கம்பீரமாக நிமிர்கிறது தலைமுறை..!

 

"சபாஷ்" ஸ்டாலின்.. நரிக்குறவ பெண் தனலட்சுமிக்கு "தில்"லை பாருங்க.. கம்பீரமாக நிமிர்கிறது தலைமுறை..!




சென்னை: முதல்வர் ஸ்டாலின் முன்னெடுத்த ஒரு விவகாரம், இன்று ஒரு இனத்தின் விடியலின் துவக்கத்திற்கு அஸ்திவாரமிட்டுள்ளது..

சமீபத்தில் வெளிவந்த ஜெய்பீம் படம் மிகப்பெரிய தாக்கத்தை அடித்தட்டு மக்களின் மனதில் ஏற்படுத்தியது.. அந்த சமயத்தில்தான், தங்களுக்கான உரிமைகள் தேவை என்று நரிக்குறவ இனத்தை சேர்ந்த அஸ்வினி என்ற பெண் மக்களின் கவனத்தை மட்டுமல்லாமல், தமிழக அரசின் கவனத்தையும் திருப்பினார்.

இதையடுத்து அஸ்வினி வீட்டுக்கு நேரில் சென்ற முதல்வர், நம்பிக்கை வார்த்தைகளை கூறினார்.. தொடர்ந்து மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள நரிக்குறவர்கள், இருளர் இனச் சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, நிலப்பட்டா, நலவாரிய அடையாள அட்டை என அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்...

அதுமட்டுமல்லாமல், அவர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளிலும் நேரடியாக ஆய்வும் செய்தார்.. இதற்கு பிறகு ஏராளமான திமுக பிரமுகர்கள், நரிக்குறவ சமுதாயத்துக்கு உதவிகளை செய்ய ஆரம்பித்துள்ளனர்.. இப்போது விஷயம் என்னவென்றால், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை முதல்வர் அன்று வழங்கியிருந்தது, இன்று மிகப்பெரிய தெம்பை அந்த இன மக்களுக்கு ஏற்படுத்தி உள்ளது.

இதோ நரிக்குறவ காலனியை சேர்ந்த தனலட்சுமி என்ற பெண் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.. ஆவடி மாநகராட்சி 26வது வார்டு உறுப்பினர் பதவிக்கு திருமுல்லைவாயில் ஜெயா நகரில் தனலட்சுமி போட்டியிட போகிறார்.. இவர் வேட்புமனுவை தாக்கல் செய்ய வரும்போதே 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர்களுடன் ஆரவாரமாக கிளம்பி வந்தார்.. அவர்கள் அனைவருமே தங்கள் கையில் பட்டா மற்றும் அடையாள அட்டை வழங்கிய முதல்வருக்கு நன்றி என்ற வாசகத்தை உயர்த்தி பிடித்திருந்தனர்..

ஜெய்பீம் படத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த சூர்யா அவருக்கு நன்றி இது போன்ற பல வாசகங்களுடன் கையில் ஏந்தி வந்திருந்தனர்.. இவர்களுக்கு புதிய ராணுவ சாலையில் மேளதாளம் முழங்க, பாட்டு பாடி நடனமாடி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.. இதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தனலட்சுமி பூரித்து போய் சொன்னதாவது:

'நரிக்குறவ மக்களுக்கு பட்டா அடையாள அட்டை முதல்வர் ஸ்டாலின் வழங்கியதற்கு எங்களுடைய நன்றி.. அதேபோன்று எங்கள் பகுதியில் உள்ள வீடுகளில் தரம் உயர்த்தவும் பட்டா வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் .. எனக்கு இந்த தேர்தலில் வாக்களித்தால் எங்கள் பகுதியில் உள்ள பொது மக்களுக்கு என்னால் முடிந்த அனைத்து சேவைகளையும் முறையாக செய்வேன்' என்றார்.

Post a Comment

0 Comments