புனே மெட்ரோ: தொடங்கி வைத்து டிக்கெட் எடுத்து பயணித்த பிரதமர்! -தேர்தலுக்காக முன்கூட்டியே திறப்பு?!

புனேயில் 32.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக 12 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டம் முடிக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.11,400 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக செயல்படத் தொடங்கப்பட்டுவிடும் என்று புனே மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது முடிக்கப்பட்டுள்ள 12 கிலோமீட்டர் மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11.30 மணிக்கு புனே கார்வாரே மெட்ரோ ரயில் நிலையத்தில் தொடங்கி வைத்தார்.

அதோடு பிரதமர் நரேந்திர மோடி அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி ஒன்றையும் திறந்து வைத்தார். மேலும் டிக்கெட் எடுத்துக்கொண்டு மெட்ரோ ரயிலில் பள்ளி குழந்தைகள் மற்றும் அதிகாரிகளுடன் பயணம் செய்தார். மோடி டிக்கெட் கவுன்டரில் நின்று டிக்கெட் பெறும் புகைப்படம் வரலாக பரவி வருகிறது.

மாணவர்களுடன் மோடி

மெட்ரோ பயணத்தின் போது பள்ளி குழந்தைகளுடன் உரையாடியபடி மோடி சென்றார். மெட்ரோ ரயிலில் பயணம் செய்தது தொடர்பான புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு இளம் நண்பர்களுடன் மெட்ரோ பயணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக புனே மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சிலையை திறந்து வைத்தார். இது தவிர புனேயில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்து அடிக்கல்லும் நாட்டினார்.

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார், முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நவிஸ், ஆளுநர் கொஷாரிய உட்பட பலரும் இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். புனே உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு விரைவில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட இருக்கிறது. எனவேதான் இத்திட்டம் பாதி முடிக்கப்பட்ட நிலையில் பயணிகள் போக்குவரத்திற்கு திறக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். புனே மாநகராட்சியை பாஜக ஆட்சி செய்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தான், தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் திட்டத்திற்கு கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டிய திட்டத்தை அவர் கையாலேயே திறந்து வைத்துள்ளார்.

மாணவர்களுடன் உரையாடும் மோடி

ஆனால் தற்போது திறக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் திட்டம் முழுமையாக முடிக்கப்படும் முன்பாக திறக்கப்படுவதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். உக்ரைனில் மாணவர்கள் சிக்கித்தவிக்கும் நிலையில் முழுமையாக முடிக்கப்படாத மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதாக சரத்பவார் சாடினார்.



from Latest News https://ift.tt/3kcpD6x

Post a Comment

0 Comments