சிறுவயதில் காயம் ஏற்பட்டால் கசியும் ரத்தத்ததை உடனே வாயில் வைப்போம். வளர்ந்த பிறகும்கூட பலருக்கு இந்தப் பழக்கம் இருக்கிறது. இது சரியா; இதனால் உடலில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா என்பதை விளக்குகிறார், சென்னையைச் சேர்ந்த அவசர மருத்துவ சிகிச்சை நிபுணர் டாக்டர் வி.பி.சந்திரசேகரன்.
''காயங்களில் இருந்து கசியும் ரத்தத்தை வாய் வைத்து உறிஞ்சுவது உடலுக்கு ஒருபோதும் நல்லதல்ல. வெளியேறும் ரத்தத்தை உறிஞ்சினால், அது மீண்டும் ரத்தத்தில் கலந்துவிடும் என்பதெல்லாம் பொய்யான புரளி. மாறாக நாம் உறிஞ்சக்கூடிய ரத்தமானது இரைப்பைக்குச் சென்று அங்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். இதனால் வயிற்றுவலி, வாந்தி போன்ற வயிறு சார்ந்த பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பிருக்கிறது.
நாம் ஒரு நாளைக்கு பலவித உணவுப்பொருள்களை உட்கொள்கிறோம். அந்த உணவுப்பொருள்களில் உள்ள பாக்டீரியாக்கள் நமது வாயிலோ, பல்லிலோ தங்கியிருக்கும். நாம், காயத்தின் மீது வாயை வைத்து ரத்தத்தை உறிஞ்ச முற்படும்போது பாக்டீரியாக்கள் காயங்களில் ஒட்டிக்கொள்ளும். இந்த பாக்டீரியாக்கள் விரைவில் குணமடையக் கூடிய காயத்தைக்கூட, ஆற விடாமல் பெரிய காயங்களாக, பாக்டீரியா தொற்றாக மாற்றிவிடும். அதனால், காயத்தில் கசியும் ரத்தத்தை உறிஞ்ச வேண்டாம்.
காயம் ஏற்பட்டால் சுத்தமான தண்ணீரில் கழுவி, காயத்தில் ஆன்டிசெப்டிக் மருந்து போட்டுவிட்டாலே போதுமானது. காயம் பெரியது என்றால், அதற்கேற்ப தையல்போடுவதோ, கட்டுப் போட்டுக்கொள்வதோ செய்யலாம். சிறிய காயம் என்றால் காற்றோட்டமாக விட்டாலே சரியாகிவிடும். தேவைப்பட்டால், மருத்துவரின் பரிந்துரையில் நோய் எதிர்ப்பு மாத்திரைகளோ, வலிநிவாரண மாத்திரைகளோ, டெட்டனஸ் ஊசியோ எடுத்துக்கொள்ள வேண்டும்.
இரத்தம் நிற்காமல் கசிந்துக் கொண்டே இருந்தால் ஈரத்துணியால் காயத்தைக் கட்டி அடிப்பட்ட இடத்தை மேல்நோக்கி தூக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இது ரத்தக் கசிவை கட்டுப்படுத்தும். அதன்பிறகு கண்டிப்பாக மருத்துவரை அணுகவேண்டும். ஏனெனில் காயம் ஏற்பட்ட இடத்தில் எலும்போ, நரம்புகளோ, தசை மண்டலமோ உள்காயமாக பாதிக்கப்பட்டிருந்தால் அதைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது அவசியம்.
இரத்த கசிவு நிற்காவிடில் மூல காரணம் என்ன என்று கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். ஹீமோஃபிலியா, ரத்தத்தட்டு குறைபாடுகள் போன்ற நோய் பாதிப்புடையவர்கள் மற்றும் ரத்த உறைவை தடுக்கக்கூடிய மருந்துகளை உட்கொள்பவர்களும் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும்.
கைகளிலோ, காலிலோ அல்லது விரல்களிளோ காயம் ஏற்பட்டால் அவற்றில் அணிந்திருக்கக் கூடிய வளையல், மோதிரம், கொலுசு போன்றவற்றை அகற்ற வேண்டும். ஏனெனில் காயம் ஏற்பட்டால், கை, கால்களில் வீக்கம் ஏற்படும். அந்த நேரத்தில் இந்த அணிகலன்கள் அழுத்தி ரத்த ஓட்டத்தை தடை செய்துவிடும். இதனால், பாதிக்கப்பட்ட உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் செல்லாமல் அவை அழுகிப்போகும் நிலைகூட ஏற்படலாம். முக்கியமாக சர்க்கரை நோயாளிகள், ரத்த தமணி அடைப்புள்ளவர்களுக்கு காயம் ஆறுவதில் சிக்கல் ஏற்படலாம். எனவே, 'சிறிய காயம்தானே' என்று கண்டுக்கொள்ளாமல் இருந்து விடாதீர்கள், காயத்திற்கு ஏற்ப சிகிச்சையை எடுத்துக்கொள்வதே பாதுகாப்பு'' என்கிறார் மருத்துவர் சந்திரசேகரன்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
from Vikatan Latest news https://ift.tt/IOGa8Zk
0 Comments