Doctor Vikatan: வீட்டை விட்டு வெளியே போனாலே மாஸ்க் அணியும் நண்பன்... பாதுகாப்பா... பாதிப்பா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 30 வயதாகிறது. அவன் எப்போது வீட்டை விட்டு வெளியே வந்தாலும் மாஸ்க் அணியாமல் இருக்க மாட்டான். கொரோனா காலத்தில் ஆரம்பித்த பழக்கம் இன்னும் தொடர்கிறது. இப்படி எப்போதும் மாஸ்க் அணிவது பாதுகாப்பானதா? அல்லது நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்குமா?

பதில் சொல்கிறார்  இங்கிலாந்தைச் சேர்ந்த குடும்பநல மருத்துவர் கே. பாஸ்கர்.
   

கோவிட் 19 தொற்று நோய் உச்சகட்டத்தில் இருந்தபோது, இந்தியாவில் மட்டும் லட்சக்கணக்கானோர் இறந்தார்கள். அதிகபட்சம் வயதானவர்கள் இறந்தாலும், நடுத்தர வயதினர் சிலரும், ஆரோக்கியமாக இருந்தவர்களும் கூட இறந்து போனார்கள்.

அதன் காரணமாக பெரும்பீதி பரவியது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிர் தப்பிய சிலருக்கு மூச்சுத் திணறல், தசை வலி, சிந்திக்கும் ஆற்றல் குறைபாடு போன்ற உபாதைகள் பல மாதங்களுக்குத் தொடர்ந்தன.

மருத்துவர் கே. பாஸ்கர்
மருத்துவர் கே. பாஸ்கர்

இவை எல்லாம் உங்கள் நண்பரின் மனதைப் பாதித்திருக்கலாம். ஆகையால் உங்கள் நண்பர் இன்னும் முகக்கவசத்தை அணிந்து வெளியே செல்பவராக இருக்கலாம்.

ஆனால் மற்ற காரணங்களுக்காகவும் சிலர் இன்னும் முகக்கவசம் அணிந்து கொள்கிறார்கள். அவை பின்வருமாறு :

1. தனக்கு ஏற்பட்ட தீவிர கொரோனா தொற்று.

2.  வீட்டில் யாரேனும் கொரோனா தொற்றினால் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கலாம் அல்லது யாரேனும் இறந்திருக்கலாம்.

3. தனக்கு ஆஸ்துமா நோய் இருக்கலாம். சளிப் பிடித்தால் ஆஸ்துமா மோசமாகும் என்பதைத் தடுக்கும் முயற்சியாக முகக்கவசம் அணியலாம்.

4. தனக்கோ அல்லது வீட்டில் யாருக்கோ தன்னுடல் தாக்கு நோய் (autoimmune disease)  இருந்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஒடுக்கும் மருந்துகள் ( immunosuppressants ) எடுத்துக் கொண்டிருக்கலாம்.

மாஸ்க் அணிவதால் நோய் எதிர்ப்பு சக்தி குறையாது என்றுதான் சொல்ல வேண்டும்.

5. தன்னுடைய தொற்று, பிறருக்குப் பரவக்கூடாது என்கிற நல்லெண்ணம்.

6. காற்று மாசுபாடு அதிகம் இருக்கும் நகரப்புறங்களில் முகக்கவசம் அணிவதால் நுரையீரலுக்கும் உடல் நலத்திற்கும் நன்மை.

7. ஓசிடி (Obsessive compulsive disorder) என்னும் தூசி மீது அளவுக்கு அதிகமான வெறுப்பு, பயம் ஏற்படுத்தும் பதற்றக் கோளாறு.

மாஸ்க் அணிவதால் நோய் எதிர்ப்புச் சக்தி குறையாது என்றுதான் சொல்ல வேண்டும். மாஸ்க் அணிந்து கொள்வதால் எந்தக் கிருமியும் தூசியும் நம்மை அணுகாது, பிறகு எப்படி நமக்கு எதிர்ப்புச் சக்தி வரும் என்னும் சந்தேகத்தால் கேட்கப்படும் கேள்வி இது.


