கல்பாக்கத்தில் உள்ள 500 மெகாவாட் மின்னுற்பத்தித் திறன் கொண்ட மாதிரி வேக ஈனுலை, ஏப்ரல் 6-ம் தேதி அன்று இரவு 08:25 மணிக்கு முதலாவது அணுப்பிளவு செயல்பாட்டு நிலையை எட்டியுள்ளது. `இந்தியாவின் அணுசக்தி திட்டத்தில் இது ஒரு மைல்கல். நீண்டகால எரிசக்தி பாதுகாப்பை வழங்குவதிலும், உள்நாட்டு அணு தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துவதிலும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க படி' என அணுமின் நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதே நேரம் இந்த அணுவுலைத் திட்டம் தொடங்கி வைக்க பிரதமர் மோடி 2024-ம் ஆண்டு இந்தியா வந்தபோதே சூழலியல் ஆர்வலர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், முதலாவது அணுப்பிளவு செயல்பாடு என்ற இலக்கை ஈனுலை அடைந்திருக்கிறது. இந்த ஈனுலையால் என்ன பிரச்னை? ஏன் இந்த திட்டம் எதிர்க்கப்படுகிறது? என்பது உள்ளிட்டக் கேள்விகளுடன் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தரராஜனிடம் பேசினோம்.
அவர், ``பா.ஜ.க ஆட்சியில் அறிவியல் முன்னேற்றங்களை அத்திப்பூத்தார்போல வரவேற்கும் அதேவேளையில், அபாயமிக்க சுற்றுச்சூழலுக்கும், மனித குலத்துக்கும் ஆபத்தான முன்னேற்றங்களைச் சுட்டிக்காட்டுவதும் அவசியம். அதன் அடிப்படையில் கல்பாக்கத்தில் உள்ள ஈனுலையின் முன்னேற்றங்களை கண்டிக்கிறோம். திரவ சோடியத்தைக் குளிர்விப்பானாகக் கொண்ட இந்த ஈனுலை இந்தியாவில் அமைக்கப்படுவது இதுவே முதல் முறை.
அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஈனுலை தொழில்நுட்பம் பாதுகாப்பற்றது, தேவையற்றது, அதிக பொருளாதாரச் சுமையை ஏற்படுத்துவது உள்ளிட்ட காரணங்களால் அதை கைவிட்டன. ஆனால், இந்தியா 2004-ல் இந்த திட்டத்தை தொடங்கியது. 2010-ல் பயன்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து தாமதமாகி 2026 செப்டம்பருக்குள் பயன்பாட்டிற்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது. ரூ3490 கோடியில் திட்டமிடப்பட்ட இந்த திட்டம், இறுதியாக ரூ.7700 கோடியில் உருவாகியிருக்கிறது.
இவ்வகை உலைகளில் குளிர்விப்பானாக பயன்படுத்தப்படும் திரவ சோடியம் கசிந்த காரணத்தால் ஜப்பானில் மாஞ்சூ ஈனுலையில் தீ விபத்து ஏற்பட்டு அவ்வுலை மூடப்பட்டது. பிரான்சில் செயல்பட்டு வந்த சூப்பர்பீனிக்ஸ் ஈனுலையும் அதிக பொருளாதாராச் சுமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பின்மை, பொதுமக்கள் போராட்டம் உள்ளிட்ட காரணங்களால் மூடப்பட்டது.
அதிவேக ஈனுலைகள் (FBR) இந்தியாவின் நீண்டகால மூன்றுகட்ட அணுசக்தி பயணத்தின் ஒரு முக்கியத் தூணாகும். இந்தியாவிலும் உலகின் பிற நாடுகளிலும் இயங்கும் மற்ற அணு உலைகளைப் போலல்லாமல், FBR யுரேனியம்-புளூட்டோனியம் கலப்பு ஆக்சைடு (MOX) எரிபொருளைப் பயன்படுத்துகிறது.
PFBR-இன் மையப்பகுதி யுரேனியம்-238-ன் ஒரு போர்வையால் சூழப்பட்டிருக்கும். வேகமான நியூட்ரான்கள், யுரேனியம்-238-ஐ பிளவுபடக்கூடிய புளூட்டோனியம்-239 ஆக மாற்றுகின்றன. இது, அணு உலை பயன்படுத்தும் எரிபொருளை விட அதிக எரிபொருளை உற்பத்தி செய்ய உதவுகிறது. இதனாலேயே இது 'ஈனுலை' என்றழைக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் அமைக்கப்படப்போகும் ஈனுலைகளின் நோக்கம் அதுவல்ல.
ஈனுலையின் மையக்கருவைச் சுற்றியுள்ள போர்வையில் தோரியம்-232-ஐப் பயன்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்செயல்பாட்டில் தோரியம்-232 யுரேனியம்-233, யுரேனியம்-232 ஆக மாற்றப்படும். இந்த யுரேனியம்-233 இந்தியாவின் அணுசக்தித் திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்கு எரிபொருளாக அமையும். எனவே, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட கடற்கரையில் கிடைக்கும் தோரியத்தைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் திட்டத்துடன் இந்த ஈனுலை அமைக்கப்பட்டிருக்கிறது.
