சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு 3 மகள்கள் இருக்கின்றனர். அந்த தம்பதியின் இரண்டாவது மகளுக்கு 13 வயதாகிறது, பள்ளியொன்றில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமியுடன் படிக்கும் மாணவர்கள் சிலர், அவர் வீட்டுக்கு வந்து படிப்பதை வாடிக்கையாக வைத்திருந்திருக்கின்றனர்.
அந்த சிறுமியின் தாய் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், அண்மையில் சிறுமியின் வீட்டுக்கு அவர் பெற்றோர் இல்லாத சமயத்தில் சென்ற 4 பள்ளி மாணவர்கள், வீட்டுக்குள் சென்று கதவை தாழ்பாளிட்டிருக்கின்றனர். பின்னர், அந்த சிறுமியை கட்டிப்போட்டு 4 சிறுவர்களும் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கின்றனர். அவர்களின் செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமி, கத்தி கூச்சலிட முயன்றிருக்கிறார். அப்போது, அந்த சிறுவர்கள் வெளியில் சொன்னால் கொன்று விடுவோம் என மிரட்டியிருக்கின்றனர். அதனால், சிறுமி பயத்தில் அமைதி காத்திருக்கிறார். பின்னர், அந்த 4 பேரும் அங்கிருந்து வெளியேறி சென்றிருக்கின்றனர்.
இந்தச் சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி, இது குறித்து தன் தங்கையிடம் முதலில் தெரிவித்திருக்கிறார். அவர் தங்கை, தாயிடம் கூறவே, கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் ராயபுரம் மகளிர் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், சிறுவர்கள் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
அதையடுத்து, 13 வயது சிறுமியிடம் கூட்டுப் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 4 சிறுவர்களை போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறார் கூர்நோக்குப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
from Latest News https://ift.tt/DvEwTso
0 Comments