``பாஜக விரும்பினால் நான் சிறை செல்ல தயார், எனது உறவுகளை துன்புறுத்தாதீர்கள்!” - உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் பாஜக-வுக்கும், சிவசேனாவுக்கும் இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வருகிறது. அமலாக்கப்பிரிவு மூலம் சிவசேனா தலைவர்களுக்கு பாஜக தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. மறுபுறம் மாநில காவல்துறை மூலம் உள்ளுர் பாஜகவினருக்கு சிவசேனா நெருக்கடி அளிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் இரு கட்சிகளிடையேயான பகையும் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாள்களுக்கும் முன்பு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் மைத்துனர் ஸ்ரீதருக்கு சொந்தமான 11 வீடுகளை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சீல் வைத்தனர். இது உத்தவ் தாக்கரேயிக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

உத்தவ் தாக்கரே

நேற்று சிவசேனா எம்.எல்.ஏ.பிரதாப் சர்நாயக் என்பவருக்கு சொந்தமான 11 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளனர். அடுத்ததாக மாநகராட்சி நிலைக்குழு தலைவர் யஷ்வந்த் ஜாதவ் மீது நடவடிக்கை எடுக்க தேவையான வேலைகள் நடந்து வருகிறது. ஏற்கனவே வருமான வரித்துறை அதிகாரிகள் ஜாதவ் வீட்டில் மூன்று நாள்கள் தங்கி ரெய்டு நடத்தியுள்ளனர். மேலும் பாஜக பிரமுகர் கிரீத் சோமையா சமீபத்தில் அளித்திருந்த புகாரில் ஜாதவ் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் அமலாக்கப்பிரிவின் நடவடிக்கைக்கு உத்தவ் தாக்கரே சட்டமன்றத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.

``நான் எதாவது தவறு செய்திருந்தால், சிறைக்கு செல்ல தயாராக இருக்கிறேன். ஆனால் எனது உறவினர்களை சித்ரவதை செய்யாதீர்கள். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு எமர்ஜென்சியை பிரகடனப்படுத்தும் தைரியம் இருந்தது. ஆனால் பாஜக அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. உங்கள்(பாஜக) அனைவர் முன்பும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் ஆட்சிக்கு வர விரும்புகிறீர்கள். அதற்காக பென் டிரைவ்களை சேகரித்துக்கொண்டிருக்காதீர்கள். இதனால் பென் டிரைவ் விற்பனைதான் அதிகரிக்கும். இப்போது நீங்கள் எனது குடும்ப உறுப்பினர்களை அவமானப்படுத்துகிறீர்கள். அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்கிறீர்கள். இது போன்ற நடவடிக்கைகளுக்கு நான் பயப்படமாட்டேன். பாஜக-வின் ஒரே நோக்கம் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி மாநில அமைச்சர்களையும் அவர்களது உறவினர்களையும் களங்கப்படுத்தவேண்டும் என்பதாகும். மத்திய விசாரணை ஏஜென்சிகளை வீட்டு வேலைக்காரர்களை போன்று பாஜக நடத்துகிறது. அமைச்சர் நவாப் மாலிக் எப்படி திடீரென தாவூத் இப்ராகிமுடன் தொடர்பு கொண்டு இருப்பதாக கண்டுபிடித்தீர்கள்.

உத்தவ் தாக்கரே

நாங்கள் உங்களைப்போன்று குடும்ப உறுப்பினர்களை அவதூறு செய்யவில்லை. நாங்கள் உங்களை போன்று நடந்து கொள்ள மாட்டோம். குற்றச்சாட்டுக்கள் எழும்போது பாஜக அல்லாத தலைவர்கள் அல்லது அவர்களின் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் போது சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் கொடுக்க வாய்ப்பே கொடுக்கப்படுவதில்லை. ஆதாரங்கள் போலியாக தயாரிக்கப்பட்டு கோர்ட்டில் தாக்கல் செய்யப்படுகிறது. கோர்ட் என்ன செய்யும்?. ஆதாரங்களின் அடிப்படையில் தண்டனை கொடுக்கும். எங்களது கட்சி தொண்டர்கள் தவறு செய்திருந்தால் நான் பொறுப்பு ஏற்றுக்கொள்கிறேன். அதற்காக அவர்களை துன்புறுத்தாதீர்கள். அவர்கள் 1992-93 கலவரத்தில் தங்களது உயிரை பணயம் வைத்து மும்பையை காத்தவர்கள். சில பாஜக தலைவர்கள் மத்திய விசாரணை ஏஜென்சியின் செய்திதொடர்பாளர்கள் போன்று நடந்து கொள்கிறார்கள். இந்திரா காந்தியாவது எமர்ஜென்சியை அறிமுகம் செய்தார். ஆனால் இப்போது அறிமுகப்படுத்தாத எமர்ஜென்சியாக இருக்கிறது. இந்திராகாந்தி கோழை கிடையாது. அவர் அறிமுகப்படுத்திய எமர்ஜென்சி நல்லதா கெட்டதா என்பது வேறுபிரச்னை. ஆனால் அவர் திறமைசாலி. நாட்டை ஆளும் பாஜகவுக்கு மும்பையில் அதிகாரம் வேண்டும். ஆனால் மும்பை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு கார் ஷெட் அமைக்க நிலம் கொடுக்கமாட்டார்கள். முந்தைய தேவேந்திர பட்நவிஸ் ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட 10 ஆயிரம் கோடிக்கும் அதிகமான மெட்ரோ ரயில் திட்டத்தில் நடந்த ஊழல் குறித்து விசாரிக்க நகர்ப்புற மேம்பாட்டுத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.



from Latest News https://ift.tt/vVYZuSK

Post a Comment

0 Comments