குற்றாலம்: சம பலத்துடன் இருந்த அதிமுக, திமுக; தள்ளிவைக்கப்பட்ட தலைவர் தேர்தல்! - என்ன காரணம்?!

தென்காசி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா மையமான குற்றாலம் பேரூராட்சியில் மொத்தம் எட்டு வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான தேர்தலில் தி.மு.க-வும் அதி.மு.க-வும் நேரடியாக மோதின. குறைவான வாக்குகளைக் கொண்ட வார்டுகளில் வெற்றியைக் கைப்பற்ற தொடக்கம் முதலாகவே வைட்டமின் `ப’ அருவியாகக் கொட்டியது.

தேர்தலில் தி.மு.க-வுக்கு நான்கு வார்டுகளும், எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க-வுக்கு நான்கு வார்டுகளும் கிடைத்தன. இரு கட்சிகளும் சம பலத்துடன் இருந்ததால் வெற்றிகான கவுன்சிலருக்கு கிராக்கி ஏற்பட்டது. தி.மு.க சார்பாக குமார் பாண்டியனும் அ.தி.மு.க சார்பாக கணேஷ் தாமோதரனும் பேரூராட்சித் தலைவர் பொறுப்பைக் கைப்பற்றி தீவிரம் காட்டினார்கள்.

சுற்றுலா மையமான குற்றாலத்தில் வாகன பார்க்கிங், லாட்ஜுகள், வணிக மையங்கள் அதிகம் இருப்பதால் பணம் புரளும் பேரூராட்சியாக உள்ளது. அதனால் இந்தப் பேரூராட்சித் தலைவர் பொறுப்புக்கு கடுமையான போட்டி நிலவியது. இரு தரப்பினரும் தங்களின் கவுன்சிலர்களை சுற்றுலாவாக வெளியிடத்துக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக வைத்திருந்தனர்.

குற்றாலம் மெயின் அருவி

இந்த நிலையில், இன்று பேரூராட்சி தலைவர் தேர்தல் நடக்க இருந்த நிலையில், அ.தி.மு.க கவுன்சிலர்களான கணேஷ் தாமோதரன், தங்கப்பாண்டியன், மாரியம்மாள், ஜெயா ஆகியோர் பேரூராட்சி அலுவலகத்துக்கு வந்தார்கள். ஆனால் தி.மு.க கவுன்சிலர்கள் யாரும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதனால் பேரூராட்சி தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார்.

உள்ளாட்சி மன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் அறுதிப் பெரும்பான்மை குறைந்ததால் ,கூட்டம் தொடங்கிய 30 நிமிடங்கள் காத்திருந்தும் கவுன்சிலர்கள் வருகை தராததால் கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

குற்றாலம் பேரூராட்சியில் இரு கட்சிகளும் சம பலத்துடன் இருப்பதால் இரு கட்சியினரும் மாற்றுக் கட்சியின் கவுன்சிலர்களுக்கு கணிசமான வைட்டமின்களை கொடுக்கத் தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், கவுன்சிலர்கள் வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதால் பேரம் நடத்த முடியவில்லை. தற்போது கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதால் இரு தரப்புக்கும் கூடுதல் அவகாசம் கிடைத்துள்ளது. அதனால் மீண்டும் குதிரை பேரம் பலமாக நடக்கும் சூழல் உருவாகியுள்ளது என்கிறார்கள் பொதுமக்கள்.



from Latest News https://ift.tt/SxbDuKi

Post a Comment

0 Comments