டெல்டா மாவட்டங்களில் அதிகரிக்கும் போதைப்பொருள்கள்; சீரழியும் மாணவர்கள்... திருவாரூரில் ஒருவர் கைது

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் சமீபகாலமாக போதைப்பொருளின் விநியோகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இவை எளிதாக கிடைப்பதால், இளைஞர்கள் மட்டுமல்லாமல் பள்ளிக்கூட மாணவர்கள் பலரும் கூட, போதைப்பொருள்கள் பழக்கத்திற்கு அடிமையாகி வருவதோடு, குற்றச் செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால், போதைப்பொருள்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில்தான் திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமாரின் அதிரடி நடவடிக்கையால், ஏராளமான குட்கா, ஹான்ஸ், புகையிலை உள்ளிட்ட போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதோடு, இவைகளை தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டிருப்பது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேசும் திருவாரூர் காவல்துறையினர், ``மாவட்டத்தில் சட்டவிரோதமாக நடைபெற்று வரும் போதைப் பொருள்களின் விநியோகத்தை ஒழிக்க, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் நேரடி பார்வையில் திருவாரூர் மாவட்ட தனிப்படையினர் மாவட்டம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

போதைப்பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இடம், விநியோகம் செய்யும் வியாபாரிகள், ரகசியமாக விற்பனை செய்யக்கூடிய கடைகள் குறித்து பொதுமக்கள் தெரிவிக்கும் தகவல்களின் அடிப்படையிலும், தனிப்படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் தான் திருவாரூர் நகர காவல் சரகத்திற்கு உட்பட்ட விஜயபுரம் பகுதியைச் சேர்ந்த மணிராஜ் என்பவர் வீட்டில் தனிப்படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

மணிராஜ்

அங்கு சாக்கு மூட்டையில் மறைத்து வைத்திருந்த ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் விலை மதிப்புள்ள 295 கிலோ குட்கா, ஹான்ஸ், புகையிலை மசாலா உள்ளிட்டவைகள் கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டதோடு, மணிராஜ் மீது வழக்கு பதிவு .செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்’’ என தெரிவித்தனர். திருவாரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இதுபோன்ற குற்றச்செயல்களில் யாராவது ஈடுபட்டால், அவர்கள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு, அவர்கள் மீதும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் எச்சரிக்கை செய்துள்ளார். தற்போது விஜயபுரம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள்கள் கண்டுபிடித்து பறிமுதல் செய்த தனிப்படை காவல்துறையினருக்கு விஜயகுமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/ew8oEfd

Post a Comment

0 Comments