விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிஹரன்(27), ஜுனைத் அகமது(27), மாடசாமி(37), பிரவீன்(22) ஆகிய 4 பேரை கடந்த 29-ம் தேதி 6 நாள்கள் சிபிசிஐடி போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தது. தொடர்ந்து கூர்நோக்கு இல்லத்தில் உள்ள 4 பள்ளி மாணவர்களிடம் கடந்த 1-ம் தேதி 4 மணி நேரம் சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தது. 8 பேருடைய சிபிசிஐடி காவல் நிறைவு பெற்றதைத்தொடர்ந்து, ஹரிஹரன், ஜுனைத் அகமது, மாடசாமி, பிரவீன் ஆகிய 4 பேரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஸ்ரீவில்லிபுத்தூர் தீண்டாமைத் தடுப்பு நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு சிபிசிஐடி போலீஸார் ஆஜர்படுத்தினர். அவர்களை வரும் 18-ம் தேதி வரை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இளம்பெண் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 8 பேருக்கும் விந்தணு பரிசோதனை செய்ய அனுமதிக்கேட்டு சிபிசிஐடி போலீஸார் விருதுநகரில் உள்ள இளையோர் நீதி குழுமத்திலும் ஸ்ரீவில்லிபுத்தூர் தீண்டாமை தடுப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதற்கு அனுமதி கிடைத்தன்பேரில் ஹரிஹரன், ஜூனைத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் 4 பள்ளி சிறுவர்கள் உள்பட 8 பேரையும் மதுரையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் சிபிசிஐடி போலீஸார் விருதுநகர் அழைத்து வந்தனர்.
தொடர்ந்து அவர்கள் நண்பகல் 12 மணிக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆய்வகத்திற்கு அழைத்துவரப்பட்டு விந்தணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் ஹரிஹரன், ஜுனைத் அகமது, மாடசாமி, பிரவீன் ஆகிய 4 பேருக்கும் பரிசோதனை முடிந்து மாலையில் அவர்கள் மதுரை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பள்ளிச் சிறுவர்கள் நான்கு பேரும் தொடர்ந்து மருத்துவமனையில் பரிசோதனை நடத்தப்பட்டது. இரவு 9.30 மணிக்கு பரிசோதனை நிறைவுபெற்று பள்ளிச் சிறுவர்களும் கூர்நோக்கு இல்லத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இந்நிலையில், காவல்துறையினர் இந்த வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என்பதன் அடிப்படையில் பள்ளி சிறுவர்கள் நான்கு பேருக்கும் ஜாமீன் கேட்டு விருதுநகர் இளையோர் நீதிமன்றத்தில் அவர்களது பெற்றோர் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதை விசாரித்த நீதிபதி மருதுபாண்டி, சிறுவர்கள் 4 பேரும் வாரம் ஒரு முறை காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
from Latest News https://ift.tt/TcyQYHq
0 Comments