ஆந்திரா: இரண்டு மாதங்களில் 7 முறை விற்கப்பட்ட குழந்தை - அதிர்ச்சியளிக்கும் சங்கிலித் தொடர் விற்பனை!

கடந்த இரண்டு மாதங்களில் 7 முறை விற்கப்பட்ட பெண் குழந்தை பற்றிய அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆந்திர மாநில குண்டூர் மாவட்டத்தில் உள்ள மங்களகிரி பகுதியைச் சேர்ந்த மெடபலிமி மனோஜ் தம்பதிக்கு மூன்றாவதாகப் பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆண் குழந்தையை எதிர்பார்த்த இந்த தம்பதி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இந்த குழந்தையை விற்க தாய், தந்தை இருவரும் ஒப்புக்கொண்டதாகவும், அதன் பின் மனோஜ் மனைவி வேண்டாம் என எதிர்த்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மனைவியின் விருப்பத்தை மீறி குழந்தையை விற்க முடிவு செய்துள்ளார் மனோஜ். மிக்கிலி நாகலட்சுமி என்ற பெண்ணின் உதவியுடன் தெலங்கானாவில் உள்ள நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள கொண்டப்ரோலு கிராமத்தைச் சேர்ந்த மேகவத் காயத்ரி என்பவருக்கு ரூ.70,000-க்கு விற்றுள்ளனர். காயத்ரி, நல்கொண்டா மாவட்டம், பால்காட் கிராமத்தில் உள்ள லம்பாடி தேவாலா தாண்டாவைச் சேர்ந்த பூக்யா நந்து என்பவருக்குக் குழந்தையை ரூ.1,20,000-க்கு விற்றுள்ளார்.

ஆந்திரா

அங்கிருந்து நந்து தனது உறவினரான புக்யா பாலவர்த்தி ராஜுவின் உதவியுடன் குழந்தையை ஹைதராபாத்தில் உள்ள தில்சுக் நகர்ப் பகுதியைச் சேர்ந்த எஸ்.கே.நூர்ஜஹான் என்பவருக்கு ரூ.1,87,000-க்கு விற்றிருக்கிறார். நூர்ஜஹான் தனது தொடர்புகளுடன், கம்மத்தைச் சேர்ந்த அனுபோஜு கிரண் என்பவரின் உதவியுடன், ஹைதராபாத்தில் உள்ள நாராயணகுடாவில் வசிக்கும் பொம்மடா உமா தேவி என்பவருக்கு குழந்தையை விற்றுள்ளார்.

அதன்பின் விஜயவாடாவைச் சேர்ந்த படலா ஸ்ரவாணி என்ற பெண்ணுக்கு உமா தேவி ரூ.2,00,000க்கு விற்றுள்ளார். ஸ்ரவாணி மீண்டும் குழந்தையை விஜயவாடாவில் உள்ள கொல்லப்புடி பகுதியைச் சேர்ந்த கரிகாமுக்கு விஜயலட்சுமி என்பவருக்கு ரூ.2,20,000க்கு விற்றுள்ளார். இறுதியாக விஜயலட்சுமி அந்த குழந்தையை மேற்கு கோதாவரி மாவட்டம் ஏலூரை சேர்ந்த வர்ரே ரமேஷ் என்பவருக்கு ரூ.2,50,000க்கு விற்றுள்ளார்.

குழந்தை

சிறுமியை விற்ற மனோஜுக்கு எதிராக அவரின் மாமியார் தனது மகளுடன் சேர்ந்து போலீஸில் புகார் அளித்தார். இந்த இந்த வழக்கை விசாரிக்க மங்களகிரி டி.எஸ்.பி., ராம்பாபு, ஆய்வாளர் அங்கம்மா ராவ், எஸ்.ஐ., நாராயணா உள்ளிட்ட போலீஸார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. குழந்தையின் தந்தை தொடங்கி, சங்கிலித் தொடராக ஒவ்வொரு இணைப்பையும் காவல்துறை கண்டுபிடித்து, குழந்தை விற்பது தொடர்பான வழக்கில் 11 பேரை கைது செய்துள்ளனர். மீட்கப்பட்ட பெண் குழந்தை தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.

குழந்தை இல்லாத தம்பதிகளைக் குறிவைத்து, புதிதாகப் பிறந்த குழந்தைகளைக் குழந்தையைத் தத்தெடுக்கத் தயாராக இருப்பவர்களுக்கு விற்பதே இந்த கட்டமைப்பின் செயல்பாடாகும் என்று ஆய்வாளர் அங்கம்மா ராவ் கூறினார்.

காவல்துறை

காவலர்களின் கூற்றுப்படி, குழந்தையை முதலில் தந்தை ரூ.70,000க்கு விற்றார், ஏழாவது கைமாறும் போது அந்தக் குழந்தை ரூ.2,50,000-க்கு விற்கப்பட்டது அதிர்ச்சியளிக்கும் செய்தியாக வலம் வருகிறது.



from Latest News https://ift.tt/uIl4HiF

Post a Comment

0 Comments