கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவி காங்கிரஸுக்கு ஒதுக்கீடு?! -அதிர்ச்சியில் திமுக-வினர்

கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவி திமுக-வுக்கு என கூறப்பட்டு வந்த நிலையில் திமுக தலைமை கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு மேயர் பதவியை ஒதுக்கியிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் திமுக தரப்பை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. `திமுக-வின் கோட்டையாக இருக்கும் கும்பகோணத்தை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க கூடாது, இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என திமுக உள்ளிட்ட தரப்பிலிருந்து கோரிக்கையும் வலுத்து வருவது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அய்யப்பன்

கும்பகோணம் நகராட்சி 150 ஆண்டுகள் பழமையானது என்ற சிறப்பை பெற்று செயல்பட்டு வந்த நிலையில் திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயராக பொறுப்பேற்க போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

மொத்தம் உள்ள 48 வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் 42 வார்டுகளை கைப்பற்றியது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு மூன்று சீட்டு ஒதுக்கப்பட்ட நிலையில் இரண்டு பேர் வெற்றி பெற்றனர். திமுக பெரும்பான்மையாக வெற்றி பெற்றதால் திமுகவை சேர்ந்த ஒருத்தர் முதல் மேயராக பொறுப்பேற்பார் என கூறப்பட்டது. சு.ப.தமிழழகன், அசோக்குமார், குட்டி என்கிற தெட்சினாமூர்த்தி ஆகியோரிடையே மேயர் சீட்டை பிடிப்பதற்கு கடும் போட்டி நிலவியது. இதில் சு.ப.தமிழழகனுக்குத்தான் வாய்ப்புகள் அதிகம் என பேசப்பட்டு வந்தது.

கும்பகோணம் மாநகராட்சி பதவியேற்பு விழாவில்

இந்நிலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் கும்பகோணம் மேயர் பதவியை கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு திமுக தலைமை ஒதுக்கியிருப்பதாக வெளியான தகவல் திமுக நிர்வாகிகளை பெரும் அதிர்ச்சி குள்ளாக்கியிருக்கிறது. மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற குரல்களும் பலமாக ஒலிக்க தொடங்கியிருக்கின்றன.

இது குறித்து திமுக-வினர் சிலரிடம் பேசினோம், ``50 வருடகாலமாக கும்பகோணம் தொகுதி திமுகவின் கோட்டையாக இருந்து வருகிறது. எம்.பி, எம்.எல்.ஏ என இரண்டிலுமே திமுகவிற்கு சாதகமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் பெரும்பான்மையான வெற்றியை பெற்றது திமுக. அதிமுக மூன்று இடங்களில் மட்டுமே வென்றது குறிப்பிடத்தக்கது.

கும்பகோணம்

இந்த சூழலில் கும்பகோணம் மேயரை பதவியை திமுக பிடித்த நிலையில் அக்கட்சியை சேர்ந்தவர்களில் யார் முதல் மேயராக பொறுப்பேற்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பிலும் நிலவியது. கும்பகோணம் மேயர் பதவி திமுக-வுக்குத்தான் என கட்சி தலைமை முடிவு செய்திருந்ததும் குறிப்பிடதக்கது. இந்நிலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் கும்பகோணம் மேயர் பதவியை கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியுள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு மூன்று சீட்டுகள் மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில் இரண்டு வார்டுகளில் மட்டும் அய்யப்பன், சரவணன் என்ற இருவர் வெற்றி பெற்றனர். அய்யப்பன் காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட இலக்கிய அணி தலைவர் உள்ளிட்ட பதவிகள் வகித்து வருகிறார். தமிழ்நாடு காமராஜர் இயக்கம் என்ற அமைப்பை நடத்தி வருவதுடன் அதன் தலைவராகவும் இருந்து வருகிறார். நாளிதழ் மற்றும் வார இதழில் செய்தியாளராக பணி புரிந்தவர். வடக்கு மாவட்ட செயலாளர் லோகநாதனின் ஆதரவாளர்.

சு.ப.தமிழழகன்

சரவணன் மீனவ சமுதாயத்தை சேர்ந்தவர். ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இப்போதும் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பாரம்பர்யமான காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவர். கட்சியில் பதவியில் இல்லை என்றாலும் ஆக்டிவாக இருப்பவர். இந்த இருவர் மட்டுமே வெற்றி பெற்றுள்ள நிலையில் இருவரில் ஒருவர் தான் மேயர் வேட்பாளர். இருவரின் பயோ-டேட்டாவையும் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் அழகிரி வாங்கியுள்ளார்.

அய்யப்பன் கவிஞர் என தன்னை கூறிக்கொண்டு வலம் வருவராம். அவர் மீது மக்களுக்கு நன்மதிப்பு இல்லை என்கிறார்கள். தனக்கு வேண்டாதவர்கள் யாரும் எந்த துறையில் இருந்தாலும் அவர்கள் மீது மொட்டை கடுதாசி அனுப்புவது அவரது வழக்கமாம். கட்சியை மீறி பல தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். தற்போது காங்கிரஸ் கட்சிக்கு மேயர் ஒதுக்கப்பட்டிருப்பதால் தனக்கு மேயர் சீட் தர வேண்டும் என கேட்டு வருகிறார். ஆனால் அதற்கு தகுதியான நபர் அவர் கிடையாது என்பதே பலரது கருத்தாக உள்ளது.

ஸ்டாலின்

ஒரு வேளை திமுக எடுத்த முடிவில் மாற்றம் இல்லை என்றால் ஆட்டோ டிரைவரான சரவணனுக்கு மேயர் சீட்டை வழங்கலாம். கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர், எளிய குடும்பத்திலிருந்து வரும் அவருக்கு காங்கிரஸ் கட்சி தலைமை வாய்ப்பினை வழங்கலாம். மேயர் சீட்டை பிடிக்க கும்பகோணம் திமுகவினருடையே பலத்த போட்டி நிலவியது. ஆளுக்கொருவரை பிடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். ஒரு கட்டத்தில் இதனை சமாளிக்க முடியாமல் முதலமைச்சர் ஸ்டாலின் திணறி போனார். அதனாலேயே காங்கிரஸ் கட்சிக்கு மேயர் சீட்டை ஒதுக்கியதாக கூட சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஸ்டாலின் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்த ராகுல்காந்தி நகர்புற உள்ளாட்சியில் மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு எங்களுக்கும் முக்கியத்துவம் கொடுங்கனு சொன்னதாகவும், அதனை ஏற்ற ஸ்டாலின் கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கியதாகவும் சொல்லப்படுகிறது. ஸ்டாலினின் இந்த முடிவு திமுகவில் மேயர் ரேஸில் இருந்தவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் இதனை மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்” எனத் தெரிவித்தனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/HRfUcjJ

Post a Comment

0 Comments