Doctor Vikatan: அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் ஜூஸ் குடிக்கலாமா?

Doctor Vikatan:  எனக்கு கடந்த சில மாதங்களாக அல்சர்  எனப்படும் வயிற்றுப் புண் பிரச்னை இருக்கிறது. இந்நிலையில் திட உணவுகளாகச் சாப்பிடாமல், திரவமாக அடிக்கடி குடிக்கிறேன். அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் வெறும் வயிற்றில் ஜூஸ் குடிக்கலாமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்

பொது மருத்துவர் அருணாசலம்
பொது மருத்துவர் அருணாசலம்

எல்லா பழங்களுமே உடலுக்கு நல்லவைதாம். ஆனால், எந்தவொரு பழச்சாறும் அல்சரை குணப்படுத்தும் மருந்தாகச் செயல்படாது. அல்சர் என்பது வயிற்றில் சுரக்கும் அதிகப்படியான அமிலத்தால் (Hyperacidity) இரைப்பையில் ஏற்படும் காயம்.

அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் சில உணவுகளைத் தவிர்க்க வேண்டியது அவசியம். அந்த வகையில் காரம் மற்றும் எண்ணெய் உணவுகள், வறுத்தது, பொரித்தது, கரம் மசாலா, மிளகாய்த்தூள், வற்றல், ஊறுகாய், வத்தக்குழம்பு மற்றும் காரக்குழம்பு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.  

எலுமிச்சைப்பழச் சாறு, புளிசாதம் மற்றும் லெமன் சாதம் போன்ற புளிப்பு உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

வெறும் பழச்சாறு குடிப்பதால் மட்டும் அல்சர் குணமாகாது. மன அழுத்தமும் (Stress) அதிக அமிலச்சுரப்பிற்கு முக்கியக் காரணமாகும். எனவே, மன அழுத்தம் இல்லாமல் இருப்பதும் அல்சரைக் குறைக்க உதவும். வயிற்றில் அமிலம் அதிகமாகச் சுரக்கும்போது, தண்ணீர் அல்லது சில பழச்சாறுகளைக் குடிப்பதால் அந்த அமிலம் நீர்த்துப்போய் (Dilute), வயிறு மேலும் புண்ணாகாமல் தடுக்கப்படும்.

அல்சர் பாதிப்புள்ளவர்கள், சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை, பாட்டில் பானங்கள், நெல்லிக்காய் ஜூஸ் மற்றும் கபசுரக் குடிநீர் போன்றவற்றை வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது.

அல்சர் பாதிப்புள்ளவர்கள், சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை, பாட்டில் பானங்கள், நெல்லிக்காய் ஜூஸ் மற்றும் கபசுரக் குடிநீர் போன்றவற்றை வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது. ஆரோக்கியமாக இருப்பவர்களும் இவற்றைக் குடித்தால் அல்சர் வரக்கூடும். 

ஏற்கெனவே அல்சர் உள்ளவர்கள் குடித்தால், புண்ணின் மீது எலுமிச்சைப்பழச் சாற்றைப் பிழிந்தால் எப்படி எரியுமோ, அதேபோல வயிற்றின் உள்ளேயும் கடுமையான எரிச்சல் ஏற்படும். எனவே, சிட்ரஸ் (புளிப்புச் சுவை கொண்ட) பழச்சாறுகளைத் தவிர்ப்பது நல்லது. மற்ற பழச்சாறுகளைக் குடிப்பதில் தவறில்லை.

பழச்சாறுகள் அல்சரைக் குணப்படுத்தும் என்ற நம்பிக்கையில் எதையும் உட்கொள்ள வேண்டாம்.  முறையான சிகிச்சை எடுத்துக் கொண்டால் மட்டுமே அல்சரை முழுமையாகக் குணப்படுத்த முடியும்.

டாக்டர் அருணாசலம்:

32 ஆண்டுகள் அனுபவம் கொண்ட பொது மருத்துவரான டாக்டர் அருணாசலம், சென்னை கே.கே.நகரில் அருண் விஜயா மருத்துவமனையை நிர்வகித்து வருகிறார். 1994-ல் யு.எஸ்.எஸ்.ஆரின் மின்ஸ்க் அரசு மருத்துவக் கல்லூரியில் MD பட்டம் பெற்ற இவர், இந்திய மருத்துவக் கழகத்தின் (IMA) உறுப்பினராக இருக்கிறார்.

பொது மருத்துவம், வளரிளம் பருவத்தினருக்கான மருத்துவம் மற்றும் தடுப்பு மருத்துவம் போன்றவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Vikatan Latest news https://ift.tt/lzxkD6Q

Post a Comment

0 Comments