ENGvsIND: 'இந்தியாவின் தோல்விக்குக் காரணமான அந்த 3 விஷயங்கள்' - என்னென்ன தெரியுமா?

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் லீட்ஸில் நடந்த முதல் போட்டியிலேயே இந்திய அணி தோல்வியைத் தழுவியிருக்கிறது. 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வென்றிருக்கிறது. பெரிய டார்கெட்டை நிர்ணயித்த போதும் இந்திய அணியால் வெல்ல முடியவில்லை. இந்திய அணியின் தோல்விக்கான அந்த 3 காரணங்கள் என்னென்ன?

England vs India
England vs India

கேட்ச் ட்ராப்கள்:

இந்தப் போட்டியில் மட்டும் இந்திய அணி மொத்தமாக 8 கேட்ச்களை ட்ராப் செய்திருக்கிறது. முதல் இன்னிங்ஸில் மட்டும் 6 கேட்ச்களை கோட்டை விட்டிருந்தனர். யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மட்டுமே 3 கேட்ச்களை கோட்டை விட்டிருந்தார். மேலும், பெரும்பாலான கேட்ச்கள் பும்ராவின் பந்துவீச்சிலேயே ட்ராப் ஆகியிருந்தது.

பும்ராவின் பந்தில் அடுத்தடுத்து விக்கெட் கிடைத்தால் எதிரணியை குறைவான ஸ்கோருக்குள் நிறுத்தி சிக்கலை உண்டாக்கியிருக்க முடியும். பௌலிங் பெரிதாக எடுபடாத பேட்டிங் பிட்ச்சில் இத்தனை கேட்ச்களை கோட்டை விடுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. நான்காவது இன்னிங்ஸில் 371 ரன்களை இங்கிலாந்து சேஸ் செய்து முடித்திருக்கிறது.

England vs India
England vs India

'பிட்ச் எப்படியிருந்தாலும் நான்காவது இன்னிங்ஸில் இப்படியொரு பெரிய டார்கெட் அழுத்தத்தைக் கொடுக்கக் கூடியதுதான். ஆக, இங்கிலாந்துக்கு இது ஒரு நல்ல வெற்றியே!' என சஞ்சய் மஞ்சரேக்கர் பேசியிருக்கிறார். நிதர்சனமான பேச்சு இது. சேஸிங்கில் ஓப்பனர்கள் க்ராலியும் பென் டக்கெட்டும் இணைந்து 188 ரன்களை எடுத்திருந்தனர். இவர்கள் இருவருக்குமே இந்திய அணி கேட்ச்சை ட்ராப் செய்திருந்தது. இவ்வளவு கேட்ச்களை ட்ராப் செய்யும் அணி வெற்றிக்கு தகுதியான அணியே இல்லை.

லோயர் ஆர்டர் பிரச்னை:

இந்திய அணி பெரிய ஸ்கோர்களைத்தான் எட்டியது. ஆனால், இந்த பிட்ச்சில் அந்த ஸ்கோர்கள் அபாரமானவையாக இல்லை. இந்திய அணியால் இங்கிலாந்து பேட்டர்களால் எட்ட முடியாத ஸ்கோரை நிர்ணயித்திருக்க முடியும். குறைந்தபட்சமாக டிராவுக்கு இட்டுச் செல்லும் ஸ்கோரையாவது எடுத்திருக்க முடியும். அது நடக்காமல் போனதற்கு இந்திய அணியின் லோயர் ஆர்டர் பேட்டர்களே காரணம். டாப் 5 பேட்டர்களை தவிர அவர்களுக்கு கீழ் உள்ள பேட்டர்கள் சோபிக்கவே இல்லை.

Karun Nair
Karun Nair

முதல் இன்னிங்ஸில் டாப் 5 க்கு கீழ் உள்ளவர்கள் வெறும் 16 ரன்களையும் இரண்டாம் இன்னிங்ஸில் 49 ரன்களையும் மட்டுமே எடுத்திருந்தனர். அதேநேரத்தில் இங்கிலாந்து சார்பில் முதல் இன்னிங்ஸில் டாப் 5 க்கு கீழுள்ள வீரர்கள் 131 ரன்களையும் இரண்டாம் இன்னிங்ஸில் 77 ரன்களையும் எடுத்திருந்தனர். இது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்திவிட்டது. இந்திய அணியின் லோயர் ஆர்டர் பேட்டர்கள் இரண்டு இன்னிங்ஸிலும் தலா 100 ரன்களை சேர்த்திருந்தால் இந்தப் போட்டியில் கட்டாயமாக தோல்வியைத் தவிர்த்திருக்க முடியும்.

மோசமான பௌலிங் ரொட்டேஷன்

பௌலிங்கில் இந்திய அணி பும்ராவைத்தான் அதிகம் நம்பியிருக்கிறது. அவர்தான் அபாயமான பௌலராக இருக்கிறார். அதற்காக கவனம் மொத்தத்தையும் அவர் மீது வைத்துவிட்டு மற்ற பௌலர்களை சரியாகப் பயன்படுத்தாமல் கோட்டைவிடுவதை எப்படி ஏற்க முடியும்? ஷர்துல் தாகூர் பும்ரா அளவுக்கு அபாயமான பௌலர் கிடையாதுதான். ஆனால், அவர் ஸ்ட்ரைக்கிங் பௌலர். எப்படியாவது வீசி விக்கெட்டுகளை எடுத்துவிடுவார். குறிப்பாக, பார்ட்னர்ஷிப்களை பிரிக்கும் உத்தி அவருக்குத் தெரியும்.

Shardul Thakur
Shardul Thakur

நல்ல பார்மில் வேறு வருகிறார். கடைசி ரஞ்சி சீசனில் 35 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார். இதில் 20 விக்கெட்டுகள் புதிய பந்தில் வந்தவை. அவரை எதோ பார்ட் டைமரை போலத்தான் கில் இங்கே பயன்படுத்தியிருந்தார். இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்தே மொத்தமாக 16 ஓவர்களைத்தான் அவருக்குக் கொடுத்திருந்தார். அதிலும் பென் டக்கெட் மற்றும் ஹாரி ப்ரூக் என முக்கியமான விக்கெட்டுகளை அவர் எடுத்துக்கொடுத்தார். கையில் சரியான ஆயுதத்தை வைத்துக் கொண்டு அதை முறையாகப் பயன்படுத்த கில் தவறிவிட்டார்.

இந்திய அணியின் தோல்விக்கான காரணங்களாக நீங்கள் நினைப்பவற்றை கமெண்ட் செய்யுங்கள்.



from Vikatan Latest news https://ift.tt/lRVq96B

Post a Comment

0 Comments