உங்கள் நண்பருக்கு வயது 30. அவருக்கு முந்தைய தொற்று மற்றும் தடுப்பூசிகள் மூலமாக ஏற்பட்ட நோய் எதிர்ப்பு மண்டலத்தின் நினைவாற்றல் ( immune memory) இன்னும் இயங்கிக் கொண்டுதான் இருக்கும். மாஸ்க் அணிவதால் பெரிய தூசிகள், காற்றில் உள்ள கிருமிகள், சில அலர்ஜி ஏற்படுத்தும் மகரந்தங்கள் போன்றவை தடுக்கப்படுமே தவிர, எதிர்ப்புச் சக்தி குறையும் வாய்ப்பு இல்லை.

மாஸ்க் அணிவதால் ஏதும் பிரச்னைகள் வருமா என்று கேட்டால், சிலருக்கு வரலாம். முகக்கவசத்தால் வியர்வை ஏற்பட்டு, ஈரப்பதம் உள்ளுக்குள்ளேயே தங்கி, அதனால் சரும நோய்கள், அரிப்பு, முகப்பரு போன்றவை ஏற்படலாம்.

வெறும் துணியால் செய்த மாஸ்க்கை அணிவதால் மிகக் குறைந்த பயன்தான் கிடைக்கும். பெரிய தூசித் துகள்களை அது கட்டுப்படுத்தலாம். டாக்டர்கள் அணியும் சர்ஜிக்கல் மாஸ்க் கொஞ்சம் தளர்வாகவும், பயன்படுத்த எளிதாகவும் இருக்கும். அது மிதமான பாதுகாப்பை மட்டுமே அளிக்கும். கிருமிகள், மெல்லிய தூசிகள் மற்றும் வேறுபட்ட காற்றில் உள்ள மாசுகளை அதிகபட்சமாகத் தடுக்க வேண்டுமென்றால் N95, FFP2, FFP3 போன்ற மாஸ்க்குகளை உபயோகப்படுத்த வேண்டும்.

மாஸ்க் அணிவதால் பெரிய தூசிகள், காற்றில் உள்ள கிருமிகள், சில அலர்ஜி ஏற்படுத்தும் மகரந்தங்கள் போன்றவை தடுக்கப்படுமே தவிர, எதிர்ப்பு சக்தி குறையும் வாய்ப்பு இல்லை.

உங்கள் நண்பரிடம் இவற்றைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர் மாஸ்க் அணியும் காரணத்தை அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். முகக்கவசம் அணிந்தே ஆக வேண்டும் என்று யாரேனும் நினைத்தால், ஆஸ்பத்திரிக்குப் போகும் நேரங்களில் அல்லது மருந்துக் கடைகளுக்குச் செல்லும் நேரங்களில் உபயோகித்தால், உங்கள் தொற்று மற்றவருக்கும், மற்றவர்கள் தொற்று உங்களுக்கும் பரவாமல் இருக்கும்.

மேலும், கூட்ட நெரிசல் அதிகமுள்ள இடங்களில், குறிப்பாக யாரேனும் இருமிக் கொண்டிருக்கிறார்கள் என்றால், நீங்கள் முகக்கவசம் அணிந்து கொள்வதால் பயன் உண்டு. மற்றபடி காற்றோட்டமுள்ள இடங்களிலும் அதிக நெரிசல் இல்லாத  இடங்களிலும் ஆரோக்கியமானவர்கள் மாஸ்க் அணிவது தேவையற்றது.

Disclaimer: இது ஒரு பொதுவான மருத்துவ அறிவுரை அல்லது கருத்து. உங்களுக்கு ஏதேனும் நோய் இருந்து நீங்கள் மாஸ்க் அணிய வேண்டுமா இல்லையா என்பதை உங்கள் மருத்துவரிடம் கேட்டு ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.

டாக்டர் பாஸ்கர்:

இங்கிலாந்தில் 22 வருடங்களாக குடும்பநல மருத்துவராகப் பணிபுரிந்து வருபவர். தமிழ்நாட்டில் MBBS, MD படித்துவிட்டு இங்கிலாந்தில் MRCGP பட்டம் முடித்திருப்பவர்.


உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 
  



from Vikatan Latest news https://ift.tt/mhwB91V

Post a Comment

0 Comments