ராகுல், பிரியங்காவுடன் பிரசாந்த் கிஷோர் திடீர் சந்திப்பு?!

நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில், பாஜக 4 மாநிலங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்துள்ளது. பஞ்சாப்பில் 92 இடங்களைக் கைப்பற்றி முதல் முறையாக ஆம் ஆத்மி ஆட்சியமைத்துள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சி ஒரு மாநிலத்திலும் ஆட்சியைப் பிடிக்கவில்லை. 2024-ல் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்த 5 மாநில தேர்தல் பெரும் தாக்கம் ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்த நிலையில், தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக பெரிய எதிர்க்கட்சியாகப் பார்க்கப்படும் காங்கிரஸின் இப்போதைய நிலை பலராலும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. இதன் காரணமாக காங்கிரஸ் கட்சியினுள் பல அதிரடி முடிவுகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

பிரசாந்த் கிஷோர்

இதற்கிடையில், அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர், ``5 மாநில தேர்தல் முடிவுகள் 2024 தேர்தலில் பெரிய அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது. மேலும் காங்கிரஸ் கட்சியில் அனைவரும் இணைந்து செயல்பட்டால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-வுக்கு காங்கிரஸ் கட்சியால் கடுமையான சவாலைக் கொடுக்க முடியும். 2024-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு இன்னமும் வாய்ப்பு இருக்கிறது" என கூறியிருந்தார்.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை பிரசாந்த் கிஷோர் நேரில் சந்தித்ததாக வெளியாகும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாகி வருகிறது. இந்த சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை என்றாலும் காங்கிரஸ் உள்ளிருந்தே சில தலைவர்கள் இதனை உறுதிப்படுத்தியதாக சில ஆங்கில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. . மேலும், 2024 தேர்தலில் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸுடன் இணைந்து பணியாற்றுவதற்கான சிறு அறிகுறியாக இந்த சந்திப்பு இருக்கலாம் என்று பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. அல்லது, அடுத்த வருடம் நடைபெற இருக்கும் குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்காக கூட இந்த சந்திப்பு நடந்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதனிடையே, குஜராத் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் ஹர்திக் படேல், ``தற்போதைய நிலவரப்படி, எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. பிரசாந்த் கிஷோரைப் பற்றி நாங்கள் எதுவும் கேட்கவில்லை" என பிரசாந்த் கிஷோரின் இத்தகைய சந்திப்பு குறித்து கூறியுள்ளார்.



from Latest News https://ift.tt/NzKDwdG

Post a Comment

0 Comments