ஸ்டாலின் எச்சரிக்கை... நிச்சயமற்ற எதிர்காலம்! - ராஜினாமாவுக்கு தயாராகும் திமுக-வினர்?!

நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கிட்டத்தட்ட 80 சதவிகிதத்துக்கும் மேலான இடங்களை தி.மு.க கூட்டணி பிடித்துள்ளது. அந்த மகிழ்ச்சி கூட்டணிக் கட்சிகளுக்கு ஒருவாரம்கூட நீடிக்கவில்லை. கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் பட்டியலை தி.மு.க தலைமை மார்ச் 3-ம் தேதி வெளியிட்டது. ஆனால், மறுநாள் 4-ம் தேதி நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பல இடங்களில் தி.மு.க-வினர் சிண்டிகேட் போட்டுக்கொண்டு ஜெயித்துவிட்டனர். வி.சி.க., கம்யூனிஸ்ட்கள், காங்கிரஸ் என கூட்டணியிலுள்ள முக்கியக் கட்சிகளின் இடங்களை தி.மு.க-வினர் எடுத்துக்கொண்டனர்.

கே.பாலகிருஷ்ணன்

இதனால் அதிர்ச்சியடைந்த சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், வி.சி.க தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் தி.மு.க-வினரின் செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பேசினர். ``வி.சி.க-வுக்கு ஒதுக்கப்பட்ட 16 இடங்களில் 8 இடங்களை தி.மு.க-வினர் கைப்பற்றியுள்ளனர். சில நேரங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் தவிர்க்க இயலாதது. குறுகி நிற்கிறேன் என்ற முதல்வரின் அறிக்கை கண்டு நாங்கள் உருகி நிற்கிறோம். 8 இடங்களிலும் அவர்கள் பதவி விலகி மீண்டும். வி.சி.க-வுக்கு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. கூட்டணி தர்மம் காக்க நாம் அமைதி காப்போம்” என்று திருமாவளவன் கூறியிருக்கிறார்.

திருமா

``கழகத் தலைவர் என்ற முறையில் குற்ற உணர்ச்சியால், நான் குறுகி நிற்கிறேன். கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் நான் எனது மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மாற்று வழியில் வெற்ற பெற்ற தி.மு.க-வினர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, என்னை நேரில் வந்து சந்திக்க வேண்டும். இல்லையெனில் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவார்கள்” என்று நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டார் முதல்வரும், தி.மு.க தலைவருமான ஸ்டாலின்.

எச்சரிகையுடன் நின்றுவிடாமல், தி.மு.க அறிவித்த அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து அதிருப்தி வேட்பாளரை போட்டியிட வைத்ததால் பூவிருந்தவல்லி நகரச் செயலாளர் எம்.ரவிக்குமாரை கட்சியிலிருந்து நீக்கம் செய்து செயலிலும் தி.மு.க தலைமை இறங்கியது, மாற்று வழியில் வெற்றி பெற்றவர்களுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மாற்று வழியில் வென்ற தி.மு.க-வினருக்கு பதவி விலகுவதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார்கள் உடன்பிறப்புகள்.

முதல்வர் ஸ்டாலின்

தி.மு.க செய்தித் தொடர்பாளர் அரசகுமாரிடன் இதுகுறித்துக் கேட்டபோது, ``மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த திருத்துறைப்பூண்டி நகராட்சித் துணைத் தலைவர் பதவியில், தி.மு.க கவுன்சிலர் பாண்டியன் போட்டியின்றி வெற்றி பெற்றிருந்தார். அவர் தற்போது பதவி விலகிவிட்டார். இவர் போல ஒவ்வொருவரும் கண்டிப்பாக இன்னும் இரண்டு நாட்களில் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிடுவார்கள். இல்லையெனில் அது கட்சிக்கும், தலைவருக்கும் இழைக்கப்பட்ட துரோகம்.

ஒருவேளை கட்சியிலிருந்து நீக்கப்பட்டாலும், தங்களது பதவிகளுக்கு ஆபத்து ஏற்படாது என்ற எண்ணத்தில் யாரும் இருந்தால், அது அவர்களது எதிர்காலத்துக்கு அவர்களே வைத்துக்கொள்ளும் சூனியம்போன்றுதான். பதவி விலக மறுப்பவர்களுடன் உடனிருக்கும் தி.மு.க கவுன்சிலர்கள் ஒருவரும் ஒத்துழைப்பு வழங்க மாட்டார்கள். இதனால், பதவி இருந்தும் அவர்களது செயலற்றவர்களாகத்தான் தொடர முடியும்” என்றார்.



from Latest News https://ift.tt/iq41tA7

Post a Comment

0 Comments