ரஷ்யாவின் தாக்குதலால் நிலைகுலைந்துபோன உக்ரைனிலிருந்து மக்கள் தங்கள் உடைமைகளை விட்டுவிட்டு, அண்டை நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து வருகின்றனர். இன்னும் உக்ரைனைவிட்டு வெளியேற முடியாமல் பலர் சிக்கியுள்ளனர்.
வான்வெளித் தாக்குதல் முதல் அனைத்து வகையான தாக்குதல்களையும் ரஷ்யா தீவிரப்படுத்தி வரும் வேளையில், உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் ரஷ்ய ராணுவ வீரர்கள் தங்கள் நாட்டு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்.
இது தொடர்பாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா ஒரு வீடியோ காணொலி நிகழ்வில் பங்கெடுத்துப் பேசிய போது, ``எங்களை விடப் பலசாலியான ரஷ்யாவை எதிர்கொண்டு வருகிறோம். ஆனால், சர்வதேச சட்டம் எங்களுக்கு சாதகமாக உள்ளது.
அது எங்களுக்கு உதவும் என நம்புகிறேன். அது எங்களை வெற்றிபெறச் செய்யும். ரஷ்யப் படை வீரர்கள் எந்த பகுதிகளையெல்லாம் கைப்பற்றியுள்ளார்களோ அங்கெல்லாம் உக்ரைனில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்தப் போருக்குக் காரணமானவர்கள் நிச்சயம் சட்டத்துக்கு முன்னிறுத்தப்படுவார்கள். ஊடகங்கள் உலகிற்கு உக்ரைனில் நடக்கும் உண்மைகளை எடுத்துச் செல்லுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா உக்ரைனில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளதாகக் கூறிய செய்திக்குச் சரியான ஆதாரங்களை வழங்கவில்லை. ஆனாலும், உக்ரேனிய ஊடகங்கள் பதினொரு பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கின்றன.
from Latest News https://ift.tt/C4IptJ6
0 Comments