பஞ்சாப்பைத் தொடர்ந்து குஜராத்... சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் ஆம் ஆத்மி!

ஆம் ஆத்மி கட்சி நாட்டில் படிப்படியாக வளர்ந்து வருவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள். டெல்லியைத் தொடர்ந்து தற்போது பஞ்சாப்பிலும் ஆட்சியைப் பிடித்துள்ளது அந்தக் கட்சி. காங்கிரஸ் கட்சியின் ஊழல், குடும்ப ஆட்சி, எமர்ஜென்சி ஆகிய மூன்றை மட்டுமே மையமாக வைத்து பா.ஜ.க பிரசாரம் செய்து வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சி `ஊழலற்ற ஆட்சி' என்ற புதிய பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பும் கிடைக்கத் தொடங்கியிருக்கிறது. அடுத்த ஆண்டு குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலில் கவனம் செலுத்த ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது. அதனால், குஜராத் தேர்தலுக்கான வேலைகளில் அந்தக் கட்சி இப்போதே மும்முரமாகி விட்டது.

பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான், டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் ஆகியோர் இரண்டு நாள் பயணமாக குஜராத்திற்குச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் நேற்றிரவே அகமதாபாத் வந்துவிட்ட நிலையில், இன்று சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்று அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு `ரோடு ஷோ' நடத்துகின்றனர். திரங்கா யாத்ரா என்று பெயரிடப்பட்டுள்ள ரோடு ஷோவுக்கு ஆம் ஆத்மி நிர்வாகிகள் பிரமாண்ட ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

அரவிந்த் கெஜ்ரிவால்

ஞாயிற்றுக்கிழமை சுவாமி நாராயண் மந்திருக்கு செல்லவும் இருவரும் திட்டமிட்டுள்ளனர். டெல்லியில் கெஜ்ரிவால் இல்லம் தாக்கப்பட்டதால் குஜராத் பயணத்தின்போது அவருக்கு அதிக பாதுகாப்பு கொடுக்கும்படி போலீஸாரிடம் ஆம் ஆத்மி கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

பக்வந்த் மான்

குஜராத்தில் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் 182 இடங்களிலும் போட்டியிடுவோம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஆண்டே அறிவித்திருந்தார். தேர்தலுக்காக ஏற்கெனவே பிரதமர் நரேந்திர மோடி குஜராத்துக்கு வந்துவிட்டுச் சென்றுள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியும் தேர்தல் களத்தில் இறங்கியிருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியிலிருந்து எந்த வித சத்தத்தையும் காணவில்லை. ஆம் ஆத்மி கட்சி கடந்த 2017-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 29 தொகுதிகளில் போட்டியிட்டு ஒன்றில் கூட வெற்றி பெறமுடியவில்லை. ஆனால் குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி கணிசமான இடங்களில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.



from Latest News https://ift.tt/gPspBXS

Post a Comment

0 Comments