Thug Life: "எனக்கு 'நாயகன்' படத்தைவிட 'தக் லைஃப்' பெரியதாக இருக்கவேண்டும்!" - கமல்ஹாசன்

'தக் லைஃப்' திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக அப்படக்குழுவினர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சுற்றி வருகின்றனர். பல இடங்களில் 'தக் லைஃப்' குழுவினர் பல சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்று ஹைதராபாத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றிருக்கிறது.

Kamal - Thug Life
Kamal - Thug Life

அங்கு கமல் பேசுகையில், "இந்தப் படத்திற்கு அற்புதமான குழுவினர் கிடைத்திருக்கின்றனர். இந்த திரைப்படத்திற்கு இப்படியான ப்ரோமோஷன் பணிகள் தேவையே இல்லை.

எனக்கு இது போன்றதொரு திரைப்படம் எப்போது கிடைக்கும் எனத் தெரியவில்லை. நான் இந்தப் படத்தை சந்தேகிக்கவில்லை. எனக்கு இந்த திரைப்படம் 'நாயகன்' படத்தைவிடப் பெரியதாக இருக்க வேண்டும்.

நான் பார்த்ததை வைத்து இதைச் சொல்கிறேன்." என்றார்.

மணி ரத்னம் பேசுகையில், "நான் 'மெளனராகம்' படத்தை முடித்துவிட்டு வீட்டில் இருந்தேன். அப்போது வரை நான்தான் தயாரிப்பாளரைத் தேடிச் சென்று வாய்ப்புக் கேட்பேன்.

ஆனால், அப்போது ஒரு நாள் தயாரிப்பாளர் என் வீட்டிற்கு வந்து ஒரு கவரைக் கொடுத்தார். நான் முதலில் அது பணம் என நினைத்தேன்.

ஆனால், அது சி.டி. அந்த சி.டி-யில் இருக்கும் படத்தை கமல் சாருக்கு ரீமேக் செய்வதற்குக் கேட்டார்கள். நான் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, நான் ரீமேக் படங்களுக்கு சரியாக இருக்கமாட்டேன் எனக் கூறிவிட்டேன்.

Thug Life - Kamal & Mani Ratnam
Thug Life - Kamal & Mani Ratnam

அதை கமல் சாரிடம் கூறுமாறு கையோடு கமல் சாரிடம் அழைத்துச் சென்றார்கள். அவரிடம் நான், 'ரீமேக் கதைகளுக்கு நான் சரியாக இருக்கமாட்டேன்,' எனக் கூறினேன்.

பிறகு, 'நீங்கள் சரியாக இருக்கும் கதையைச் சொல்லுங்கள்,' என்றார். அப்படித்தான் 'நாயகன்' படம் உருவானது. அதேபோல, 'தக் லைஃப்' படத்திற்கும் திடீரென ஒரு நாள் கூப்பிட்டார். கதையைப் பேசினோம். அப்படி இந்தத் திரைப்படம் உருவாகி, இன்று ரிலீசுக்கு தயாராக இருக்கிறது," என்றார்.



from Vikatan Latest news https://ift.tt/m8xKwZF

Post a Comment

0 Comments