கூழ் முதல் வாழைப்பழ சீப்பு வரை; வைரல் வீடியோ... `அம்மா, அப்பா சொல்படியே செல்கிறேன்'- செஞ்சி மஸ்தான்

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளராகவும், தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகவும் இருந்து வருபவர் தான் செஞ்சி கே.எஸ்.மஸ்தான். இவர், தனது சொந்த செலவில் ஏழை, எளிய மக்களுக்கு கூழ் மற்றும் வாழைப்பழ சீப்புகளை வாங்கி கொடுக்கும் இரு வீடியோக்கள் அண்மையில் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. 25-ம் தேதி வெளியான வீடியோவில், அனந்தபுரம் பகுதியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பும் செஞ்சி மஸ்தான், அருகில் கூழ் விற்பனை செய்து கொண்டிருந்த 80 வயது மதிக்கத்தக்க பாட்டி ஒருவரை சந்துத்து நலம் விசாரிக்கிறார். பின், "வியாபாரம் எப்படிமா போகுது" என்று அவர் கேட்க, "எங்க சாமி. ஏதோ இந்த வயித்துக்கு சாப்பிட அளவுக்கு கிடைக்கும்" என்று அந்த பாட்டி கூறியுள்ளார்.

வைரலாக வீடியோ காட்சிகள்

உடனே, தன்னுடன் வந்தோர் மற்றும் பொதுமக்களுக்கு தன் சொந்த செலவில் அந்த கூழை வாங்கி கொடுக்கும் மஸ்தான், அந்த கூழை தானும் கொஞ்சம் அருந்திவிட்டு அங்கிருந்து செல்கிறார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், அதன் வீடியோவும் வைரலாக பரவியது. இந்நிலையில், மறுதினமே (26.03.2022) மற்றொரு வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோவில், செஞ்சி செல்வ விநாயகர் கோயில் வாசலில் இருக்கும் தள்ளுவண்டி வாழைப்பழ வியாபாரியை சந்திக்கும் மஸ்தான், "என்னப்பா, எப்படி போகுது வியாபாரம்" என்று கேட்க, "எங்க தலைவரே... ஒரே மந்தமா தான் இருக்கு. எப்போ முழுசா விற்குமோ தெரியல" என்று ஆதங்கப்பட்டுள்ளார். உடனே அந்த பழங்களை மொத்தமாக வாங்கும் மஸ்தான், அங்கிருந்த எளிய மக்களை அழைத்து ஒவ்வொரு வாழைப்பழ சீப்பாக எடுத்து கொடுத்து வியாபாரியையும், மக்களையும் மகிழ வைத்துள்ளார்.

இப்போது மட்டுமின்றி, இதற்கு முன்பாகவும் இவர் ஏழை மக்களுக்கு உணவு பொருள் மற்றும் பணம் கொடுக்கும் வீடியோக்களும்; காகம், குரங்குகளுக்கு உணவு அளிக்கும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன. இருப்பினும், தற்போது வெளியாகியுள்ள இரு வீடியோக்கள் மூலம் பெரும்பாலும் கவனம் பெற்றிருக்கிறார் செஞ்சி மஸ்தான்.

இது தொடர்பாக, அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தானிடம் பேசினோம். "தமிழக முதலமைச்சரின் ஆலோசனைப்படி அண்மையில் அனந்தபுரம் பேரூராட்சியில் 100 நாள் வேலைத்திட்டம் துவங்கி வைப்பதற்காக சென்றிருந்தேன். இந்த 100 நாள் வேலை செய்யக்கூடிய ஏழ்மை நிலை மக்கள், வேலைக்குச் செல்லும் போது மதிய உணவாக கூழோ... கஞ்சியோ தான் சாப்பிடுகிறார்கள். அதைப் பார்த்துவிட்டு அனந்தபுரம் கடைத்தெருவிற்கு வந்தேன். ஒரு வயதான பாட்டி கூழ் விற்றுக் கொண்டிருந்தார்கள். அதில் நான் இரண்டு விஷயங்களை கவனித்தேன்.

