கோவை மக்களின் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்ய அறிமுகப்படுத்தியுள்ள, 24*7 சேவை மையத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``கோவை மக்களின் அடிப்படை பிரச்னைகளை நிவர்த்தி செய்ய, 24 மணி நேர உதவி மைய எண் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போதுவரை 1,749 அழைப்புகள் வந்துள்ளன. சாலை வசதி, குடிநீர், சாக்கடை, முதியோர், மாற்றுத்திறனாளி உதவித் தொகை என்று பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளன. அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து, அந்த கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும்.
கோவையில் 2 நாளுக்கு ஒருமுறை சீரான குடிநீர் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவையில் பெரும்பாலான சாலைகள் மோசமாக உள்ளன. கடந்த ஆட்சியில் சாலை வசதிகள் முறையாக போடப்படவில்லை. அதற்காகதான் அரசு முதல்கட்டமாக ரூ.200 கோடி ஒதுக்கியுள்ளது.

படிப்படியாக அனைத்து இடங்களிலும் சாலை வசதிகளை அமைப்போம்.” என்றவரிடம் செய்தியாளர்கள், மின்சாரத்துறையில் பி.ஜி.ஆர் நிறுவனத்துக்கு டெண்டர் விடப்பட்டது குறித்த குற்றச்சாட்டை நிரூபிக்காததால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என கேள்வி எழுப்பினர்.
அதற்கு செந்தில் பாலாஜி, ``அந்த விஷயத்துக்கு நான் அப்போதே முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன். சில பேர் சுய விளம்பரத்துக்கு செய்யக் கூடிய காரியங்களுக்காக எங்களுடைய நேரத்தையோ, உங்களுடைய நேரத்தையோ வீணடிக்க வேண்டாம். ஒருவர் மீது உண்மையாக குற்றச்சாட்டு வைத்தால் உரிய ஆதாரத்துடன் சொல்ல வேண்டும்.

பி.ஜி.ஆர் நிறுவனத்தை பிளாக் லிஸ்டில் வைக்கவில்லை. அந்த நிறுவனத்துக்கு கடந்த ஆட்சியில் விடப்பட்ட டெண்டர் அது. எனவே, உரிய ஆவணங்கள் வெளியிட்டால்தான் அது சம்மந்தப்பட்ட கேள்விகளுக்கு விளக்கமளிப்பேன்” என்றார்.
from Latest News https://ift.tt/HFcQfK8
0 Comments