திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் பகுதியை சேர்ந்தவர் பழனி 35. இவரின் மனைவியின் பெயர் ராணி(28) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் பிள்ளைகள், இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். சோஃபா செய்யும் தொழிலுக்காக சென்னையில் தங்கி வேலை செய்து வருகிறாராம் பழனி. இவர் கீழ்பென்னாத்தூரில் உள்ள அவரின் வீட்டிற்கு வரும்போதெல்லாம் குடும்பப் பிரச்னையை மையப்படுத்தி கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை வருமாம். அதன் பின்னர் சென்னைக்கு கிளம்பி விடுவாராம் பழனி.
இந்த தம்பதியின் இரண்டு மகன்கள், ஒரு மகள் பள்ளிக்கு செல்கின்றனர். நான்கு வயதேயான நீலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மட்டும் தன் தாயாருடன் இருந்து வந்துள்ளார். பழனி - ராணி தம்பதிக்கு நான்கு குழந்தைகள் என்ற போதிலும் கடைசி பெண் குழந்தை நீலா மீதே பழனிக்கு அதிக பாசமாம். அதனால் தன் கணவன் மீதான குடும்ப பிரச்னையை மனதில் வைத்து கத்தியை நெருப்பில் காய்ச்சியும், தீக்குச்சிகளை கொண்டும் தான் பெற்றெடுத்த குழந்தை என்றும் பாராமல் 4 வயது சிறுமி நீலாவின் உடலில் ராணி அடிக்கடி சூடு வைத்து சித்திரவதை செய்து வந்துள்ளார்.
இதுகுறித்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு சைல்டு லைன் '1098'க்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் கீழ்பென்னாத்தூர் போலீஸார் உதவியுடன், சிறுமி நீலாவின் வீட்டிற்கு நேற்று (05.03.2022) சென்று விசாரணை நடத்தியுள்ளனர் சைல்டு லைன் அதிகாரிகள். அப்போது, குடும்ப பிரச்னையின் காரணமாகவே குழந்தைக்கு சூடு வைத்ததாக தாய் ராணி ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி நீலாவை மீட்ட அதிகாரிகள், திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததோடு, குழந்தைகள் நல குழுமத்திற்கும் தகவல் அளித்துள்ளனர். குழந்தை துன்புறுத்தப்பட்டது தொடர்பான புகாரின் அடிப்படையில், ராணியை கைது செய்த கீழ்பென்னாத்தூர் காவல்துறை அதிகாரிகள் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். குடும்ப தகராறின் காரணமாக பெற்ற குழந்தையையே தாய் ஒருவர் கொடூரமான முறையில் சூடு வைத்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
from Latest News https://ift.tt/v4WT1V7
0 Comments