திருமணம் தாண்டிய உறவு... 5 மாதங்களுக்கு முன் காணாமல் போன தொழிலாளி - நண்பனே கொலை செய்தது அம்பலம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது களமருதூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த பாண்டியன்(43) என்பவர், திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார். கடந்த 5 மாதங்களுக்கு முன், வெளியில் சென்று வருவதாக வீட்டில் கூறி விட்டு வந்த இவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததினால், சந்தேகமடைந்த பாண்டியனின் சகோதரர் குமார், திருநாவலூர் காவல் நிலையத்தில் அண்ணன் காணாமல் போனது குறித்து புகார் அளித்துள்ளார்.

திருநாவலூர் காவல் நிலையம்

இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பாண்டியனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்காக, பாண்டியனின் நண்பர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த பாண்டியனின் நண்பர் வேல்முருகன்(40) என்பவர் திடீரென மாயமாகியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர், வேல்முருகனை தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில், பெங்களூருவில் வேல்முருகன் இருப்பதாக கிடைத்த தகவலின்படி, அவரை மடக்கி பிடித்த காவல்துறையினர், காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், வேல்முருகனே பாண்டியனை கொலை செய்தது தெரிய வந்துள்ளது. கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து வேல்முருகனிடம் காவல்துறையினர் விசாரித்தபோது, "எனது மனைவியுடன் பாண்டியனுக்கு திருமணம் தாண்டிய உறவு இருப்பது எனக்கு தெரிய வந்ததையடுத்து, பாண்டியனை கண்டித்தேன். ஆனால் அவர் கேட்பதாக தெரியவில்லை. அதனால் எனது சொந்த நிலத்திற்கு அவரை அழைத்துச் சென்று, மனைவியுடனான உறவை கைவிடும்படி வலியுறுத்தினேன். அப்போதும் அவர் கேட்கவில்லை. இதனால் கோபம் கொண்ட நான், அவரை குத்தி கொலை செய்தேன்.

தோண்டி எடுக்கப்பட்ட உடல்

பின், பாண்டியனின் உடலை சாக்குமூட்டையில் கட்டி குழிதோண்டி புதைத்து விட்டேன். பின்னர் ஏதும் தெரியாதது போல பெங்களூருவில் வேலை செய்தேன்" எனும் திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, பாண்டியன் புதைக்கப்பட்ட இடத்தை வேல்முருகன் அடையாளம் காட்டியதை அடுத்து, தடயவியல் துறை நிபுணர், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் அங்கு தோண்டிப் பார்த்தபோது எலும்புக்கூடு ஒன்று இருப்பது கண்டறியப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. அதனை உரிய பரிசோதனை செய்து, மாதிரிகள் எடுக்கப்பட்ட பின் மீண்டும் அதே இடத்தில் புதைக்கப்பட்டுள்ளது. மேலும், வேல்முருகன் மீது வழக்கு பதிந்த காவல்துறையினர், கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம், உளுந்தூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



from Latest News https://ift.tt/0RVG3FS

Post a Comment

0 Comments