karnataka: `அரசுப் பள்ளியில் சாதிய பாகுபாடு' - காவல் நிலையத்துக்கு பேரணியாக சென்ற மாணவ, மாணவிகள்

கர்நாடகாவில் அரசுப் பள்ளியில் சாதிய பாகுபாடு, உள்கட்டமைப்பு வசதியின்மை ஆகியவற்றால் பள்ளி முதல்வருக்கெதிராக மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு காவல் நிலையத்துக்குப் பேரணியாகச் சென்ற சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது.

இந்த சம்பவமானது பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள கிராம அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்திருக்கிறது.

பள்ளி முதல்வர் கீதா கபாஸுக்கு எதிராகப் பள்ளிக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுவர், சிறுமிகள் நவநகர் காவல் நிலையத்துக்கு பேரணியாகச் சென்றனர்.

இப்பேரணியில் தலித் அமைப்பைச் சேர்ந்தவர்களும் இணைந்துகொண்டனர்.

இதில், கீதா கபாஸை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்களும், கிராம மக்களும், பள்ளியில் சுத்தமான குடிநீர் இல்லை, வகுப்பறைகளில் சரியான காற்றோட்ட வசதி இல்லை, கழிப்பறைகளில் போதுமான சுகாதாரம் இல்லை, மதிய உணவுத் திட்டத்தில் முட்டை மற்றும் வாழைப்பழங்கள் விநியோகத்தில் முறைகேடு எனக் கூடுதல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

கர்நாடகா - அரசுப் பள்ளி - சாதி பாகுபாடு
கர்நாடகா - அரசுப் பள்ளி - சாதி பாகுபாடு

குறிப்பாகப் பள்ளி மாணவி, "கழிவறைகள் முறையான பராமரிப்பில்லாமல் மோசமாக இருக்கின்றன. வகுப்பில் மின்விசிறிகள், மின்விளக்குகள் இயக்கக் கேட்டால் ஆசிரியர்கள் எங்களை மோசமான வார்த்தைகளால் திட்டுகிறார்கள்.

நாங்கள் மதிய உணவை எடுக்க சமையலறைக்குச் செல்லும்போது சமையலறை ஊழியர்கள் திட்டுகின்றனர்.

சாதி அடிப்படையில் எங்களிடம் பாகுபாடு காட்டுகிறார்கள். ஒரு ஆசிரியர் என்னிடம், `உன் தலையில் செருப்புடன் நடக்க வைப்பேன்' எனத் திட்டினார்" என்று புகார்களை அடுக்கினார்.

பின்னர் இந்த ஆர்ப்பாட்டம் குறித்து தகவல் அறிந்ததும் நிலைமையைச் சரிசெய்ய பள்ளி வளாகத்துக்கு விரைந்த வட்டாரக் கல்வி அதிகாரி எம்.எஸ். படாதானி, "முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் உறுதியளித்தார்.



from Vikatan Latest news https://ift.tt/q3jQR7d

Post a Comment

0 Comments