தஞ்சாவூர் விபத்து: ``முதல்வரய்யா என் ஒத்த புள்ளய பறிக்கொடுத்துட்டேன்” - கதறிய தாய்; தேற்றிய ஸ்டாலின்

தஞ்சாவூர் அருகே உள்ள களிமேடு தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர். முதலமைச்சர் ஸ்டாலின் களிமேடு கிராமத்திற்கு நேரில் சென்றதுடன் உயிரிழந்த ஒவ்வொருவரின் வீட்டுக்கும் சென்று அவர்களின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி ஆறுதல் கூறியதுடன் இந்த துயரத்தை சொல்வதற்கு வார்த்தைகளே என கண்கள் கலங்கினார்.

முதலமைச்சர் ஸ்டாலின்

தஞ்சாவூர் அருகே உள்ள களிமேடு கிராமத்தில் அமைந்துள்ள திருநாவுக்கரசர் கோயிலில் 94வது குரு பூஜை விழா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் அதிகாலை மூன்று அளவில் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது தேரின் மேல் பகுதி அவ்வழியே சென்ற உயர் மின் அழுத்த கம்பியில் உயசியதில் மின் விபத்து ஏற்பட்டது. இதில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, மகன் மற்றும் மூன்று சிறுவர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.

பெரும் துயரத்தை ஏற்படுத்திய தேர் விபத்து தமிழகம் முழுவதையும் உலுக்கியது. இதனை தொடர்ந்து சட்டசபையில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியதுடன் ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். பின்னர் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தவர், சாலை வழியாக திருச்சி சென்று, பின் தஞ்சாவூர் களிமேடு கிராமத்துக்கு மாலை 4 மணிக்கு சென்றார்.

தேர் விபத்து

தஞ்சாவூர் கிளம்பியதுமே அதிகாரிகளிடம், `உயிரிழந்தவர்களின் ஒவ்வொரு வீட்டுக்கும் நேரில் சென்று ஆறுதல் கூற வேண்டும். மகிழ்ச்சியாக தொடங்கிய கோயில் விழா பலரையும் கலங்க வைத்து விட்டது. வீட்டில் ஒருவரை இழந்து விட்டு தவிக்கும் குடும்பத்துக்கு நேரில் சென்று அவர்களது துயரத்தில் பங்கெடுக்க வேண்டும். அதற்கான ஏற்பாட்டை செய்யுங்க’ என சொல்லிவிட்டே கிளம்பியிருக்கிறார்.

அதன்படி களிமேடு கிராமத்தில் உயிரிழந்தவர்களின் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அப்போது மகனை இழந்த தாய் ஒருவர், ``முதல்வரய்யா, என் ஒத்த புள்ளைய பறிக்கொடுத்துட்டேனு’ பெரும் குரலெடுத்து கதறினார். கண்கள் கலங்கிய நிலையில் அந்த தாயை ஸ்டாலின் தேற்றி ஆறுதல் கூறினார்.

தேரை பார்வையிடும் முதல்வர் ஸ்டாலின்

இதையடுத்து உயிரிழந்த குடும்பத்தினருக்கு சட்டசபையில் அறிவித்தபடி ரூ.5 லட்சத்திற்கான நிவாரண உதவி தொகையை வழங்கினார். மேலும் தி.மு.க., சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ. 2 லட்சத்தையும் வழங்கினார். அதன் பின்னர் சம்பவ இடத்துக்கு சென்று தீ விபத்தில் எரிந்து சேதம் அடைந்த தேரினை பார்வையிட்டதுடன் சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதையடுத்து மருத்துவகல்லுாரி மருத்துவமனையில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் ஒவ்வொருவரையும் சந்தித்து, `உயர் தர சிகிச்சை கொடுக்க உத்தரவிட்டிருக்கேன். கவலைபடாம இருங்க” என ஆறுதல் கூறினார்.

பின்னர் அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ. 1 லட்சம், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000, தி.மு.க.,சார்பில் 25,000 நிவாரண உதவியினையினை வழங்கினார். இதனை தொடர்ந்து ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது, ``இச்சம்பவம் தாங்க முடியாத துயரத்தை அளித்துள்ளது. அதனை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. இச்செய்தியை கேள்விப்பட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,கள், அதிகாரிகள், அரசு அலுவலர்கள் என அனைவருக்கும் உத்தரவிடப்பட்டது.

இறந்தவர்களின் உடல்கள்

தொடர்ந்து, சட்டசபையில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து அரசு சார்பில் ஆறுதல் கூறினேன். தஞ்சாவூர் மண்ணின் மைந்தன் என்கிற முறையில் நான், அவர்களின் துயரத்தில் பங்கெடுத்துள்ளேன்.

இந்த விபத்து குறித்த சரியான காரணத்தை அறிய வேண்டும் என்பதற்காகவும், வருங்காலத்தில் இது போன்ற விபத்துகள் நடக்காமல் இருக்கவும் என்ன வழிமுறைகள் உள்ளது என்பதை ஆய்வு செய்து அறிக்கை வழங்குவதற்காக, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

சோகத்தில் குடும்பத்தினர்

இச்சூழலை அரசியலாக்க வேண்டும் என சிலர் நினைக்கின்றனர். அதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை. இதில் அரசியல் பார்க்க கூடாது என்பது தான் என்னுடையே எண்ணம். போற்றுவார், துாற்றுவார் பற்றி நான் கவலைப்படுவது கிடையாது. மக்களுக்கு துயரம் ஏற்பாடமல் காக்கவும், அதையும் மீறி இது போன்ற துயரங்கள் ஏற்படும் போது மக்களோடு இருக்க வேண்டும் என்பது தான் அரசின் இலக்கு. அதை நோக்கியே பயணிப்போம். விசாரணைக்கு பிறகு முழுமையான தகவல் அளிக்கப்படும். விபத்து குறித்து அறநிலையத்துறை, மின்துறை அமைச்சர்கள் ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/FPaQt2i

Post a Comment

0 Comments