Doctor Vikatan: பாலிவுட் நடிகை ஷர்மிளா தாகூருக்கு நுரையீரல் புற்றுநோய் பாதித்து அதிலிருந்து அவர் மீண்டதாக சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். புகைப் பழக்கம் உள்ளவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வருவதாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்தப் பழக்கம் இல்லாத, பெண்களுக்கும் இந்தப் பிரச்னை வருமா... இதை எப்படிப் புரிந்துகொள்வது?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமார்.

நடிகை ஷர்மிளா தாகூருக்கு நுரையீரல் புற்றுநோய் கண்டறியப்பட்ட சம்பவம், சிகரெட் பழக்கம் இல்லாத பெண்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் வருமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இந்தச் சம்பவம், நுரையீரல் புற்றுநோய்க்குப் புகைப்பழக்கம் முதன்மையான காரணம் என்றாலும், அதுமட்டுமே ஒரே காரணி அல்ல என்பதையும் அழுத்திச் சொல்லியிருக்கிறது.
இந்தியாவில் புகைப்பழக்கம் இல்லாத பெண்களுக்கு EGFR மரபணு மாற்றம் காரணமாக Adenocarcinoma வகை நுரையீரல் புற்றுநோய் வருவது அதிகரித்து வருகிறது. புகைப்பழக்கம் இல்லாத பெண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வர முக்கிய காரணங்கள் பல உள்ளன.
இரண்டாம் நிலை புகை (Second-hand smoke): கணவர் அல்லது குடும்பத்தினர் வீட்டுக்குள் தொடர்ச்சியாகப் புகை பிடிக்கும்போது, அருகில் இருக்கும் நபர், புகை பிடிக்காமலேயே அதன் பாதிப்புக்கு உள்ளாகிறார்.
சமையலறை புகை: விறகு, கரி, சாணி, மண்ணெண்ணெய் அடுப்புகளின் புகையும் இந்தப் பிரச்னைக்கான முக்கிய காரணமாகிறது. கேஸ் அடுப்பாக இருந்தாலும், சிறிய ஜன்னல் இல்லாத அறையில் தாளிப்பு மற்றும் எண்ணெய்ப் புகையை தினமும் சுவாசிப்பது ஆபத்தை அதிகரிக்கிறது.

வீட்டுக்குள் சுற்றும் புகை: சாம்பிராணி, ஊதுவத்தி மற்றும் கொசுவத்திச் சுருள் ஆகியவற்றின் புகை ஆபத்தானது. மூடிய அறையில் ஊதுவத்தி கொளுத்துவது ஒரு சிகரெட் புகைக்குச் சமம். அஸ்பெஸ்டாஸ் (Asbestos) கூரை வீடுகளும் இன்னொரு காரணம்.
காற்று மாசு: வெளியில் உள்ள வாகனப் புகையும் அதிகம் பாதிக்கிறது.
பழைய காசநோய் தழும்பு (TB Scar): காசநோய் வந்து குணமான பிறகும் நுரையீரலில் இருக்கும் தழும்பிலிருந்து 10–15 ஆண்டுகள் கழித்து புற்றுநோய் உருவாக வாய்ப்புள்ளது.
மரபணு மாற்றம் (EGFR Mutation): பிறவியிலேயே ஏற்படும் ஜீன் மாற்றம் காரணமாக 'Adenocarcinoma' என்ற வகை புற்றுநோய் ஏற்படுகிறது. இது இந்தியப் பெண்களுக்கு அதிகம் காணப்படுகிறது.
நுரையீரல் புற்றுநோய்க்கென முக்கிய அறிகுறிகள் சில உள்ளன. அவற்றைச் சாதாரணமாக நினைத்து அலட்சியப்படுத்தக் கூடாது. அந்த வகையில் 3 வாரங்களுக்கு மேலாகத் தொடரும் இருமல் (மருந்து சாப்பிட்டும் சரியாகாத நிலை), நடக்கும்போது ஏற்படும் மூச்சுத்திணறல், முதுகு அல்லது தோள்பட்டை வலி, திடீர் எடைக் குறைவு மற்றும் பசியின்மை, குரல் கரகரப்பு, மீண்டும் மீண்டும் சளி பிடிப்பது அல்லது நிமோனியா வருவது போன்ற அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் உடனடி மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் அவசியம். அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் முழுமையாகக் குணப்படுத்த முடியும்.
சமையலறையில் எக்ஸாஸ்ட் ஃபேன் (Exhaust fan) பொருத்துவதும் போதுமான ஜன்னல் வசதி இருக்குமாறு பார்த்துக்கொள்வதும் அவசியம்.
சமைத்த பிறகு 10 நிமிடங்களுக்கு மேல் புகை உள்ளே தங்கக் கூடாது. யாரையும் புகை பிடிக்க அனுமதிக்கக் கூடாது. சாம்பிராணி மற்றும் ஊதுவத்தி பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
டாக்டர் கிருஷ்ணகுமார்:
சென்னை, காமாட்சி மெமோரியல் மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை மருத்துவர்... இத்துறையில் 30 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
from Vikatan Latest news https://ift.tt/ztP0B4J
0 Comments