https://gumlet.assettype.com/vikatan/2022-02/85cf61f3-abfc-48ef-8117-c878a2c9d6d9/IMG_20220228_225928.jpgநள்ளிரவில் சி.வி.சண்முகத்தை கைது செய்ய நடவடிக்கையா?! - குவிந்த தொண்டர்கள்... நடந்தது என்ன?

அண்மை மாதங்களாக, அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீது மேற்கொள்ளப்படும் ஒழுங்கு நடவடிக்கைகள் தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாகி, அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அண்மையில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்ட சம்பவம், அதிமுக-வினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (28.02.2022) தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவின் முக்கிய தலைவர்களால் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நள்ளிரவில் குவிந்த அதிமுப தொண்டர்கள்

அதன்படி விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தலைமை தாங்கி பேசியிருந்தார் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம். அப்போது, ``கைதுக்காக அதிமுக இந்த ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. கைது செய்வதை எண்ணி அதிமுக என்றும் பயப்படாது. சிறை என்பது எங்களுக்குப் புதிதல்ல. உங்கள் பூச்சாண்டியை கண்டு அதிமுக-வினர் பயப்பட மாட்டோம்.

அடுத்த குறியாக, சி.வி.சண்முகம் தான் கைது செய்யப்படுவார்... என்று செய்திகள் உலாவியதை பார்த்தேன். பண்ணிக்கோ...! இந்த கைதுக்கெல்லாம் அஞ்சுபவர்கள் நாங்கள் இல்லை. எப்போது வேண்டுமானாலும் தாராளமாக வரலாம். இரவு 3 மணிக்கு வருவது, விடியல் காலையில் வருவதெல்லாம் வேண்டாம். அப்பாயின்மென்ட் சொல்லிட்டே வரலாம். வேட்டி, சட்டை கட்டி ரெடியாக இருக்கிறோம்." என்று காட்டமாகவும் விரிவாகவும் பேசியிருந்தார் அவர்.

இராதாகிருஷ்ணன்

இந்நிலையில், சி.வி.சண்முகம் கைது செய்யப்பட்டலாம் என நேற்று இரவு 10 மணிக்கு மேல் உறுதிபடுத்தப்படாத தகவல்கள் ஒன்று வெளியானது. இந்த தகவலை கொண்டு திண்டிவனத்தில் உள்ள சி.வி.சண்முகம் வீட்டின் முன்பு அதிமுக தொண்டர்கள் நள்ளிரவில் அடுத்தடுத்து சிறிது நேரத்திலேயே 200க்கும் மேற்பட்டோர் வந்து சேர்ந்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அரசு ஒப்பந்த பணிகளை எடுத்து செய்து வந்த தீபம்குமார், சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அரசு ஒப்பந்த பணி செய்த தீபம் குமாரை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஏமாற்றியதாலே தற்கொலை செய்து கொண்டதாக, தீபம் குமாரின் சகோதரர் திண்டிவனம் காவல் நிலையத்தில் அளித்ததாக கூறப்படும் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கைது செய்யலாம் என்ற கருத்துக்களும் வட்டமடித்தன.

சி.வி.சண்முகம் இல்லம்

இந்த பதற்றமான சூழலில் சி.வி.சண்முகத்தின் சகோதரர் இராதாகிருஷ்ணன், அங்கு கூடியிருந்த தொண்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்து அங்கு வந்த சி.வி.சண்முகம், "ஒன்றுமில்லை கலைந்து செல்லுங்கள். வந்தால்... இப்போதெல்லாம் வரமாட்டார்கள்" என்று கூறி கூட்டத்தை கலைந்து செல்லும்படி கூறினார். அதன் தொடர்ச்சியாக கூட்டம் மெல்ல மெல்ல கலைந்து சென்றது. நள்ளிரவில் நடந்த இச்சம்பவம் விழுப்புரம் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



from Latest News https://ift.tt/MdKZSw7

Post a Comment

0 Comments