கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்திபெற்ற தலம் திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவபெருமாள் ஆலயம். 108 வைணவ திவ்ய தேசங்களில் 73-வது தலம்; 13 மலைநாட்டு தலங்களில் ஒன்று இது. நம்மாழ்வார் மங்காளாசாஸனம் செய்துள்ளார். சுமார் 400 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகத்துக்குத் தயாராகிறது இந்தக் கோயில். இதையொட்டி பக்தர்களிடையே பெரும் சர்ச்சையும் எழுந்துள்ளது.
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலுக்கும் முற்பட்ட கோயில்!
திருவட்டாறு ஆதிகேசவபெருமாள், பத்மநாபபுரத்தைத் தலைமையகமாகக் கொண்டு ஆண்ட திருவிதாங்கூர் மன்னர்களின் குலதெய்வம். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரை திருவனந்தபுரத்துக்கு மாற்றியபிறகு, திருவட்டாறு பெருமாள் கோயில் வடிவமைப்பிலேயே திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமி கோயிலை அந்த மன்னர்கள் நிர்மாணித்தார்களாம். ஆக, திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலுக்கும் முற்பட்டது திருவட்டாறு ஆலயம். இரண்டு ஆலயங்களிலுமே பெருமாள் அனந்த சயனத்தில் அருள்கிறார்.
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி 18 அடி நீளத்தில் பள்ளி கொண்டிருக்கிறார் எனில், திருவட்டாறு பெருமாளின் பள்ளி கொண்ட கோலம் சுமார் 22 அடி நீளமாம்! இவரின் இடது கை ஆதிசேஷன் மீது இருக்க, வலது கரத்தால் யோக முத்திரை காட்டிய படி மேற்குநோக்கி காட்சிதருகிறார். கேசன் எனும் அசுரனை அடக்கியவர் ஆதலால், இந்த சுவாமிக்கு ஆதிகேசவர் என்று திருநாமம். சூரிய-சந்திரருக்கு அருளிய பெருமாள் இவர். ஆகவே, கருவறையில் சூரிய-சந்திரரும் காட்சி தருகிறார்கள். இந்தக் கோயில் மூலவரைப் பிரதிஷ்டை செய்துவிட்டே பரசுராமர் தன் அவதாரத்தை நிறைவுசெய்தார் என்கின்றனர்.
பக்தர்களை உலுக்கிய கொள்ளைச் சம்பவம்!
இவ்வளவு சிறப்புகள் மிக்க இந்த ஆலயம், சுமார் 400 ஆண்டு களுக்குப் பிறகு, இப்போது கும்பாபிஷேகத்துக்குத் தயாராகிறது. வரும் ஜூலை 6-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில்தான் கும்பாபிஷேகம் தொடர்பாக பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. "ஸ்வாமிக்குச் சாத்தப்பட வேண்டிய தங்க அங்கியைச் சாத்தாமல் கும்பாபிஷேகம் நடத்துவது கூடாது... அது பரிபூரணமாக இருக்காது’’ என்கிறார்கள் ஆன்மிக ஆர்வலர்களும் பக்தர்களும். தங்க அங்கியைச் சாத்துவதில் என்னதான் பிரச்னை?
புகழ்பெற்ற இந்தக் கோயிலின் சிறப்புக்கும் மேன்மைக்கும் கரும் புள்ளியாய் அமைந்தது ஒரு கொள்ளைச் சம்பவம். ஆம்! 1974-ம் ஆண்டு முதல் 1984-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஆதி கேசவர் மீது சாத்தப்பட்டிருந்த தங்க அங்கி மற்றும் நகைகள், தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக திருடி விற்கப்பட்டதாம். ஆலயப் பணியில் இருந்த நம்பிகள் சிலரே இந்தக் காரியத்தில் ஈடுபட்டார்கள் என்பதுதான் காலத்தின் கொடுமை!
34 பேர் குற்றவாளிகள்!
சுமார் 8 கிலோ தங்கத்தாலான அங்கியின் பெரும்பகுதி இவ்வாறு பெயர்த்து விற்கப்பட்டதாம். பின்னர் இந்த விஷயம் கண்டறியப்பட்டு, இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்தப்பட்டு நான்கரை கிலோ தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. 27 ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 34 பேரில், இறந்துபோன 11 பேர் தவிர மீதமுள்ள 23 பேருக்குச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. நீதிமன்றத்தில் இருந்த நகைகள் தேவசம்போர்டு வசம் ஒப்படைக்கப்பட்டன.
