திருத்துறைப்பூண்டியில் ஆக்கிரமிப்பில் உள்ள 46 குளங்கள்; அறிக்கையைச் சமர்ப்பிப்பாரா வட்டாட்சியர்?

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் 46 குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்பாக ஜூன் 7-ம் தேதிக்குள் அளவீடு செய்து ஆவணங்களை ஒப்படைக்குமாறு வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருத்துறைப்பூண்டி மக்களுக்கு மிகவும் முதன்மையான நீராதாரமாகப் பயனளித்துக்கொண்டிருந்த 40-க்கும் மேற்பட்ட குளங்களும், இவற்றுக்கு தண்ணீர் வரக்கூடிய வாய்க்கால்களும் காலப்போக்கில் ஆக்கிரமிக்கப்பட்டு, வணிக வளாகம், மருத்துவமனை மற்றும் குடியிருப்பு கட்டடங்களாக மாறிப்போயின. இந்நிலையில்தான் இக்குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மீட்டெடுத்து, தண்ணீர் சேமிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான அய்யப்பன் 2018-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

திருத்துறைப்பூண்டி

இவர் தாக்கல் செய்திருந்த மனுவில், `திருத்துறைப்பூண்டி நகராட்சி மற்றும் மருந்தீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு பலமுறை மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, என் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர், குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர், இங்குள்ள சில குளங்களின் எல்லை மற்றும் ஆக்கிரமிப்பு விவரங்களை மட்டும் ஆய்வு செய்து அறிக்கையைத் தாக்கல் செய்திருந்தார். 13 குளங்கள் அளவிடப்பட்டுள்ளன. 9 குளங்கள் சாக்கடையாக மாறிவிட்டதாலும் மீதமுள்ள குளங்களைச் சுற்றிலும் நஞ்சை நிலங்களில் பயிர்கள் உள்ளதாலும் அவற்றைத் தற்போது அளவீடு செய்ய முடியவில்லை எனவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜரானார். அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த மனு குறித்து தெரிவிக்க அவகாசம் வேண்டும் என்றார். இதை ஏற்ற நீதிபதிகள் ஜூன் 7-ம் தேதிக்குள் குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்து ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

நீர்நிலை ஆக்கிரமிப்பு

இதுகுறித்து நம்மிடம் பேசிய வழக்கறிஞர் அய்யப்பன், ``திருத்துறைப்பூண்டி நகரப் பகுதிகள்ல மட்டுமே 46 குளங்கள் இருந்துச்சு. இதுல பெரும்பாலான குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், வீடுகள், கடைகளாக மாறிப்போயிடுச்சு. இதெல்லாமே கடந்த பத்தாண்டுகள்ல அதிகமா ஆக்கிரமிக்கப் பட்டது. அரசு அதிகாரிகளின் துணையோடு, அரசியல் கட்சி பிரமுகர்கள்தான் அதிகமா ஆக்கிரமிச்சு இருக்காங்க. இந்தப் பகுதி மக்களுக்கு முக்கிய நீராதாரமா இருந்த ஓடையில ஒரு தனியார் மருத்துவமனையே கட்டப்பட்டிருக்கு. அந்த மருத்துவமனை நிர்வாகம் பணம் கொடுத்து வாங்கியது, வெறும் 3,000 சதுர அடிதான். ஆனால், வாகனங்கள் நிறுத்துறக்கு மட்டுமே 5,000 சதுர அடி இடம் ஒதுக்கியிருக்காங்க. அப்படினா மருத்துவமனை கட்டடம் எதுல கட்டப்பட்டிருக்குனு நல்லா தெளிவாகவே தெரியுது.

பாப்பான் ஓடை குளத்துல மருத்துவமனை மட்டுமல்ல... அடுக்குமாடி குடியிருப்பு உட்பட ஏகப்பட்ட கட்டடங்கள் கட்டப்பட்டிருக்கு. பிரதி மருந்தீஸ்வரர் கோயிலுக்கு எதிர்ல உள்ள குளம் பல ஏக்கர் பரப்பளவு கொண்டது. அதோட ஒரு பகுதியில கல்யாண மண்டபம் கட்டப்பட்டுக்கிட்டு இருக்கு. அதுல இன்னும் பல ஆக்கிரமிப்புகள் இருக்கு. நகராட்சி குளத்துல, இரும்புக்கடை குடோன் இயங்கிக்கிட்டு இருக்கு. பட்டறைப் பகுதியில உள்ள நகராட்சி குட்டையை ஆக்கிரமிச்சு, ஒரு தனியார் மருத்துவமனையே கட்டப்பட்டிருக்கு. இதுமாதிரி இன்னும் பல குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டடங்களா மாறிக்கிடக்கு.

வழக்கறிஞர் அய்யப்பன்

தேனிக்குளம், வெட்டுக்குளம், ராமர்குளம், தாளான் குளத்தோட நீர்வழிப்பாதைகள்லயும் ஏகப்பட்ட ஆக்கிரமிப்புகள். இந்தக் குளங்கள்லதான் மருத்துவமனை, அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்களோட கழிவுகள் விடப்படுது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, இங்கயிருந்த குளங்களை பழைய இயல்பான நிலைக்கு மீட்டெடுத்தால்தான், கனமழை காலங்கள்ல் திருத்துறைப்பூண்டி மக்கள் நிம்மதியா வாழ முடியும். இந்த குளங்கள்ல தண்ணீரைச் சேமிச்சு, கோடைக்காலங்கள்ல மக்கள் பயன்படுத்தவும் உதவியா இருக்கும். இதை வலியுறுத்திதான் 2018-ம் வருஷம் சென்னை உயர் நீதிமன்றத்துல வழக்கு போட்டேன். எனக்கு ஏகப்பட்ட கொலை மிரட்டல்கள். ஆனாலும், நான் இந்த வழக்குல உறுதியா இருந்துகிட்டு இருக்கேன்.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, 13 குளங்கள்ல உள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்பான ஆவணங்களை வருவாய்த் துறையினர் நீதிமன்றத்துல தாக்கல் செஞ்சாங்க. எந்தெந்த சர்வே நம்பர்கள்ல என்னென்ன ஆக்கிரமிப்புகள் இருக்குறதை உறுதிப்படுத்தி, பிரமாணப் பத்திரமும் தாக்கல் செஞ்சிருக்காங்க. ஆனால், கணக்கெடுக்க வேண்டிய குளங்கள் நிறைய மிச்சமிருக்கு. இந்த நிலையிலதான், ஜூன் 7-ம் தேதிக்குள் மற்ற குளங்களையும் ஆய்வு செஞ்சு அறிக்கை தாக்கல் செய்யணும்னு வருவாய்த்துறையினருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கு. இது மிகவும் மகிழ்ச்சிக்குரிய உத்தரவு. கண்டிப்பாக மிக விரைவில் நல்லது நடக்கும்’’ என நம்பிக்கை தெரிவித்தார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/IZrjBm5

Post a Comment

0 Comments