தமிழ்நாடு உட்பட 9 மாநிலங்கள் & 3 யூனியன் பிரதேசங்களில் SIR; அனைத்து கட்சிகளையும் அழைக்கும் ஸ்டாலின்!

பீகாரில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொண்டது. இதன்முடிவில், 65 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டது.

தேர்தல் ஆணையம் இப்பணியைத் தொடங்கும்போதே கங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாஜக அரசைக் குற்றம்சாட்டி எதிர்த்தது.

இவ்வாறிருக்க, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், உத்தரப்பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், கோவா ஆகிய 9 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகள் ஆகிய 3 யூனியன் பிரதேசங்களில் SIR நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் இன்று அறிவித்திருக்கிறது.

தேர்தல் ஆணையம் - SIR
Election Commission - SIR

இந்த நிலையில், ``வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம், வாக்குத் திருட்டை முறியடிப்போம்" என்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்திருக்கிறார்.

இது குறித்து ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில், ``தேர்தலுக்கு மிக நெருக்கத்தில், அதுவும் பருவமழைக் காலமான நவம்பர், டிசம்பர் மாதங்களில் SIR மேற்கொள்வது நடைமுறைச் சவால்கள் நிறைந்தது.

அவசரகதியில் செய்யப்படும் SIR நடவடிக்கை மக்களின் வாக்குரிமையைப் பறித்து, பா.ஜ.க-வுக்குச் சாதகமாகத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதியாக அமைந்துள்ளது.

ஏற்கெனவே, பீகாரில் பெண்கள், சிறுபான்மையினர், பட்டியல், பழங்குடியின மக்கள் உள்ளிட்டோர் அதிக அளவில் வாக்காளர் பட்டியிலில் இருந்து நீக்கப்பட்டதுடன், இந்த நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இல்லாததும் சேர்ந்து, கடும் ஐயத்தை அனைவரது மனதிலும் எழுப்பியிருக்கிறது.

தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் SIR மேற்கொள்ளப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசியிருக்கிறோம்.

அதனடிப்படையில் வரும் நவம்பர் 2 அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கக் கூட்டம் நடத்தப்படும்.

மக்களின் வாக்குரிமைதான் ஜனநாயகத்தின் அடிப்படை. அதனைப் பறிக்கத் துணியும் ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்" என்று தெரிவித்திருக்கிறார்.

அதேசமயம், 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளவிருக்கும் இந்த SIR பணியை அதிமுக சார்பாக வரவேற்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



from Vikatan Latest news https://ift.tt/b0xVGL3

Post a Comment

0 Comments