இந்த நிலையில், இப்போது கும்பாபிஷேக தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருவட்டாறு ஆதிகேசவ பெருமாளுக்கு பத்து கோடி ரூபாய் மதிப்பில் தங்க அங்கி தயாரிக்கப்படும் என்றும், அதைத் தயாரிக்க ஓரிரு வருடங்கள் ஆகும் எனவும் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, "கடுகு சர்க்கரை யோகத்தில் அமைந்துள்ள மூலவர் அதிகேசவபெருமாளுக்கு, முன்பு இருந்ததுபோல் தங்க அங்கியை அணிவித்துதான் கும்பாபிஷேகம் நடத்தவேண்டும். தங்க அங்கியே பெருமாளின் வஸ்திரம். வஸ்திரம் சாத்திதான் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்’’ என்ற கோரிக்கை பக்தர்களிடையே வலுவாக எழுந்துள்ளது.
பக்தர்களின் ஆதங்கமும் கோரிக்கையும்!
இதுதொடர்பாக பக்தர்கள் தரப்பில் சிலர் ஆதங்கத்துடன் தங்க ளின் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
"கோயிலுக்கும், இறைவனுக்கும் குறையேதும் இல்லாதபடி நிகழக்கூடியதுதான் பூரண கும்பாபிஷேகம். திருவட்டாறு கோயிலில், திருடுபோய் மீண்டும் கிடைத்த நகைகளைத் தவிர கோயிலில் இருக்கும் மற்ற ஆபரணங்களையும் ஆதிகேசவருக்குச் சாத்தவேண்டும். சிவபிரான் அபிஷேகப் பிரியர் எனில், பெருமாள் அலங்கார பிரியர். அந்த அலங்காரத்தில் குறைவைக்கலாமா? மட்டுமன்றி திருவனந்தபுரம் பத்மநாபசுவாமிக்கும், திருவட்டாறு ஆதிகேசவருக்கும் தங்க அங்கிதான் ஆடை. ஆக, அங்கி சாத்தாமல் கும்பாபிஷேகம் நடத்துவது முறையல்ல!’’ என்கிறார் ஆனையடி தங்கப்பன்.
மாற்றப்பட்டனவா பூஜை முறைகள்?!
இதுமட்டுமன்றி கோயிலின் அன்றாட பூஜை முறைகளிலும் பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று வலியுறுத்து கிறார்கள் பக்தர்கள்.
“இந்த ஆலயத்தில் 1976 முதல், அறநிலையத்துறை தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப பூஜைமுறைகளை மாற்றிவிட்டார்கள். திருவட்டாறு ஆதிகேசவர் 16,008 சாளக்கிராமக் கற்களால் ஆனவர். ஒரு சாளக்ராமம் ஒரு கோயிலுக்குச் சமம் என்பார்கள். ஒரு கோயிலுக்கு ஒருபிடி அரிசி நைவேத்தியம் என்பது கணக்கு. ஆக, இந்தப் பெருமாளுக்கு 16,008 பிடி அரிசியில் நைவேத்தியம் பண்ணி சமர்பிக்கவேண்டும். இந்த அடிப்படையில் முற்காலத்தில் நூறூ கிலோவுக்கும் மேலாக அரிசியை நைவேத்தியத்துக்குப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
அதுக்காகவே கோயிலின் பின்பக்கம் நெல்பிரை இருந்துருக்கு. அதிலிருந்து நெல் எடுத்து அரிசியாக்கி பொங்கல் நைவேத்தியம் செய்து கோயிலின் ஒற்றைக்கால் மண்டபத்தில் சுவாமிக்குப் படைப்பாங்க. அந்த நைவேத்தியத்தைக் 'கட்டிச்சோறு’ன்னு கோயில் ஊழியர்களுக்குச் சம்பளமாவும், பக்தர்களுக்கு அன்னதான மாகவும் கொடுத்ததா வரலாறு இருக்கு. இந்த நடைமுறை இப்போது இல்லை. திருவனந்தபுரம் கோயிலில் இந்த நடைமுறை இன்றும் அப்படியே நடைபெறுகிறது.