2024-ல் சூரிய ஆற்றல் மூலம் 136.8TWh மற்றும் காற்றாலை மூலம் 81.5TWh மின்சாரம் கிடைத்துள்ளது. ஆனால் அணுசக்தி மூலம் வெறும் 54.7 TWh தான் கிடைக்கும். அதாவது, காற்றும் சூரியனும் இணைந்து அணுசக்தியை விட 4 மடங்கு அதிக மின்சாரத்தைத் தருகின்றன. மிக முக்கியமாக, ஒரு யூனிட் சூரிய மின்சாரம் தயாரிக்கும் செலவு, அணுமின் நிலைய மின்சாரத்தை விட மிக மிகக் குறைவு. ஒரு காலத்தில் யுரேனியம் கிடைக்காது என்று பயந்தோம். ஆனால் இன்று உலகச் சந்தையில் யுரேனியம் தாராளமாகக் கிடைக்கிறது. எனவே, கஷ்டப்பட்டு ஈனுலைகளைக் கட்டிப் புதிய எரிபொருளை உருவாக்க வேண்டிய அவசியம் இப்போது குறைந்துவிட்டது.
ஈனுலைகளைக் கட்டுவதற்கு ஆகும் செலவு மிக அதிகம். அதைவிடக் குறைந்த செலவில் சில ஆண்டுகளில் பிரம்மாண்டமான சூரிய மின் பூங்காக்களை அமைத்துவிட முடிகிறது.
கூடங்குளம் அணுவுலைகள் போன்று மின்சாரம் தயாரிப்பதற்கு மட்டுமே Civilian List-ல் ஈனுலைகள் வராது. பன்னாட்டு அணுசக்தி முகமையின் கட்டுப்பாடுகள் எதுவும் இந்த ஈனுலைகளுக்குக் கிடையாது என்பதால் இவ்வுலைகளில் இருந்து வெளியாகும் புளுட்டோனியம் அணு ஆயுதங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படலாம் என்கிற சந்தேகத்தையும் பல அணுசக்தித் துறை நிபுணர்கள் எழுப்பியுள்ளனர்.
கூடங்குளம் அணுவுலையில் இருந்து வெளியாகும் அணுக்கழிவுகளை அங்கேயே வைக்க மாட்டோம் என ஒன்றிய அரசு தொடக்கத்தில் கூறி வந்தது. ஆனால், தற்போது அணுக்கழிவுகளை கூடங்குளத்திலேயே சேமித்து வைப்பதற்கான கட்டமைப்புகளை மாநில அரசின் எதிர்ப்பையும் மீறி ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. அணு சக்தி துறையின் கல்பாக்கம் மையத்தில் இந்திய அணுமின் நிறுவனத்தின் சென்னை அணு மின் நிலையம் (MAPS), இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR), முன்மாதிரி அதிவேக ஈனுலை (பாவினி அணுமின் திட்டம்), மற்றும் கல்பாக்கம் அணு மறுசுழற்சி வாரியத்தின் (NRB) பிரிவுகள் உள்ளன.
ஏற்கெனவே கல்பக்கத்தைச் சுற்றியுள்ள 14 கிராமங்களில் NILA-யின் அடிப்படையில் நிலம் வாங்க, விற்க வரைமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் எல்லைப் பரப்பும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருவது சுற்றுவட்டார மக்களை கடுமையாகப் பாதித்துள்ளது. தமிழ்நாட்டின் நலனுக்கு எவ்வித பங்களிப்பும் தராத உலக நாடுகள் அனைத்தும் கைவிட்ட ஒரு ஆபத்தான தொழில்நுட்பத்தை பா.ஜ.க. அரசு செயல்படுத்தி வரும் சூழ்ச்சியை நாம் எதிர்க்க வேண்டும்.
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இருந்து அணுவுலைகளுக்கும், அணுக்கழிவு மையங்களுக்கும் எதிர்ப்பு வந்தால் அத்திட்டங்களைக் கைவிடும் ஒன்றிய அரசு, தமிழ்நாட்டை குப்பைத் தொட்டியாகவும், தமிழர்களை சோதனை எலிகளாகவும் கருதுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழ்நாடு இயற்கைப் பேரிடர்களில் சிக்கி கடும் பாதிப்பை எதிர்கொண்டு வரும் நிலையில், நிவாரணமாக ஒரு ரூபாய் கூட வழங்காத பா.ஜ.க. அரசு தொடர்ந்து நாசகாரத் திட்டங்களை தமிழ் நாட்டில் அமைப்பதை அனைத்துக் கட்சிகளும் அரசியல் அமைப்புகளும் கடுமையாக எதிர்க்க வேண்டும்." எனக் கேட்டுக்கொண்டார்.
from Vikatan Latest news https://ift.tt/AsJvpzR
0 Comments