பாஜக கவுன்சிலர்கள் ஆதரவுடன் குமரியில் 4-ல் 3 நகராட்சிகளை கைப்பற்றிய திமுக போட்டி வேட்பாளர்கள்!

குழித்துறை நகராட்சி

கன்னியாகுமரி மாவட்டத்தின் குழித்துறை நகராட்சி சேர்மன் வேட்பாளராக பெர்லின் ஷீபாவை அறிவித்திருந்தது கட்சி தலைமை. இந்த நிலையில் குழித்துறை நகர தி.மு.க செயலாளர் பொன் ஆசைத்தம்பி அவரை எதிர்த்து போட்டியிட்டார். முதலில் நடைபெற்ற சேர்மன் மறைமுக தேர்தலில் தி.மு.க தலைமை அறிவித்த வேட்பாளர் பெர்லின் ஷீபா, தி.மு.க போட்டி வேட்பாளர் பொன் ஆசைத்தம்பி, காங்கிரஸ் சார்பில் பிரபின் ராஜா ஆகியோர் போட்டியிட்டனர்.

குழித்துறை நகராட்சி சேர்மன் பொன் ஆசைத்தம்பி

அதில் தி.மு.க தலைமை அறிவித்த வேட்பாளர் பெர்லின் ஷீபா 9 ஓட்டுகளும், தி.மு.க போட்டி வேட்பாளர் பொன் ஆசைத்தம்பி 10 ஓட்டுகளும், காங்கிரஸ் வேட்பாளரான பிரபின் ராஜா 2 ஓட்டுகளும் பெற்றனர். யாருக்கும் 11 வாக்குகள் கிடைக்கவில்லை என்பதால் மீண்டும் தேர்தல் நடந்தது.

அதில் தி.மு.க வேட்பாளர் பெர்லின் ஷீபா, தி.மு.க போட்டி வேட்பாளர் பொன் ஆசைத்தம்பி ஆகியோர் போட்டியிட்டனர். அதில் பொன் ஆசைத்தம்பி 12 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். பெர்லின் ஷீபா 9 ஓட்டுகள் பெற்றார். கன்னியாகுமரி மாவட்டத்தில் தி.மு.க தலைமை அறிவித்த வேட்பாளைரை வீழ்த்தி, தி.மு.க போட்டி வேட்பாளரான பொன் ஆசைத்தம்பி வெற்றிபெற்றார்.

குளச்சல் நகராட்சி

நசீர்

அதுபோல குளச்சல் நகராட்சியில் தி.மு.க சார்பில் ஜான்சன் சார்லஸ் என்பவர் தலைமையால் அறிவிக்கப்பட்டார். ஆனால் தி.மு.க போட்டி வேட்பாளரான நசீர் வெற்றிபெற்றார். குளச்சலில் மொத்தமுள்ள 24 கவுன்சிலர்களில் நசீர் மற்றும் ஜான்சன் சார்லஸ் ஆகியோர் தலா 12 ஓட்டுகள் பெற்றனர். இதையடுத்து நடந்த குலுக்கலில் நசீர் வெற்றிபெற்றார். குளச்சல் மற்றும் குழித்துறை நகராட்சியில் தி.மு.க போட்டி வேட்பாளர்கள் பா.ஜ.க ஆதரவுடன் சேர்மன் பதவியை கைப்பற்றியுள்ளனர்.

குழித்துறை நகராட்சி சேர்மனாக வெற்றிபெற்றுள்ள பொன் ஆசைத்தம்பி, குளச்சல் சேர்மன் பதவியை கைப்பற்றிய நசீர் ஆகியோர் இதற்கு முன்பு நகராட்சி சேர்மன் பதவியில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்லங்கோடு நகராட்சி

கொல்லங்கோடு நகராட்சி சேர்மன் ராணி

கொல்லங்கோடு நகராட்சியில் அனைத்து கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டனர். இந்த நிலையில் தி.மு.க கூட்டணியில் சி.பி.எம் கட்சிக்கு கொல்லங்கோடு நகராட்சி ஒதுக்கப்பட்டது. ஆனால் தி.மு.க போட்டியாக களம் இறங்கியது. சி.பி.எம் வேட்பாளராக லலிதா, தி.மு.க சார்பில் ராணி, பா.ஜ.க சார்பில் சுதா ஆகியோர் போட்டியிட்டனர். இதில் சி.பி.எம் லலிதா 10 ஓட்டுகளும், தி.மு.க ராணி 18 ஓட்டுகளும், பா.ஜ.க சுதா 5 ஓட்டுகளும் பெற்றார். இதில் தி.மு.க வேட்பாளர் ராணி வெற்றிபெற்றார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளையும் தி.மு.க கைப்பற்றியுள்ளது. பத்மநாபுரத்தில் தி.மு.க தலைமை அறிவித்த அருள் சோபன் வெற்றிபெற்றார். குளச்சல், குழித்துறை, கொல்லங்கோடு நகராட்சிகளில் போட்டி தி.மு.க வேட்பாளர்களே வெற்றிபெற்றுள்ளனர்.



from Latest News https://ift.tt/4zVJ7HO

Post a Comment

0 Comments