இந்தக் கோயிலின் நடைமுறைகளே திருவனந்தபுரம் கோயிலிலும் நிர்ணயிக்கப்பட்டன. இப்போதும் பின்பற்றுகிறார்கள். ஆக, திருவனந்தபுரம் கோயிலுக்குச் சென்று பார்த்து, அங்கேயுள்ள நடைமுறைகளை இங்கேயும் கடைப்பிடிக்கணும். இது எங்க விருப்பம் மட்டுமல்ல, பிரசனத்துல தெய்வ வாக்காகவும் அமைந்த கட்டளை. இப்படி முறைப்படி விதிகளைச் சரிசெய்தால், இந்தக் கோயில் திருப்பதி போன்று மாறும்!’’ என்கிறார்கள் பக்தர்கள் தரப்பில்.
'அபூர்வ திருமேனி... தண்ணீர் வியர்வை படக்கூடாது!’
மணலிக்கரை மடத்தைச் சேர்ந்த கோயில் தந்திரி சஜித் சங்கர நாராயணன் போற்றியிடம் பேசினோம். "இந்தக் கோயிலில் கவனிக்கவேண்டிய பூஜா விதிகள் பல இருக்கு. ஆதிகேசவர் விக்கிரகத் திருமேனி கடுசர்க்கரை யோகத்தில ஆனது. அதில் தண்ணீர், வியர்வை எல்லாம் படவே கூடாது. மிகக் கவனமாக பூஜை பண்ணனும். அபிஷேகம் எல்லாம் அதற்கென உள்ள விக்கிரகத்துக்குத்தான். இதுபோன்ற மூலவர் திருமேனியை நம்பி, தந்திரி ஆகியோர்தான் தொடுவாங்க. இந்தக் கோயிலில் நம்பி எனும் ஸ்தானம் உண்டு. பூஜா அனுபவத்தின்படி இரண்டு நம்பிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
அவர்கள் பூஜை செய்யும் ஆறுமாத காலமும் குடும்பத் தொடர்புகளை விடுத்து, கோயிலுக்கு கிழக்கில் உள்ள நம்பி மடத்தில் தங்கியிருப்பாங்க. இப்படி ஒரு நம்பி ஆறு மாசம் இப்படி தங்கியிருந்து பிரம்மசார்யம் கடைப்பிடிச்சு பூஜைகள் செய்வார். பிறகு அவர் கிரகஸ்தனாக வீட்டுக்குச் சென்றதும் மற்றொருவர் வருவார். இப்ப நம்பி ஸ்தானத்தை மாற்றிவிட்டார்கள்.
பூஜை செய்வோரை மேல் சாந்தி ஆக்கிட்டாங்க. மேல்சாந்தி தினமும் வீட்டுக்குப் போய் வருவார்கள். கேரள பாரம்பர்ய முறையில் இருந்த கோயில் பூஜைகளை மொத்தமாக மாற்றிவிட்டார்கள். பழையபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்பதே பிரச்ன வாக்கு. இப்ப 400 வருஷத்துக்குப் பிறகு கும்பாபி ஷேகம் நடக்கப்போகுது. எல்லாமும் பழைய பாரம்பர்ய முறைப்படி மாறினால் நன்றாக இருக்கும்’’ என்கிறார் சஜித் சங்கர நாராயணன் போற்றி.
என்ன சொல்கிறார் இணை ஆணையர்?
இந்தப் பிரச்னைகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகரிடம் பேசினோம்.
“நம்பிகள்தான் சாமியின் அங்கியை சுரண்டி எடுத்துக்கொண்டு போனது. இப்போது மேல்சாந்தி நல்லபடியாக பூஜை செய்து வருகிறார். திருடுபோய் மீட்கப்பட்ட நகைகளை சுவாமிக்கு சாத்த முடியாது. அதேநேரம் திருடுபோகாத மற்ற ஆபரணங்களை நிச்சயம் சாத்துவோம். தங்க அங்கியைப் பொறுத்தவரையிலும், புதிதாகச் செய்யவேண்டும். வெகுநாள்களாக நடத்தப்படாத கும்பாபிஷேகத்தை முதலில் சிறப்பாக நடத்துவோம். தொடர்ந்து புதிய அங்கி செய்து சுவாமிக்கு சார்த்த அரசு முடிவு செய்துள்ளது.
இதுவரையிலும் ஏதேதோ தடைகள், சிலரின் இடையூறுகள் காரணமாக 400 வருடம் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. கடவுள் அருளால் இப்போது அதற்கான நேரம் வந்துள்ளது. ஆகவே, எல்லோரும் ஒன்றிணைந்து கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற ஒத்துழைக்கவேண்டும்’’ என்கிறார் இணை ஆணையர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/uPTdr5x
0 Comments