``சீமான் வீட்டு மின் இணைப்பு எண்ணை 2 முறை கேட்டேன்; இன்னும் தரவில்லை" - அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூர் மாநகராட்சி அமைந்துள்ள திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில், செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு, பல்வேறு துறைகள் சார்பில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த கண்காட்சி அரங்கை, தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பேட்டியளிக்கும் செந்தில் பாலாஜி

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, "தமிழ்நாட்டில் மின்வெட்டு, மின்பற்றாக்குறை என்பது அறவே இல்லை. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 6 நாள்களுக்கு மேல் தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளது. அதனால், தமிழ்நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை தற்போது இல்லை. இன்னும் இரண்டு நாள்களுக்குள், 4,80,000 டன் நிலக்கரி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின் விநியோகத்தில் எந்த பாதிப்பும் இல்லை. மற்ற மாநிலங்களுக்கு உபரி மின்சாரம் கொடுக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. மின்னகம் மின் நுகர்வோர் மையத்திற்கு இதுவரை 8 லட்சம் புகார்கள் வந்துள்ளன. அவற்றில், 99 சதவிகிதப் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

தமிழக முதல்வரின் நடவடிக்கையால், தமிழகம் முழுவதும் சீரான மின் விநியோகம் கொடுக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து உபரிநீர் திறந்து விட்ட பிறகு, மின் உற்பத்தி தொடங்கப்படும். தமிழகத்தில் காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிக அளவில் தற்போது கிடைத்து வருகிறது. இதன் காரணமாக, செலவை குறைக்கும் வகையில், அனல் மின் நிலையங்கள் உள்ளிட்ட மற்ற வகைகளில் கிடைக்கப்பெறும் மின்உற்பத்தி அவ்வப்போது நிறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், சிலர் இந்த விசயத்தில் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள்.

சீமான்

நாம் தமிழர் கட்சி சீமான், தனது வீட்டில் மின் தடை ஏற்பட்டதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதனால், அவர் வீட்டு மின் இணைப்பு எண் குறித்து இரண்டு முறை கேட்டிருந்தேன். ஆனால், அவர் இதுவரை பதில் அளிக்கவில்லை. தனது வீட்டு மின் இணைப்பு எண்ணையும் அவர் இதுவரை வழங்கவில்லை. தனது வீட்டு மின் இணைப்பு எண் என்ன என்று சீமான் தெரிவித்தால், சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கேட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது, தமிழ்நாட்டில் மின் உற்பத்தி 4,320 மெகாவாட். அதுவே,. அடுத்த 5 ஆண்டுகளுக்குள் தமிழகத்தில் சொந்த மின் உற்பத்தி 6,220 மெகாவாட்டாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.



from Latest News https://ift.tt/4vrZgm7

Post a Comment

0 Comments