும் வேலையில் இறங்கினர். அதற்கேற்றாற்போலவே, தீக்ஷனா வீசிய 5-வது ஓவரில் நேஹல் வதேரா கேட்சைத் தவறவிட்டார் துருவ் ஜோரல். அதையடுத்து, பவர்பிளேயின் கடைசி ஓவரில் 4 ரன்களை மட்டுமே சந்தீப் சர்மா விட்டுத்தர, பவர்பிளே முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 43 ரன்களைக் குவித்தது பஞ்சாப்.
பயம் காட்டிய வதேரா - மேக்ஸ்வெல் ஜோடி!
இரண்டு ஓவர்களாக விக்கெட் எதுவும் விடாமல் நிம்மதியாக இருந்த பஞ்சாப்புக்கு சர்ப்ரைஸ் தரும் வகையில், 7-வது ஓவரை வீசிய இம்பேக்ட் பிளேயர் குமார் கார்த்திகேயா, பிரப்சிம்ரனை அவுட்டாக்கி ஓவர் முடிவில் 2 ரன்களை மட்டுமே விட்டுகொடுத்தார். 8-வது ஓவரில் தன்பங்குக்கு 4 பந்துகளை டாட் பால் ஆக்கி 5 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்தார் ஆர்ச்சர். ஒரு ரன்னுடன் மேக்ஸ்வெல்லும், 14 ரன்களுடன் நேஹல் வதேராவும் களத்தில் நின்றிருந்தனர். பஞ்சாப்பின் ரன்வேகம் மந்தமாகவே சென்றது. ஹஸரங்கா வீசிய 9-வது ஓவரில் 9 ரன்கள் வந்தது.

இருப்பினும், குமார் கார்த்திகேயா வீசிய 10-வது ஓவரில் மேக்ஸ்வெல், நேஹல் வதேராவின் தலா சிக்ஸ் மூலம் 19 ரன்கள் வர 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 78 ரன்களைக் குவித்தது பஞ்சாப். பஞ்சாப்பின் வெற்றிக்கு 60 பந்துகளில் 128 ரன்கள் தேவைப்பட்டது. தீக்ஷனா வீசிய 11-வது இந்த ஜோடி நிதானமாக ஆடி 5 ரன்களைச் சேர்த்தது. அடுத்த, ஹஸரங்கா வீசிய அடுத்த ஒரு சிக்ஸ், ராஜஸ்தானின் மிஸ்ஃபீல்டு என பஞ்சாப்புக்கு 12 ரன்கள் வந்தது. அதோடு, வதேரா - மேக்ஸ்வெல் பார்ட்னர்ஷிப்பும் அரைசதம் கடந்தது.
ராஜஸ்தானின் வெற்றியை உறுதி செய்த இலங்கை சுழல் கம்போ!
13-ஓவரில் மேக்ஸ்வெல்லின் இரண்டு பவுண்டரி, யுத்விர் சிங்கின் ஹாட்ரிக் வைடு என 15 ரன்கள் வந்தது. பஞ்சாப் அணியும் 100 ரன்களைக் கடந்தது. தொடர்ந்து, ஹஸரங்கா வீசிய 14-வது ஓவரில் சிக்ஸர் அடித்து அரைசதம் கடந்தார் நேஹல் வதேரா. அந்த ஓவரில் 11 ரன்கள் வர, 15-வது ஓவரின் கடைசி பந்தில் மேக்ஸ்வெல்லை தீக்ஷனாவும், 16-வது ஓவரின் முதல் பந்தில் வதேராவை ஹஸரங்காவும் அடுத்தடுத்து அவுட்டாக்கி பார்ட்னர்ஷிப்பை முற்றிலுமாகக் காலி செய்தனர். 131 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப்பின் வெற்றிக்கு 29 பந்துகளில் 75 ரன்கள் தேவைப்பட்ட வேளையில் ஷஷாங்க் சிங்கும், சூர்யன்ஷ் ஷெட்கேவும் கைகோர்த்தனர்.

ஆனால், 17-வது ஓவரின் முதல் பந்திலேயே பஞ்சாப்பின் 7-வது விக்கெட்டாக சூர்யன்ஷ் ஷெட்கேவை பெவிலியனுக்கு அனுப்பினார் சந்தீப் சர்மா. அந்த ஓவரில் 6 ரன்கள் மட்டுமே வர, பஞ்சாப்பின் வெற்றிக்கு 18 பந்துகளில் 64 ரன்கள் தேவைப்பட்டது. ஷஷாங் சிங் களத்தில் நின்றாலும் உண்மையில் வெற்றி என்னவோ ராஜஸ்தான் வசம் முழுமையாகச் சென்றுவிட்டது.

அந்த சமயத்தில், தீக்ஷனா வீசிய 18-வது ஓவரில் பஞ்சாப்பின் 8-வது மார்கோ யான்சனும் 3 ரன்களில் அவுட்டாகினார். அந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே வர, கடைசி 12 பந்துகளில் பஞ்சாபின் வெற்றிக்கு 61 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் வீசிய 19-வது ஓவரில் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஆர்ச்சர் வீசிய கடைசியாக கடைசி ஓவரில் ஒரு விக்கெட் உட்பட 5 ரன்கள் மட்டுமே வர, 50 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றிபெற்றது. ராஜஸ்தான் அணியில் ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளும், சந்தீப் சர்மா, தீக்ஷனா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம், சஞ்சு சாம்சனும் ராஜஸ்தான் அணிக்கு அதிக வெற்றிகளைப் (32) பெற்றுத்தந்த கேப்டன் ஆனார்.
from Vikatan Latest news https://ift.tt/A3d7D8e
0 Comments