மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சியில் திமுக நகரச் செயலாளராக வெற்றிவேல் என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பதவி வகித்து வருகிறார். இவரின் மனைவி சரஸ்வதி 2001-ம் ஆண்டு முதல் 2006 - ம் ஆண்டு வரை பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு செயலாற்றி இருக்கிறார்.
இந்நிலையில் தற்போது நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தரங்கம்பாடி பேரூராட்சியிலுள்ள 18 வார்டுகளில் 16 வார்டுகளில் தி.மு.க. வெற்றி பெற்று தலைவர் பதவியை கைப்பற்றியது. 13 - ம் எண் வார்டில் வெற்றி பெற்ற வெற்றிவேல் மனைவி சரஸ்வதி தலைவர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தார்.
ஆனால், பேரூராட்சி தலைவர் பதவிக்கு பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான நிவேதா முருகனின் உறவினரான சுகுண சுந்தரி என்பவருக்கு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து வெற்றிவேல் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான மெய்யநாதனிடம் முறையிட்டார். துணைத் தலைவர் பதவியை வழங்குவதாக அறிவித்திருந்த நிலையில் தி.மு.க.வில் நிலவும் கோஷ்டி மோதல் காரணமாக துணைத்தலைவர் பதவியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து அதிருப்தியடைந்த வெற்றிவேல் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கவனத்திற்கு இந்த விஷயங்களை கொண்டு செல்ல எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தது. இதனால் விரக்தி அடைந்த வெற்றிவேல் தி.மு.க. நகரச் செயலாளர் பதவியையும், பேரூராட்சி கவுன்சிலர் பதவியை அவரின் மனைவி சரஸ்வதியும் ராஜினாமா செய்வதாக, தி.மு.க. தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து வெற்றிவேல் செய்தியாளர்களிடம் கூறும்போது, ``பூம்புகார் தொகுதியில் கட்சியில் உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை என்பதால் பதவியை ராஜினாமா செய்கிறோம்" என்றார்.
from Latest News https://ift.tt/2mqJgE5
0 Comments