செஞ்சி மஸ்தான்

இந்த வயதிலும் யாரையும் எதிர்பார்க்காமல் உழைத்து உண்ண வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம்; அதனால் வேகாத வெயிலிலும் கூழ் விற்றுக் கொண்டிருந்தார்கள். அதனால், அவர்களிடம் நேரில் சென்று "வியாபாரம் எல்லாம் எப்படிமா போகுது, எப்படிமா இருக்கீங்க" என்று நலம் விசாரித்தேன். அப்போது அவங்க, "சாப்பாட்டுக்காக யாரையும் எதிர்பார்க்காத அளவுக்கு நூறு.. நூத்திஅம்பது கிடைக்கும். சில நாள் விற்கலனா அதுவும் கிடையாது" என்று சொன்னாங்க. வயதானவர்களின் இந்த முயற்சியை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக அந்தக் கூழை மொத்தமாக வாங்கி, அங்கிருந்த ஏழை மக்களுக்கு கொடுத்தேன். நானும் கொஞ்சமாக குடித்தேன்.

அதற்கு மறுநாள், செஞ்சியில் உள்ள கணபதி கோயிலுக்கு சென்றபோது, அங்கிருக்கும் பெரியவர்கள் பூஜை போட்டார்கள். சாமி கும்பிட்டதற்கு அப்புறம்மாக, அரைமூடி தேங்காய், இரண்டு வாழைபழம் எனக்கு கொடுத்தார்கள். நான் வெளியே வந்து பார்த்தபோது, அங்க நிறைய பேர் இருந்தாங்க. என் கையில் இருக்கும் அந்த பழத்தை எத்தனை பேருக்கு கொடுக்க முடியும். அதனால், பக்கத்தில் இருந்த ஒரு தள்ளுவண்டி பழ வியாபாரி தம்பியிடம் நலம் விசாரித்தேன். அவரும் வருத்தமாக பதில் அளித்தார். அவரிடம் இருந்த வாழைப் பழங்களை மொத்தமாக வாங்கி அங்கிருந்த ஏழை மக்களுக்கு கொடுத்தேன். இதற்கெல்லாம் வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது.

காகங்களுக்கு உணவு அளிக்கும் மஸ்தான்

பொதுவாக, வாழ்க்கையின் தொடர்ச்சி இல்லை என்றால், அந்த வாழ்க்கை வெற்றி பெறாது. எனக்கு ஒரு 15 வயது இருக்கும்போது, என் தகப்பனார் என்னிடத்தில் "ஒரு நபரை சாப்பிட வைத்து விட்டு தான் நீ சாப்பிட வேண்டும்" என்று சொன்னார். என்னுடைய தாயார், "நீ சொந்தமா சம்பாதிக்கும் காலத்துல, நீ வீட்டை விட்டுப் புறப்படும் போது, ஏதாவது ஒரு ஏழைக்கு ஒரு நாளைக்கு தேவையான... இல்லனா ஒரு வேலைக்கு தேவையான உதவியை செஞ்சுட்டு பயணத்தை தொடருப்பா" என்று சொல்லி வளர்த்தார்கள். அதனால், பெற்றோர் சொன்னபடி செல்கிறேன்.

என்னுடைய சின்ன வயதில், ஏழ்மையான குடும்பத்தில் வளர்ந்ததினால் பழைய சாதம், கூழ் எல்லாம் விரும்பி சாப்பிட்டு இருக்கிறேன். அந்த அடிப்படையில்தான் இந்த உதவிகள் எல்லாம். அதுமட்டுமில்லாமல் குழந்தைகளுக்கு தேவையான உணவுகள், சாப்பாடுகள் போன்றவற்றை தினமும் காரில் போகும் போது வாங்கி வைத்துக் கொள்வேன். வழியில் சின்ன பசங்க, கஷ்டப்படக் கூடிய ஏழை, எளிய மக்களை பார்க்கும்போது காரை நிறுத்தி அவர்களுக்கு அதை எடுத்துக் கொடுப்பேன்.

உணவு பரிமாறும் மஸ்தான்

சில சமயம், அவசரத்தில் செல்லும்போத கையில் இருப்பதை அந்த மக்களுக்கு கொடுப்பேன். இதுதான் நான் கூறிய அந்த தொடர்ச்சி... ஈட்டலும், காத்தலும் மனிதனின் வாழ்க்கைக்குத் தேவை." என்றார்.



from Latest News https://ift.tt/cKBvbjl

Post a Comment

0 Comments