கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை பேரூராட்சி தலைவருக்கான மறைமுகத் தேர்தலில் தலைவர் பதவியைப் பிடிப்பதற்கு பா.ம.க-வுக்கு மெஜாரிட்டியான சூழல் இருந்த நிலையில், தி.மு.க-வினர் தங்கள் கட்சி கவுன்சிலர்களை கடத்தி விட்டதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டதால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்டதாக சொல்லப்பட்ட கவுன்சிலர்களில் ஒருவர் திருமண வரவேற்பில் நின்று வரவேற்ற வீடியோ வெளியாகி சர்ச்சையை உண்டாக்கிய நிலையில், தி.மு.க ஜனநாயகத்தை படுகொலை செய்து விட்டதாக பா.ம.க-வினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சியில் 15 வார்டுகளில், தி.மு.க 4, தி.மு.க கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2, ம.தி.மு.க ஒன்று என 7 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன. இதே போல, பா.ம.க 4, அ.தி.மு.க 2, பா.ம.க ஆதரவு சுயேச்சைகள் 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றிருந்தனர். இதில் அ.தி.மு.க மற்றும் சுயேச்சைகள் பா.ம.க-வைச் சேர்ந்த ம.க.ஸ்டாலின் என்பவருக்கு ஆதரவு கொடுத்தனர். இதனால் அவர் பேரூராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட முடிவு செய்தார். எட்டு கவுன்சிலர்கள் இருப்பதால் அவர் தலைவராவதற்கான சூழலும் ஏற்பட்டது.
கூட்டணிக் கட்சியுடன் சேர்த்து ஏழு இடங்களை பிடித்த தி.மு.க-வும் தலைவர் பதவியைப் பிடிக்க முயன்றதால் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. தி.மு.க தரப்பில் சுயேச்சையாக வெற்றி பெற்ற இருவரில் ஒருவரையாவது தூக்கி விட வேண்டும் என குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகவும் சொல்லப்பட்டது. இந்த நிலையில், பேரூராட்சித் தலைவர் பதவிக்கு தி.மு.க கூட்டணியில் 3-வது வார்டில் ம.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சரவணன் அறிவிக்கப்பட்டார். இதனிடையே, பா.ம.க சார்பில் 12-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வன்னியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் ம.க.ஸ்டாலின் போட்டியிட முடிவு செய்தார்.
இதையடுத்து ஆடுதுறை பேரூராட்சி தலைவருக்கான மறைமுகத் தேர்தலுக்கு 15 கவுன்சிலர்களில்,12 பேர் மட்டும் வந்தனர். தி.மு.க-வைச் சேர்ந்த கவுன்சிலர்களான 7-வது வார்டு சுகந்தி, 14-வது வார்டு மாலதி, 2-வது வார்டு மீனாட்சி ஆகிய மூன்று பேரும் வரவில்லை. இதனை தொடர்ந்து மறைந்த முன்னாள் அமைச்சர் கோ.சி.மகன் கோ.சி.இளங்கோ தலைமையில், பேரூராட்சி தலைவர் வேட்பாளரான சரவணன் உள்ளிட்டோர் மூன்று பெண் கவுன்சிலர்களையும் கடத்தி விட்டதாக தேர்தலை நிறுத்த வேண்டும் என கூறி பேரூராட்சி அலுவலகம் முன் தி.மு.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எட்டு கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலகத்திற்குள் வந்து விட்டதால் தேர்தல் நடத்தலாம் என்ற விதியிருந்தும் தேர்தலை நடத்தவில்லை. இதனால் பெரும் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில், கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட தி.மு.க பெண் கவுன்சிலரில் ஒருவரான மீனாட்சி, மறைமுகத் தேர்தலுக்கு வாக்களிக்க வராமல், திருமண வரவேற்பில் நின்று சந்தனம் கொடுத்து விருந்தினர்களை வரவேற்கும் வீடியோ வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியது.
இது குறித்து பா.ம.க-வைச் சேர்ந்த ம.க.ஸ்டாலினிடம் பேசினோம். ``பேரூராட்சித் தலைவர் பதவியைப் பிடிக்க தி.மு.க-வினர் தங்கள் கவுன்சிலர்கள் கடத்தப்பட்டதாகக் கூறி நாடகமாடி தேர்தல் நடைபெறாமல் தடுத்து விட்டனர். அத்துடன் தேர்தல் நடத்தும் அலுவலர் என்றும் பாராமல் பேரூராட்சி செயல் அலுவலரான இளவரசனை தள்ளி விட்டனர். அவர் முகத்தில் பேப்பரை கிழித்து வீசினர். எட்டு கவுன்சிலர்கள் இருந்தால் தேர்தல் நடத்தலாம் என தேர்தல் ஆணைய விதிமுறையில் உள்ளது. ஆனால், தேர்தலை நடத்த விடாமல் செய்வதற்கான அனைத்தையும் தி.மு.க உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சியினர் செய்தனர்.
தேர்தல் அலுவலர் தேர்தலை நடத்தி முடிக்க தயாராக இருந்தும் அவருக்கு யாரிடமிருந்தோ அடிக்கடி போன் வந்தது. அப்போதெல்லாம் அவர் முகம் பயத்தில் வியர்த்துக் கொட்டியது. மேலிடத்தில் இருந்து பேசுவதாக சொன்னார்கள். அதன் பிறகே தேர்தலை தள்ளி வைப்பதாக அறிவித்தார். ஆளும் கட்சியான தி.மு.க ஜனநாயகத்தை படுகொலை செய்து விட்டது. அரஜாகத்தின் மூலம் மக்களால் தேந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான எங்களை அவமானப்படுத்திவிட்டனர். தி.மு.க எதிர்க்கட்சியே இருக்கக் கூடாதென்று நினைக்கிறது.அ தற்கேற்றார் போல் தேர்தல் ஆணையம் ஒரு கண்ணுக்கு வெண்ணெய், ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு என ஒரு தலைபட்சமாக நடந்து கொள்கிறது. எப்போது தேர்தல் நடந்தாலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம்" என்றார்.
from Latest News https://ift.tt/SQJDWPX
0 Comments