Doctor Vikatan: யாரையும் தாக்கும் புற்றுநோய்... முன்கூட்டியே தெரிந்துகொள்ள டெஸ்ட் இருக்கிறதா?

Doctor Vikatan: இன்று யாருக்கு புற்றுநோய் வரும் என்றே கணிக்க முடிவதில்லை. ஒருவருக்குப் புற்றுநோய் வருமா என்பதைத் தெரிந்துகொள்ள ஏதேனும் டெஸ்ட் இருக்கிறதா?  அதை எத்தனை நாள்களுக்கொரு முறை செய்யலாம்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமார்

புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமார்

இன்று யாருக்கு புற்றுநோய் வரும் என்று துல்லியமாகக் கணிக்க முடியாவிட்டாலும்,  குறிப்பிட்ட சில  பரிசோதனைகள் மூலம் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த முடியும். சில வகையான புற்றுநோய்களை வழக்கமான பரிசோதனைகள் (Screening) மூலம் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிடலாம். அவற்றை வருடத்திற்கு ஒருமுறை செய்துகொள்வது நல்லது.

வாய் புற்றுநோய் (Oral Cancer): வருடத்திற்கு ஒருமுறை வாய்வழிப் பரிசோதனை (Oral Examination) செய்துகொள்வதன் மூலம் இதைக் கண்டறியலாம்.

தொண்டைப் புற்றுநோய் (Throat Cancer): வருடத்திற்கு ஒருமுறை இ.என்.டி (காது, மூக்கு, தொண்டை) மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

மார்பகப் புற்றுநோய் (Breast Cancer): பெண்கள் வருடத்திற்கு ஒருமுறை மேமோகிராம் (mammogram) பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறியலாம்.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் (Uterus / Cervical Cancer):
பெண்கள் வருடத்திற்கு ஒருமுறை பாப் ஸ்மியர் (Pap Smear) பரிசோதனை செய்துகொள்வது கர்ப்பப்பை  வாயில் ஏற்படும் புற்றுநோய் மாற்றங்களைக் கண்டறிய உதவும்.

நுரையீரல் புற்றுநோய் (Lung Cancer): புகைப்பழக்கம் உள்ளவர்கள், வருடத்திற்கு ஒருமுறை சிடி ஸ்கேன் (CT Scan) பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

குடல் புற்றுநோய் (Colon Cancer): மலத்தில் ரத்தம் கலந்து வருகிறதா என்பதைக் கண்டறியும் மலப் பரிசோதனை (Faecal Blood Test) மூலம் குடல் புற்றுநோயைக் கண்டறியலாம்.

புராஸ்டேட் புற்றுநோய் (Prostate Cancer):
ஆண்கள் வருடத்திற்கு ஒருமுறை பி.எஸ்.ஏ (PSA - Prostate-Specific Antigen) என்ற ரத்தப் பரிசோதனையைச் செய்துகொள்வதன் மூலம் இதைக் கண்டறியலாம்.

அனைத்து வகையான புற்றுநோய்களையும் ஆரம்பத்தில் கண்டறிவது எளிதல்ல. சிலவகை புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே ஸ்கிரீனிங் டெஸ்ட் மூலம் கண்டறிவது மிகவும் கடினம். அதாவது, மூளைப் புற்றுநோய் (Brain Cancer), வயிற்றுப் புற்றுநோய் (Stomach Cancer), கணையப் புற்றுநோய் (Pancreas Cancer), கல்லீரல் புற்றுநோய் (Liver Cancer) போன்றவை...

உடலில் அசாதாரண மாற்றங்கள் அல்லது அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

சிலவகை புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே ஸ்கிரீனிங் டெஸ்ட் மூலம் கண்டறிவது மிகவும் கடினம்.

உணவு முறையையோ அல்லது உடற்பயிற்சியையோ மாற்றாத நிலையிலும், எதிர்பாராத விதமாக உடல் எடை திடீரென குறைவது...
சருமத்தின் கீழ் புதிதாகத் தோன்றும், வலியற்ற அல்லது நாளுக்கு நாள் அளவில் பெரிதாகி வரும் கட்டிகள் மற்றும் தடிப்புகள்...
நீண்ட நாள்களாக இருக்கும் விவரிக்க முடியாத வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் அல்லது மலம் மற்றும் சிறுநீரில் ரத்தம் கலந்து போதல்... நீண்ட நாள்களாகக் குணமாகாத இருமல் அல்லது குரலில் ஏற்படும் தொடர்ச்சியான கரகரப்பு... உடலில் புதிய மச்சங்கள் தோன்றுவது அல்லது ஏற்கெனவே உள்ள மச்சங்களின் அளவு, வடிவம் மற்றும் நிறத்தில் மாற்றங்கள் ஏற்படுவது... பெண்களுக்கு மாதவிடாய் காலத்துக்கு இடைப்பட்ட நாள்களில் ஏற்படும் ரத்தப்போக்கு, அசாதாரண ரத்தப்போக்கு... போன்ற அறிகுறிகள் இருந்தால் அலர்ட் ஆகி, உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

புற்றுநோயை ஆரம்பத்திலேயே வெல்ல, தகுந்த இடைவெளியில் (வருடத்திற்கு ஒருமுறை) மருத்துவப் பரிசோதனைகளைச் செய்துகொள்வதும், உடலின் எச்சரிக்கை அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல் உடனடி கவனம் கொடுப்பதும் மிக அவசியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    



from Vikatan Latest news https://ift.tt/JlwXzEW

Post a Comment

0 Comments