Doctor Vikatan: சித்த மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படுகிற மருந்துகளில் பிரபலமாகவும் பிரதானமாகவும் இருக்கிறது திரிபலா சூரணம். மலச்சிக்கல் முதல் வாய்ப் புண் வரை எல்லாப் பிரச்னைகளுக்கும் அதை எடுத்துக்கொள்ளச் சொல்லி பலரும் சொல்வதைக் கேட்கிறோம்.
அப்படி அதை யார் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாமா... எப்போது, எவ்வளவு எடுக்கலாம்?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் அபிராமி
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் இந்த மூன்றையும் சம அளவில் சேர்த்துத் தயாரிப்பதுதான் திரிபலா சூரணம். தென்னிந்திய சீதோஷ்ண நிலையில் வாழக்கூடிய மக்களுக்கு வரக்கூடிய பல நோய்களைத் தடுக்கும் அருமருந்து திரிபலா.
உடல் சூட்டைக் குறைக்கவும், மலச்சிக்கலைப் போக்கவும், குடலைச் சுத்தம் செய்வதற்கும், குடல்நலத்தை மேம்படுத்துவதற்கும், ரத்தத்தைச் சுத்திகரிப்பதற்கும், உடலிலுள்ள கழிவுகளை நீக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் திரிபலா சிறந்த மருந்தாக சித்த மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படுகிறது.
நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் திரிபலா சிறந்த மருந்தாகப் பயன்படும். இந்நோய்கள் உள்ளவர்களுக்கு இயல்பாகவே ஒரு சோர்வு இருக்கும். அந்தச் சோர்வைப் போக்குவதற்கும் திரிபலா நல்லது.
முதுமையால் பார்வைத் திறன் குறைவதையும் திரிபலா தடுக்கும். உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதைத் தடுக்கும் சக்தியும் இதற்கு உண்டு.
மேற்குறிப்பிட்ட நோய்கள் உள்ளவர்கள்தான் திரிபலா சூரணம் சாப்பிட வேண்டும் என்ற அவசியமில்லை. 40 வயதுக்கு மேல் வாழ்க்கைமுறையை ஆரோக்கியமாக மாற்ற நினைக்கும் யாரும், எந்த நோயும் இல்லாவிட்டாலும்கூட, திரிபலா சூரணத்தைத் அடிக்கடி சேர்த்துக்கொள்ளலாம்.
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், அரிப்பு மற்றும் சரும நோய்களை எதிர்கொள்ளவும் திரிபலா சூரணம் உதவும்.
வாரத்தில் 2, 3 முறை திரிபலா சூரணத்தை அரை டீஸ்பூன் அளவு மாலை வேளையில் வெதுவெதுப்பான் நீரில் சாப்பிடுவது நல்லது. இது அடுத்த நாள் சிரமமின்றி மலம் வெளியேறுவதற்கு உதவும். வாய்ப்புண் இருப்பவர்கள் இரவில் பல் துலக்கிய பிறகு திரிபலா சூரணம் கலந்த நீரால் வாய்க் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் விரைவில் ஆறிவிடும். வாய் சுகாதாரமும் மேம்படும்.
ரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவை உள்ளவர்கள் மற்றும் வேறு ஏதேனும் ஆங்கில மருந்துகளை உட்கொள்கிறவர்கள், திரிபலா சூரணத்தைச் சாப்பிடலாமா என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது. ஏற்கெனவே ஆங்கில மருந்துகள் எடுத்துக்கொள்வோரும் திரிபலா சூரணத்தைப் பயன்படுத்தலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
from Vikatan Latest news https://ift.tt/FalJVKu
0 Comments