https://ift.tt/HmnGozE Vikatan: மலச்சிக்கல் பிரச்னையால் கர்ப்பப்பை இறக்கம் ஏற்படுமா?

கர்ப்பகாலத்தில் மலச்சிக்கல் பிரச்னையால் மிகுந்த அவதிப்பட்டேன். பிரசவத்துக்குப் பிறகும் அது தொடர்கிறது. இப்படியே தொடர்ந்தால் கர்ப்பப்பை இறக்கத்தில் கொண்டுபோய் விடும் என்கிறார்கள். உண்மையா? இதை எப்படித் தவிர்ப்பது?

- சித்ரா (விகடன் இணையத்திலிருந்து)

டாக்டர் கார்த்திகா

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவரும், லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சை நிபுணருமான ஆர். கார்த்திகா.

``மலச்சிக்கல் பிரச்னை உள்ள பல பெண்களுக்கும் கர்ப்பப்பை இறங்கிவிடுமா என்பதுதான் கேள்வியாக இருக்கிறது. மலச்சிக்கல் பிரச்னை இருக்கும்போது முக்கி, மிகவும் சிரமப்பட்டு மலம் கழிக்க வேண்டியிருக்கும். ஹெர்னியா எனப்படும் குடலிறக்கம் அல்லது கர்ப்பப்பை அடி இறக்கம் போன்ற பிரச்னைகள் உள்ளவர்களுக்கு வயிற்றுக்கு அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்துவோம். அப்படி வயிற்றில் அழுத்தம் கொடுக்கப்படும்போது அது உள்ளே உள்ள உறுப்புகளை வெளியே தள்ள முயற்சி செய்யும்.

மலம் கழிக்க சிரமப்படும்போது, ஏற்கெனவே குடலிறக்கம், கர்ப்பப்பை அடி இறக்கம் பிரச்னைகள் உள்ளவர்களுக்கு அது தீவிரமாகலாம்.

இதுவரை பிரச்னை இல்லாதவர்களுக்கு புதிதாக அந்தப் பிரச்னை வருமா என்றால் அதற்கும் வாய்ப்பிருக்கிறது. அதனால்தான் இருமல் மற்றும் மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்களுக்கும், அதிக எடை தூக்குபவர்களுக்கும் இது குறித்து எச்சரிக்கை கொடுக்கப்படுகிறது.

Woman (Representational Image)

உங்களுக்குள்ள மலச்சிக்கல் பிரச்னைக்கு மருத்துவரை அணுகி, முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். நார்ச்சத்துள்ள உணவு, நிறைய தண்ணீர் குடிப்பது, உடற்பயிற்சி போன்றவற்றைப் பின்பற்றி, மலச்சிக்கலில் இருந்து விடுபடும் வழிகளைப் பாருங்கள்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?


from Latest News https://ift.tt/cn4iSAr

Post a Comment

0 Comments