தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ளது ஆதிச்சநல்லூர். உலக நாகரிகம் தோன்றிய முதல் இடம் ஆதிச்சந்நல்லூர்தான் எனப் பல அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இங்கு முதன்முதலாக கடந்த 1876-ல் அகழாய்வு நடந்துள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு மத்திய தொல்லியல்துறை சார்பில் இங்கு நடத்தப்பட்ட அகழாய்வில் 169 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த அகழாய்வின் முக்கியத்துவம் குறித்து நீதிமன்றத்தில் விளக்கப்பட்ட பிறகே, அகழாய்வுப் பகுதியாக அடையாளம் காணப்பட்ட பகுதியைச் சுற்றிலும் கம்பிவேலி போடப்பட்டது.
அகழாய்வாளர்கள், தொல்லியல் ஆர்வலர்களின் மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு இதன் மாதிரி ஆய்வறிக்கையை மட்டும் சமர்ப்பித்தது மத்திய தொல்லியல்துறை. தமிழகத் தொல்லியல்துறையின் சார்பில் கடந்த 2020-ம் ஆண்டில் அகழாய்வுப் பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதற்கிடையில், கடந்த 2019-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட மத்திய பட்ஜெட்டில் "ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும்" என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.
இதையடுத்து 160 ஒன்றிய நினைவுச் சின்னங்கள், மத்திய மற்றும் தெற்கு மண்டலத்தில் உள்ள 21 தொல்லியல் தளங்களை உள்ளடக்கி திருச்சி மண்டலம் உருவாக்கப்பட்டது. திருச்சி மண்டல மத்திய தொல்லியல்துறை கண்காணிப்பாளரும், ஆதிச்சநல்லூர் அகழாய்வு இயக்குநருமான முனைவர்.அருண்ராஜ் தலைமையில் அகழாய்வுப் பணிகள் கடந்த அக்டோபர் 10-ம் தேதி முதல் தற்போது வரை நடந்து வருகிறது. இந்த அகழாய்விற்காக ஆதிச்சநல்லூர் பரம்புப் பகுதியில் 9 இடங்களில், 32 குழிகள் தோண்டப்பட்டுள்ளன.
ஏற்கெனவே பழைமையான 60-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், குடுவைகள், சிறுசிறு மண் பானைகள், இரும்புப்பொருள்கள் ஆகியவையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை, 3,000 ஆண்டு முதல் 2,500 ஆண்டுகள் பழைமையானதாகக் கூறப்பட்டது. சங்கக் காலத்தில் மக்கள் வாழ்ந்ததற்க்கான வாழ்விடப் பகுதிகள், ஆங்கிலேயர் காலத்திலும் இங்கு மக்கள் வாழ்ந்தததை உறுதிபடுத்தும் சுண்ணாம்புத்தளம் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த நிலையில் அகழாய்வுப் பணிகளைப் பார்வையிட மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல கண்காணிப்பாளர் முனைவர்.அருண்ராஜ், ஆதிச்சநல்லூருக்கு வருகை தந்தார். அகழாய்வுப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வாளர்களிடம் நடந்து வரும் ஆய்வுகள் குறித்து கேட்டறிந்தார்.
அகழாய்வுப் பணிகள் குறித்து அருண்ராஜிடம் பேசினோம், ”ஆதிச்சநல்லூரில் இதுவரை கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த அகழாய்வுப் பணியில் முதல் முறையாக சங்கக் காலத்தைச் சேர்ந்த பாண்டிய மன்னர்களின் இரண்டு நாணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதுவரை ஆதிச்சநல்லூரில் நடந்த அகழாய்வில் முதல் முறையாக இந்த நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நாணயத்தில் ஒரு தொட்டியில் கடல் ஆமைகளின் உருவம், மரம், யானை, மீனின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த நாணயங்கள், ஆதிச்சநல்லூரில் சங்கக் காலத்தில் மக்கள் வாழ்ந்ததையும் கடல் சார் வாணிபம் நடந்ததையும் உறுதிப்படுத்தும் விதமாக உள்ளது” என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/gCm3oEe
0 Comments